கொசு புராணம்: சில சுவாரசியத் தகவல்கள்!

கொசு புராணம்: சில சுவாரசியத் தகவல்கள்!

கொசுவைப் பற்றிய புரிதல் நமக்கு மிகவும் குறைவு. அதைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் அதிகம் மெனக்கெடுவதில்லை. கடித்த பிறகு அதை உணர்ந்து சபிப்பதோடு - கையோடு அடித்து ‘காலி’ பண்ணுவதோடு சரி. நாம் மட்டுமல்ல உள்ளாட்சி மன்றங்கள், சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்கள் என்று எல்லாவற்றிலும் இடம்பெறும் மக்கள் பிரதிநிதிகளும் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. கொசுவைப் பற்றி ‘கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா’ என்ன சொல்கிறது என்று திறந்து பார்த்தால் வியப்பாக இருந்தது. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றிய மூத்த குடிகளுடன் கொசுக்களும் தோன்றியிருக்குமோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

கொசு பற்றிய பதிவை ஈழத்தவர்கள்தான் தயாரித்திருக்கிறார்கள். அற்புதமான தமிழ் நடை, சொல்லாட்சி. தமிழில் அறிவியல் நூல்களை எளிமையாகவும் சுவாரசியமாகவும் எழுத முடியும் என்பதற்கு அவர்கள்தான் முன்னோடி. யாழ்ப்பாணத்தில் தமிழிலேயே மருத்துவக் கல்வி நூல்கள் எழுதப்பட்டிருந்தன. அந்தப் பதிவிலிருந்து சாரம்:

கொசுக்கள் கியூசிலிடே குடும்பத்தைச் சேர்ந்த பூச்சியினம் ஆகும். மெல்லிய உடல், ஓர் இணை இறக்கை, மூன்று இணை நீண்ட கால்கள். ஆண் கொசுக்கள் தாவரச் சாறைப் பருகும். ரத்தத்தை உறிஞ்சுவது பெண் கொசுக்களே! அதுவும் முட்டைகளை உருவாக்கப் புரதங்களைப் பெறுவதற்காகவே மனிதர்களின் ரத்தத்தைக் குடிக்கிறது. ஒரு பெண் கொசு வயிறு நிரம்ப ரத்தத்தைக் குடித்துவிட்டால் அதன் சந்ததிகளின் 25 தலைமுறைக்குத் தேவையான புரதம் கிடைத்துவிடுகிறது. நம் வீடுகளில் வாழும் கொசுக்கள் ஆயிரம் அடி தொலைவுக்குள்ளேயே நடமாடும் (வீடு அல்லது போர்ஷன் சின்னதாக இருந்தால் பக்கத்து வீட்டிலும் வாழும், அதைப் பற்றி நமக்குக் கவலை வேண்டாம்). மனிதர்கள், கால்நடைகள் உள்ள இடங்களைச் சுற்றியுள்ள நீரில் மட்டுமே முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும்.

கொசுக்களில் உப்பு நீரில் இனப்பெருக்கும் செய்யும் ஒரு வகை, கடற்கரை ஓரமுள்ள நீர்நிலைகளில் வசிக்கும். மனிதர்களையும் விலங்குகளையும் தேடி அவை 50 முதல் 75 மைல் வரைகூட பயணம் செய்யுமாம் - எல்லாம் எதற்காகப் புரதத்துக்காக! ஆண் கொசுக்கள் ஒரு வாரம் மட்டுமே உயிர் வாழக்கூடியவை. பெண் கொசுக்கள் அதிகபட்சம் ஒரு மாதம் வாழும். அதற்குள் சராசரியாக நூறு மூட்டைகளை (காந்தாரி போல) இடும். இந்த வேகத்தில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதால் ஆறே தலைமுறைகளில் அதன் சந்ததி எண்ணிக்கை 3,100 கோடியை எட்டிவிடுகிறது.

கொசுவும் வலையும்!

(கொசு தொடர்பாக தமிழக சட்டப் பேரவையில் நடந்த ஒரு விவாதம் நினைவுக்கு வருகிறது. 1937-ல் காங்கிரஸ் முதல்வராகப் பதவியேற்ற ராஜாஜி, பூரண மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் இயற்றினார். அதை எதிர்த்த எதிர்க்கட்சி உறுப்பினர், “மதறாஸ் மாகாண மக்களில் மொத்தம் எத்தனை பேர் குடிக்கிறார்கள், எவ்வளவு பேர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற புள்ளிவிவரமெல்லாம் அரசிடம் இருக்கிறதா? இவையெல்லாம் இல்லாத நிலையில் இப்படித் தடை செய்யலாமா” என்று கேட்டார். முதல்வர் ராஜாஜி எழுந்து, “வீட்டுக்கள் மொத்தம் எத்தனை கொசுக்கள் இருக்கின்றன என்று எண்ணிவிட்டா நாம் கொசுவலை கட்டிக் கொண்டு தூங்குகிறோம்?” என்று பதில் அளித்தார்).

கொசு இனம் மிகப் பழமையான உயிரினம். (ஈழத்தில் கொசுவை நுளம்பி என்று அழைக்கின்றனர்). கொசுவின் நவீன இனங்களின் வயதே 7.9 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது! கிரேசிடயஸ் யுகத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட மரப்பிசின் படிமங்களில் கொசுக்களின் உடற்கூறமைப்பை ஒத்த மாதிரிகள் கிடைத்துள்ளன. பர்மாவில் (மியான்மர்) 90 முதல் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கொசுச் சிற்றினம் வாழ்ந்திருக்கிறது. கியூலிசிடேவிலேயே 3,500-க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. அவை 43 பேரினங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அனாஃபிலினே, கியூலிசினே துணைக் குடும்பங்கள். இவற்றில் சில, நோய்களைப் பரப்புபவை. சில பிராணிகள், விலங்குகளை மட்டும் கடிப்பவை.

கொசுக்களின் வாழ்க்கைச் சுழற்சி நான்கு பருவங்களைக் கொண்டது. அவை முட்டை, குடம்பி (லார்வாப்புழுப் பருவம்), கூட்டுப்புழு, மூதியுரி. உருமாற்ற நிலைகள் சுற்றுச்சூழல் வெப்பநிலையைப் பொறுத்து 4 முதல் 30 நாட்களுக்குள் நடைபெறுகிறது. மனிதர்களின் மூச்சுக்காற்றில் இருந்தும் - வியர்வையிலிருந்து வரும் ஆக்டெனால் என்னும் வேதிப் பொருளின் மூலமாகவும் மனிதர்கள் இருக்கும் இடத்தை அறிந்து கடிக்க வருகின்றன. மனிதர்களின் ரத்தத்தை உறியும்போது ரத்தம் உறையாமல் இருக்க, வேதிப்பொருளைத் தங்களுடைய குழல்வாய் வழியாக உட்செலுத்துகின்றன.

வாழிடம்

தேங்கிய நீர்நிலைகள், வடியாத மழைநீர், திறந்தவெளி சாக்கடைகள், மூடப்படாத நீர்ப்பாத்திரங்கள், வீதிகள் தோறும் வைக்கப்படும் குப்பைத்தொட்டிகள் வழியாகக் கொசுக்கள் வாழ்ந்து பரவுகின்றன. மலேரியா, ஃபைலேரியா (யானைக்கால் வியாதி), சிக்குன் குனியா, மூளைக் காய்ச்சல், டெங்குக் காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல், சிகா வைரஸ் காய்ச்சல் மற்றும் வேறு சில வைரஸ் காய்ச்சல்களையும் கொசுக்கள் பரப்புகின்றன.

நீர்நிலைகளில் மீன்கள், பூஞ்சைகள், தட்டான் இளவுயிரிகள், பல்லிகள் இருந்தால் மீன் முட்டைகளை உண்டு அவை இனப்பெருக்கம் அடையாமல் தடுத்துவிடும்.

பைரித்ரம், பைகார்டின், யூகலிப்டஸ் எண்ணெய், டைமிதைல் தாலேட், டை மிதைல் கார்பேட் ஆகிய ரசாயனங்கள் கொசு வர்த்திகள் – விரட்டிகளில் பயன்படுத்தப்படுகின்றன. கொசு கடிப்பதால் உடனடியாக அரிப்பு, வீக்கம், தோல் சிவப்பது, ஒவ்வாமை ஆகியவை ஏற்படுகின்றன.

கொசுக்களால் வெப்பத்தைத் தாங்கி வாழ முடியும். குளிர்ச்சியில் முடியாது. எனவே குளிர்காலத்தில் அவை இடம்பெயர்கின்றன அல்லது மறைந்து வாழ்கின்றன. கொசுவின் ஆயுள் காலம் குறைவாக இருக்கலாம், ஆனால் அதன் பரம்பரை இடைவிடாமல் தொடர்கிறது.

இப்படி அனேக ஆண்டுகளாக இடைவிடாமல் வாழும் இந்தக் கொசுக்களால் சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடையாதா என்று கேட்கலாம். ஏன் இல்லாமல்? ஒரு சிலருக்கு அனேக நன்மைகள் உண்டு. (கொசுக்களால் கடிபடுகிறவர்கள் மன்னிக்கவும்).

கொசுத் தொல்லையிலிருந்து விடுபட வேண்டுமா என்று பல கொசுவர்த்தி நிறுவனங்கள் சீரியல்களுக்கு நடுவில் தினந்தோறும் விளம்பரம் செய்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றன. கொசுவை விரட்ட லிக்விட், கொசு பேட் என்று ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. கொசுக்களுக்கு எரிச்சல் ஏற்படுத்தி விரட்ட இடைவிடாமல் ரீங்கரிக்கும் மின்சாதனம் கூட வந்துவிட்டது. கொசுக்களால் இப்படி பல தொழில்கள் கோடிக்கணக்கில் வருவாயை ஈட்டித் தருகின்றன. அது மட்டுமல்லாமல் மருந்து – மாத்திரை விற்பனை அதிகரிக்கவும் கொசுக்களால் பரவும் நோய்கள் பயன்படுகின்றன!

கொசுக்களுக்குக் கண்கள் உண்டோ, பார்வை உண்டோ தெரியாது. ஆனால் நாம் செய்தித்தாள் படிக்கும்போது நம்முடைய முதுகு - கழுத்துப் பகுதிகளிலும், திரைப்படம் பார்க்கும்போதும் ரயில் – பஸ்களில் பயணிக்கும்போதும் கால்களிலும் கடித்து ரத்தத்தை உறிஞ்சுகின்றன. லேசாக உடல் அசைந்தாலே பறந்துவிடுகின்றன. ஃபேன், ஏசி ஆகியவை மின்சார வெட்டால் தடைபடும்போது அறையில் எங்கிருந்தாலும் உடனே அருகில் வந்து கடிக்கின்றன என்பதிலிருந்து கொசு பகுத்தறிவுள்ள பூச்சியினமாகவே தெரிகிறது.

தங்களுடைய ஆயுள் காலம் மிகவும் குறைவு என்றாலும் அதற்குள் நம்முடன் சேர்ந்து வாழவும் கொசுக்கள் பழகிவிடுகின்றன. பாலினம், சாதி – மதம் பாராமல் எல்லோரையும் கடிப்பதால் முற்போக்கு என்றும் சொல்லிவிடலாம். இவ்வளவு தனித் தன்மையும் சிறப்புகளும் வாய்ந்த கொசுவை இனியும் அற்பமாக நினைப்பது தவறு.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in