காக்கா கூட்டத்தைப் பாருங்க!

கற்றுக்கொள்ள நிறைய அம்சங்கள் இருக்கின்றன காகங்களிடம்
காக்கா கூட்டத்தைப் பாருங்க!

சிறு வயது முதலே நம்மை அதிகம் ஈர்க்கும் பறவை காகம்தான் என்றே சொல்லலாம். முதல் காரணம் தென்னிந்தியாவில் - குறிப்பாகத் தமிழ்நாட்டில் - காகம் இல்லாத ஊர்களே இருக்க முடியாது. காக்கைகள் எந்தப் பருவநிலை உள்ள கண்டங்களிலும் வாழும் திறன் பெற்றவை. காக்கை, காகம், காக்கா எனப் பல பெயர்களில் அந்தப் பறவையை அழைக்கிறோம்!

ஆரம்பப் பள்ளிக்கூடத்தில், படம் பார்த்து கதை சொல்லில், கட்டாயம் இடம்பெறுவது இந்தக் காக்கைதான். பாட்டி வடை சுடும்போது அதை கவ்விச் சென்று மரக் கிளையில் அமர்ந்து நரி கேட்டவுடன் பாடி வடையை இழந்த கதை அனைவருக்குமே மறக்காது. தான் இடும் முட்டைகளைத் தின்றுவிடும் பாம்பைக் கொல்ல, இளவரசி குளிக்கும்போது அவள் கழற்றிவைத்த முத்துமாலையைக் கவ்விச் சென்று பாம்பின் புற்றில் போட்டு, எதிரியை ராணியின் சேவகர்களைவிட்டு – தன் மீது கொலை கேஸ் வராமல் – திறமையாகக் கொல்வதாகக் கூட படித்திருக்கிறோம். அதெல்லாம் கதைகள். காக்கைகள் பற்றி சில சுவாரசியமான தகவல்களைத் தெரிந்துகொள்வோம்!

20 ஆண்டு ஆயுள்

மரங்களில் வாழும் காகங்கள் பொதுவாக 20 வருடங்கள் வரை உயிர்வாழக்கூடியவை. பெண் காகங்கள் மூன்று வருடங்களிலும் ஆண் காகங்கள் ஐந்து வயதிலும் பருவம் அடைகின்றன. கூடு கட்டி, முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும். இப்போதெல்லாம் காகங்கள் கட்டிடம் கட்டப் பயன்படுத்தும் பைண்டிங் வயர்களைக்கூட தேர்ந்தெடுத்து கொண்டுவந்து கூடுகளை வலுவாகக் கட்டுகின்றன. செடி – கொடி சிறிய மரக் கிளைகளைத் தன்னால் முடிந்தவரை மூக்கினால் உடைத்து அதைத் தண்ணீரில் நனைத்து வளைத்து அவை கூட்டை வட்டமாகக் கட்டும் பாணி மிகவும் நேர்த்தியானது.

கரிய நிறமுள்ள காக்கைகளில் சுமார் 40 இனங்கள் உள்ளன. அதிகமாக கருப்பாக இருப்பவற்றை நாம் அண்டங் காக்கை என்கிறோம். சாம்பல் நிறத்துடனும் காகங்கள் உண்டு. வெள்ளைக் காக்கை என்பது இல்லாத ஒன்றுக்கு உருவகமாகக் கூறப்படுகிறது. பறவைகளில் கூடுதலாக அறிவுத்திறன் உள்ளது இது. மக்கள் வாழும் இடங்களில் அதிகம் உள்ள காக்கைகள் அனைத்துண்ணிகள். தானியங்கள், புழுக்கள், விதைகள், கொட்டைகள், தவளை, நண்டு, இறந்த பிராணிகள், எலிகள் போன்றவற்றை உண்ணும். காகங்களைப் பழக்குவது எளிது. சிலர் இதை சட்டவிரோதச் செயல்களுக்குப் பயன்படுத்தியதால், சில நாடுகளில் காகங்களைச் செல்லப் பறவையாக வளர்ப்பது சட்டப்படியே தடை செய்யப்பட்டிருக்கிறது. கிளியைப் போலவே காகம் கூட பயிற்சி தந்தால் மனிதர்களைப் போலவே பேசுமாம்.

பேச்சு வழக்கில் காகம்

காகத்தோடு மக்களுடைய வாழ்க்கையும் ஒன்றியது. மாப்பிள்ளை என்ன நிறம் என்றால், ‘காக்கா போல கறுப்பு’ என்பார்கள். மூக்கு நீளமாக உள்ளவரை, ‘காக்கா மூக்கு’ என்பார்கள். கண்ணை ஒரு பக்கம் சாய்த்துப் பார்க்கிறவர்களைக் ‘காக்கா பார்வை’ பார்ப்பதாகக் கிண்டல் செய்வார்கள். மனிதர்கள் சக மனிதர்களை இப்படி உடல் சார்ந்து கேலி செய்வதற்குக் காகங்கள் எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டா!

பசை உள்ளவர்களை ஒட்டி காரியம் சாதித்துக் கொள்கிறவர்களை, ‘காக்கா பிடிப்பவன்’ என்பார்கள். ஒருவகை நரம்புக் கோளாறால் கை-கால்கள் இழுத்துக்கொண்டு வாயில் நுரை தள்ள தரையில் விழும் நோய்க்கு, ‘காக்கா வலிப்பு’ என்றே பெயர். யாருக்கும் எதுவும் தர மனமில்லாத கருமியை, ‘எச்சில் கையாலும் காக்கா ஓட்டாதவன்’ என்பார்கள். வீட்டு வாசலில் வந்து காக்கை கரைந்தால், ‘விருந்தினர்கள் வரப் போகிறார்கள்’ என்பார்கள். “உங்க சொந்தம் என்றால் நடந்து காட்டு”, “எங்க சொந்தம் என்றால் பறந்து காட்டு” என்றுகூட காக்கைக்கு வேடிக்கையாகக் கட்டளையிடுவார்கள். குளியலறைக்குள் போய் குளித்துவிட்டு உடனே வந்துவிட்டால், ‘காக்கா குளியலா?’ என்று கேலி பேசுவார்கள். “ஆறுமுகம் குடும்பமா, அது காக்கா கூட்டம் – கல்யாணம்னு ஒரு நோட்டீஸ் குடுத்தா ஒரு பட்டாளமே வந்து இறங்கிவிடும்” என்று குடும்ப ஒற்றுமையைக் கூட வேடிக்கையாக காக்கையுடன் ஒப்பிடுவார்கள். தரையில் மண்ணோடு சேர்ந்து திடீர் திடீரென மின்னும் பொருளை ‘காக்கை பொன்’ என்று அழைப்பார்கள். ‘காக்கை காலில் கட்டிவிட்டால்கூட போதும்; அவர்களுக்குத் தகவல் போய்விடும்’ என்று அண்மையில் வசிப்பவர்களைச் சுட்டிக்காட்டுவார்கள்.

காக்கைகளை பித்ருக்களின் அம்சமாகவே பார்ப்பது உலக வழக்கம். இறந்தவர்களுக்குத் திதி செய்யும் அன்று முதல் அன்னத்தை, காகத்துக்கு வைப்பது இந்துக்கள் உள்பட பல மதங்களில் இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது.  சனீஸ்வரனுடைய வாகனமாக காக்கைதான், அனேக ஆண்டுகளாகத் தொடர்கிறது. சாப்பிடுவதற்கு முன்னால் காக்கைக்குச் சோறு வைப்பதற்கு இன்னொரு காரணத்தையும் சொல்வார்கள். சாப்பாட்டில் விஷம் இருந்தால் காக்கை சாப்பிட்ட உடனே சுருண்டு விழுந்துவிடுமாம். அதைப் பார்த்து நாம் எச்சரிக்கை அடையலாம் என்பார்கள்.

கிறிஸ்தவத்திலும் காகத்துக்குச் சிறப்பிடம்

காகங்களைக் கவனித்துப் பாருங்கள் என்று கர்த்தர் கூறுவதை, லூக்கா 12.24 வசனம் சுட்டிக்காட்டுகிறது. 'காகங்களிடமிருந்து ஆவிக்குரிய காரியங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். காக்கையைப் போல கர்த்தரை நோக்கி எப்போதும் துதித்துக் கொண்டிருக்க வேண்டும். காக்கை எப்போதும் விழிப்போடு இருக்கும், அதை எளிதில் உயிருடன் பிடித்துவிட முடியாது. நாமும் ஆவிக்குரிய ஜீவியத்தில் விழிப்போடு காணப்பட வேண்டும். காகங்கள் எந்த வீட்டிலும் - இடத்திலும் சட்டென்று நுழைந்துவிடும், அச்சப்படாது. கர்த்தரிடம் விசுவாசம் இருந்தால் தைரியம் இருக்கும். காகங்களுக்கு நாம் என்னதான் உணவு கொடுத்தாலும் அது நாசியில் நுகர்ந்து பார்த்து, சரியில்லை என்று தோன்றினால் எவ்வளவு பசியிருந்தாலும் அதைச் சாப்பிடாது. கர்த்தரையே தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்கள் (சங்.40:4). காகத்தைப்போல கூடி வாழ வேண்டும், அதிகாலையிலேயே எழுந்துவிட வேண்டும், சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டும், குளித்து உடலைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், உணவு கிடைத்தால் பிறருடன் பகிர்ந்து உண்ண வேண்டும், குஞ்சுகளைப் பாதுகாப்பாக வளர்த்து உணவு ஊட்டி, பறக்கக் கற்றுத்தருவதைப்போல நாமும் நல்ல விஷயங்களைக் கற்றுத்தர வேண்டும், கழுகு தன்னைவிட பலம் வாய்ந்தது என்றாலும் தன்னுடைய எல்லைக்குள் வந்தால் காக்கை அதை விரட்டி அடிக்கும், தேவைப்படும்போது கூட்டை இடம் மாற்றிவிடும்' என்றெல்லாம் காக்கையை உதாரணம் காட்டியே விவிலியத்தில் உபதேசிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நகர வாழ்க்கையில் காக்கைகளை அதிகம் பார்க்க முடியாது. ஆனால் காக்கை அறவே இல்லாமல் எந்த நகரமும் கிடையாது. காக்கை வசிப்பதற்கு மரங்கள் அவசியம்.

காலத்துக்கேற்ப காக்கைகள் தங்களுக்கான இரையைத் தேடுவதிலும் பெறுவதிலும் நுட்பமாகச் செயல்படுகின்றன. வீசி எறியப்படும் டெட்ரா பேக்குகளை லாவகமாக உடைத்து கடைசி சொட்டு ஜூஸையும் உறிஞ்சுகின்றன. காக்கைகளால் மனித முகங்களை அடையாளம் காண முடியும். ஒரு மனிதனை இன்னொரு மனிதனிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியும்.

‘காக்கைச் சிறகினிலே நந்தலாலா, உந்தன் கருமை நிறம் தோன்றுதடா நந்தலாலா’ என்று காலத்தால் அழிக்க முடியாத பாடலைக் காக்கையை உவமானப்படுத்தியே பாரதியார் பாடியிருப்பது உச்சபட்ச சிறப்பு.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in