லாட்டரியில் ரூ.80 கோடி ஜாக்பாட் அடித்தும், ‘அதிர்ஷ்ட’த்துக்காக காத்திருக்கும் வாலிபர்

லாட்டரியில் ரூ.80 கோடி ஜாக்பாட் அடித்தும், ‘அதிர்ஷ்ட’த்துக்காக காத்திருக்கும் வாலிபர்

ஜாக்பாட் பரிசு மழையை கூரையை பிய்த்து அதிர்ஷ்ட தேவதை கொட்டிய போதும், தனக்கான தேவதைக்காக அமைதியாக காத்திருக்கிறார் ஜெர்மனியை சேர்ந்த வாலிபர் ஒருவர்.

சாதாரண கிரேன் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தவர் குர்சாத் எல்திரம். ஜெர்மனியின் முகுர் பகுதியின் கெய்செக் கிராமத்தில் பிறந்தவர். பிழைப்புக்காக நகரங்களில் வாழத் தலைப்பட்ட, அவரின் வளரிளமைப் பருவத்தில் அத்தனை சுகப்பாடு கிடையாது. கிடைத்த வேலையை பார்த்து வந்தவருக்கு நண்பர் ஒருவர் மூலமாக அதிர்ஷ்டம் கதவைத் தட்டியது. லாட்டரி அறிவிப்பு ஒன்றின் இணைப்பை பகிர்ந்திருந்தார் அந்த நண்பர். குர்சாத்தும் விட்டேற்றியாய் லாட்டரி விற்பனையில் பங்கெடுத்தார். சில தினங்கள் கழித்து உங்களுக்கு லாட்டரியில் பரிசு கிடைத்திருக்கிறது என்ற தகவல் வந்தது. பணி நேரத்தில் இருக்கிறேன்; முடித்ததும் வந்து பார்க்கிறேன் என்றபடி சாவகாசமாய் சென்று லாட்டரி முடிவை விசாரித்தார். நாடே ஆவலுடன் எதிர்பார்த்த லாட்டரியில் குர்சாத் எல்திரமுக்கு சுமார் பத்து மில்லியன்(99,27,511,60) யூரோ ஜாக்பாட் அடித்திருந்தது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 81 கோடி.

சொல்லி அடிப்பது போல சில வாரங்களுக்கு பரிசு மழையை தண்ணீராய் இரைத்தார். லாட்டரியை அறிமுகப்படுத்திய நண்பரை வரவழைத்து நட்சத்திர விருந்தளித்தார். அவருடன் சென்று உயர்ந்த ரக கார்களான ஃபெராரி ரகங்களில் சிலதை வாங்கி வீட்டில் பூட்டினார். இன்னும் தேவையான சொத்துக்கள், காண்பவர் வயிறெரியும் கலெக்‌ஷன்களை வாங்கி அடுக்கினார். அதன் பின்னர் அடங்கிப்போனார். எதுவுமே நடக்காததுபோல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டார். இத்தனைக்கும் அவரது ஜாக்பாட் பரிசு பொதியில் சொற்பம் மட்டுமே செலவாகி இருக்கிறது. மற்றதெல்லாம் வங்கிகளில் பத்திரமாக உறங்குகிறது. ஆனால் குர்சாத் விழிப்புற்றிருக்கிறார். அவருக்கு கிடைத்த அனுபவம் அப்படி.

சாமானிய குடும்ப பின்னணியில் வளர்ந்த அனுபவத்தில் ஏச்சும், ஏளனமுமே குர்சாத் வாழ்க்கையில் அதிகம் கடந்திருக்கிறது. இந்த லாட்டரி மழையை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. போலவே, பரிசு கிடைத்ததும் தன்னுடைய உலகம் முழுக்க பொய்யாய் போகுமென அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. திடீர் பணக்காரரை சுற்றி ஈக்களென புதிய நண்பர்களும், பெண்களும் மொய்த்தார்கள். அவர்கள் எவரிடத்தும் உண்மை அறவே இல்லை. அனைவரது கண்ணும் குர்சாத்தின் காசு மீதே இருந்தது. எனவே விரைவில் அவர்களை வெறுத்து ஒதுங்கினார். ‘என்னை வெறுத்தவர்களிடம் கூட உண்மையும் நியாயமும் இருந்ததை உணர்ந்திருக்கிறேன். ஆனால் இவர்களிடம் அவை எதுவும் இல்லை’ என்று கசப்பனுபவம் பகிர்ந்திருக்கிறார் குர்சாத்.

பிறகேன் விலை உயர்ந்த கார்கள், அலங்கார பொருட்கள், சொத்துக்கள் வாங்கினாராம்? இந்த கேள்விக்கும் வித்தியாசமான பதில் வைத்திருக்கிறார் குர்சாத். ’என் இளமையில் பணத்தையும் பொருளையும் காட்டி என்னை நோகடித்தவர்களுக்கு பதில் சொல்லும் வகையில் அப்படி செய்தேன்’ என்கிறார். அதிலும் அந்த கார்களை அப்படியே பொம்மை போல நிறுத்தி வைத்திருக்கும் குர்சாத் அதற்கும் சுவாரசிய பின்னணி வைத்திருக்கிறார். ’எல்லாம் கிடைத்தது போல தெரிந்தாலும் எதையோ பறிகொடுத்தார்போல உணர்ந்தேன். அது எனக்கான வாழ்க்கைத்துணை என்பதை அறிந்து கொண்டேன். அவளுக்காக நான் காத்திருக்க ஆரம்பித்திருக்கிறேன். என்னுடைய தேவதையுடன் ஜோடியாக பயணித்தால்தான் இந்த கார்களை வாங்கியது முழுமை பெறும்’ என்கிறார் குர்சாத். ஆனால் அங்கேதான் பிரச்சினை. கோடியில் பரிசு கிடைத்தும் உண்மையான வாழ்க்கைத்துணை கிட்டாது தவித்து வருகிறார்.

அதற்கு குர்சாத்தின் இயல்பும் ஒரு காரணம். ஜாக்பாட் பரிசு கிடைத்தும் சராசரி வாழ்க்கைக்கு ஆசைப்படுவது மட்டுமன்றி, குர்சாத்தின் இன்னொரு நோக்கமும் நாகரீக யுவதிகளை விதிர்க்க வைத்திருக்கிறது. ஆப்பிரிக்க தேசங்களில் நிலம் வாங்கி கிணறு வெட்டி பயிரிட்டு அங்குள்ள குழந்தைகளின் நலனுக்காக வாழ்க்கையை செலவிட வேண்டும் என்பதும் குர்சாத்தின் கனவுகளில் ஒன்று. அதிர்ஷ்ட தேவதையுடன் குடித்தனம் நடத்தும் குர்சாத், தனக்கான தேவதைக்காக வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in