பிப்.15: முரட்டு சிங்கிள்ஸ் சிலிர்க்கும் தினம்!

பிப்.15: முரட்டு  சிங்கிள்ஸ் சிலிர்க்கும் தினம்!

முரட்டு சிங்கிள்ஸ் எல்லோருக்கும் சிலிர்ப்பூட்டும் தினம் பிப்ரவரி-15. சிங்கிளாக இருப்பதன் பெருமையை உணர்ந்து உய்வதுடன், அதை விடாப்பிடியாய் தொடர்வதில் விழிப்புணர்வு பெறும் தினமே இன்றைய தினத்தின் சிறப்பு!

காதலர் தினத்தை முன்வைத்து, காதலின் பெயராலும், காதலிக்கிறோம் என்ற பெயராலும் கடந்த ஒரு வாரமாக உலகம் நடத்திய கூத்து பெரிது. மதர்ஸ் டே என்ற பெயரில் ஒற்றை தினத்தில் மட்டும் அம்மாவுக்காக உருகி வழிவோர் வரிசையில், காதலர் தினத்தின் பெயரால் வழிந்தவர்களும், காதலில் வழுக்கியவர்களுமே அதிகம். ஒருவழியாக, தினமொரு சிறப்பாக நீடித்த ஒருவார காதலர் தின கொண்டாட்டங்கள் முடிவுக்கு வந்திருக்கின்றன.

ஆனால், ’காதலர் தினமா அப்டின்னா..’ என்று கேலியும் கெத்துமாக வலம் வரும் முரட்டு சிங்கிள்ஸ், கடந்த ஒரு வாரமாக உள்ளுக்குள் குமைந்து போயிருப்பார்கள்.காதல், காதல்ர் என்று பித்தேறித் திரிந்தவர்கள், சிங்கிளாக இருப்பவர்களை ஏதோ குற்றவாளிகள்போல வருந்தம் பீடிக்கச் செய்திருப்பார்கள். குறிப்பாக பிப்.14 அன்று பொதுவெளியிலும், சமூக ஊடக வெளியிலும் சிங்கிள்ஸை உலவ முடியாதபடி செய்துவிடுவார்கள். சிங்கிளாக இருப்போரை குறிவைத்து ஒருவகையான கேரோ நடப்பதும் உண்டு.

தற்போது காதலர் தின கொண்டாட்டங்கள் முடிவுக்கு வந்திருக்க, சோர்ந்து கிடக்கும் சிங்கிள்ஸை தேற்றுவதற்காக பிப்.15 தினத்தை ‘சிங்கிள்ஸ் அவேர்னர் டே’வாக கொண்டாடுகிறார்கள். சிங்கிளாக இருப்பது உலகமகா குற்றமல்ல என்று தேற்றுவதுடன், நடைமுறையில் சிங்கிளாக இருப்பதன் பெருமையை உணரத் தலைப்படவும், மீண்டும் தலைநிமிரச் செய்யவும் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உண்மையில் முரட்டு சிங்கிளாக இருப்பதன் பயன்கள் அதிகம். திருமண வயது வந்தவர்கள், தவிர்க்க முடியாது இல்லற வாழ்க்கைக்கு நேர்ந்துவிடப்படுவதன் வரிசையில் கமிட் ஆவது தனி. ஆனால், வறட்டுப் பெருமைக்காக காதல் என்ற பெயரில் களேபரம் செய்வோரே இங்கு அதிகம். அப்படியானவர்களைவிட, சிங்கிளாக இருப்பதன் பெருமையை உணரச் செய்வதும், அதை தொடரச் செய்வதுமே இந்த தினத்தின் குறிக்கோள்.

பருவ வயதைக் கொண்டாடுவோரில் கமிட் ஆனவர்களைவிட, சிங்கிள்ஸ் மட்டுமே முன்னிற்பார்கள். படிப்பு, விளையாட்டு, இதர பொழுதுபோக்கு என சிங்கிள்ஸ் உலகமே அலாதியாக இருக்கும். நண்பர்களுடன் அதிகம் நேரம் செலவழிக்க சிங்கிள்ஸ் சிங்கங்களால் மட்டுமே முடியும். அதுமட்டுமல்ல எதிர்பாலினத்தவருடன் சளைக்காது கடலையில் தொடங்கி விடலை வயதின் சகல ஊடாட்டத்துக்கும், சிங்கிள்ஸாக இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். எதிர்பாலினத்தவர் மத்தியில் இந்த சிங்கிள்ஸ் மட்டுமே தனி ஒளிவட்டத்துடன் வளைய வருவார்கள்.

இப்படி தங்கள் இளமையை கொண்டாட்டமாகவும், பின்னாளில் பசுமையாய் நினைவுகூரத்தக்க வகையிலும் செலவிடவும் சிங்கிள்ஸ்க்கு கூடுதல் வாய்ப்புகள் அமைகின்றன. கமிட் ஆனவர்களின் சோகங்கள் அவர்களாக வெளிச்சொன்னால் மட்டுமே வெளித்தெரியும். ஆனால் அடித்துக்கேட்டாலும் அதை மட்டும் சொல்லமாட்டார்கள்.

இந்த வேடிக்கை கூற்றுகளுக்கு அப்பால், சீரியசான அனுகூலங்களும் சிங்கிள்ஸ் சிறப்புகளில் அடங்கும். அவற்றில் பிரதானமானது சுய நேசிப்பு. நேசித்தல் என்றதுமே எதிர்பாலினத்தவர் பக்கம் திரும்பத் தேவையில்லை. தன்னை உணரச்சொல்லும் மெய்யியல் தத்துவத்தின் இனிப்பு தடவிய அனுபவமே சுயத்தை நேசித்தல். இளம் வயதில் ஓடி விளையாடி உடல்நலனை ஓம்புவது, படிப்பில் கவனம் செலுத்தி சாதிப்பது, இதர திறன்களை தேடி கற்றுக்கொள்வது, தான் சார்ந்த சமூகத்தை உற்றுக்கவனிப்பது, எதிர்காலத்துக்காக திட்டமிடுவது ஆகிய அனைத்தும் சிங்கிள்ஸ் வாழ்க்கையில் சாத்தியமாவது எளிது.

தன்னை நேசிப்பதற்கு அவகாசம் இல்லாது, இன்னொருத்தியை/இன்னொருவனை நேசிக்கப் போகிறேன் என்று கிளம்புவோர், முதிர்ச்சியற்று இரண்டையுமே அரைகுறையாக பாவித்து சங்கடங்களில் சறுக்குவார்கள். ஆனால் தன்னை நேசிக்க தலைப்பட்டோர் சுயத்தை முழுமையாக உணர்ந்திருப்பார்கள். நேசிக்க நேர்ந்த உறவால் பின்னாளில் கைவிடப்படும் துர்பாக்கியம் நேர்ந்தாலும், விரைந்து அந்த இக்கட்டிலிருந்து வெளியே வருவார்கள். உதாசீன உறவுக்காக உடைந்துபோக மாட்டார்கள். இப்படியானவர்கள் சகலருக்கும் பிடிக்கக்கூடியவர்களாக வளைய வருவார்கள்.

எனவே, காதலர் தின வாரத்தால் சோர்ந்து போயிருக்கும் முரட்டு சிங்கிள்ஸ், இந்த சிங்கிள்ஸ் அவேர்னஸ் தினத்தில் தாங்கள் சிங்கிளாக இருப்பதன் சிறப்பை எண்ணி மெச்சிக்கொள்ளலாம். காதலர் தின கொண்டாட்டத்துக்கு இணையாக சிங்கிள்ஸ் எல்லோரும் சேர்ந்து கொண்டாடலாம். சகலத்திலும் நுகர்பொருள் கலாச்சாரத்தை திணித்துவிட்ட மேற்குலகு பாணியில் பரிசுகள் கூட பரிமாறிக்கொள்ளலாம்.

கொஞ்சம் வசதியிருப்பின், பிரேசிலுக்கு பறந்துபோய் சிங்கிள்ஸ் தினத்தை இன்னும் பெரிதாக கொண்டாடலாம். உலகம் முழுதுமிருந்து சிங்கிள்ஸ் விழிப்புணர்வுக்காக பிரேசில் செல்வோர் அதிகம். பிரேசிலில் காதலர் தினத்தை ஒட்டி வேறு கொண்டாட்டங்கள் வருவதாலும், அங்கே காதலர் தினத்தை ஜூன் 12 அன்று தனியாக கொண்டாடுவதாலும், பிப்.14 தினம் சோபையிழந்திருக்கும். அப்போது எதிர்ப்பாட்டுக்காக சிங்கிள்ஸ் கூடி குதூகலம் செய்வார்கள்.

துணையை நேசிக்கும் முன்னர், தம்மை நேசிக்கத் தலைப்படும் சிங்கிள் சிங்கங்களின் விழிப்புணர்வு இந்நாளில் செழிக்கட்டும்!

Related Stories

No stories found.