காதல் மட்டுமல்ல வாழ்வும் உறுதிமொழிகளால் ஆனது!

பிப்ரவரி 11 - #PromiseDay
காதல் மட்டுமல்ல வாழ்வும் உறுதிமொழிகளால் ஆனது!

காதலர் தினத்தை(பிப்.14) நோக்கி அடியெடுத்து வைக்கும் காதல் வாரத்தின் 5-வது நாள் பிப்.11. இந்த நாளை ‘உறுதிமொழி தினம்’ என்கிறார்கள். காதலுக்கு மட்டுமல்ல வாழ்தலுக்கும் இந்த உறுதிமொழி மிகவும் அவசியம்.

காதலர் தின கொண்டாட்டங்கள் பிப்.7 அன்றே தொடங்கி விடுகின்றன. அந்த வகையில் ரோஜா தினம், புரப்போஸ் தினம், சாக்லேட் தினம், டெடி தினம் வரிசையில் இன்று உறுதிமொழி தினம். முதலிரு தினங்கள் காதல் அத்தியாயத்தை தொடங்குவதற்கு எனில், அடுத்த 2 தினங்கள் சாக்லேட், பரிசுகள் என காதலன் அல்லது காதலியை ஈர்க்கும் வகையில் நடந்துகொள்வார்கள். காதலின் பிணைப்புக்கு உறுதிசேர்க்க, அடுத்தகட்டமாக உறுதிமொழி நாள் வருகிறது.

வாழ்கையில் ஓர் இலக்கை தீர்மானித்துக்கொள்வதன் மூலமே, அதை நோக்கிய தங்குத்தடையற்ற ஓட்டம் சாத்தியமாகிறது. அந்த இலக்குதான் உறுதிமொழி. வயதுக்கு ஏற்பவும், சூழலுக்கு ஏற்பவும் இந்த உறுதிமொழிகள் மாறும். புத்தாண்டு பிறக்கும்போது பூரிப்பாய் தோன்றும் உறுதிமொழிகள், ஒரு வாரம் செல்வதற்குள் காணாமல் போயிருக்குமே அது போன்றதல்ல. ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் வசந்தம் சேர்க்கப்போகும் உறவுக்கான பிரத்யேக வாக்குறுதிகள்! அவை சற்றே பிதற்றலாகக்கூட இருக்கலாம். அந்தரங்கமாகவும், விசேஷமாகவும் இருக்கலாம். ஆனால், அந்த உறுதிமொழி மீது காதலன்/காதலிக்கு நம்பிக்கை எழ வேண்டும்.

அந்த உறுதிமொழிகளில் தலையாயது, “நான் உன்னோடிருப்பேன்” என்பதுதான். உன் வாழ்விலும் தாழ்விலும், சகல சுகதுக்கங்களிலும், இப்போதுபோல கைப்பற்றியவாறு உடனிருப்பேன் என்ற உறுதிமொழியை உணர்த்தினால் போதும். காதலர்கள் மத்தியில் கடத்த வேண்டிய உறுதிமொழியாக, வாழ்ந்து கடந்தவர்கள் இன்றைய நாளுக்காக வழங்கிச்சென்ற அறிவுரை இதுதான். உன்னோடு நான் என்றும் இருப்பேன் என்பதை மட்டும் உணர்த்திவிடுங்கள்; அதன் பின்னரான வாழ்க்கையில் எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் இந்த பந்தம் நின்று காக்கும் என்பதே அவர்களது தீர்க்கதரிசனம்.

இந்த உறுதிமொழியை வாய்வார்த்தைகளாக சொல்வதைவிட, உணர்த்த வேண்டும் என்கிறார்கள். எப்படி உணர்த்துவது என்பதெல்லாம், காதலில் விழுந்தவரின் சாமர்த்தியம் சார்ந்தது. நேசத்துக்கு அடிப்படையான பரஸ்பர நம்பிக்கை உருவாகியிருப்பின், உறுதிமொழி மட்டுமல்ல மொழியற்ற எல்லா உணர்வுகளையும் கடத்திவிடலாம். பரஸ்பர நம்பிக்கை உருவாக, உறவுகளில் குறைந்தபட்ச நேர்மையேனும் தேவை. சுயமாய் இருப்பதும், தனக்கும் பிறகு பிறருக்கும் உண்மையாக இருப்பதும், இந்த நேர்மைக்கு வித்திடும். இவை எல்லாமாய் கலந்து பிறக்கும் உறுதிமொழி, யாகம் வளர்த்து சொல்லும் மந்திரங்களைவிட வலுவாக உறவைப் பிணைத்திருக்கும். எதிர்பாராத உரசல்கள், விலகல்கள் நேர்ந்தாலும்கூட, வாழ்ந்ததை மதித்து பவ்யம் காட்டும். தவிர்க்கவே முடியாத பிரிவுக்கு சூழலால் தள்ளப்பட்டாலும், மரியாதை குறையாது நண்பர்களாய் நலம் நாடுவார்கள்.

காதலைச் சொல்வது, பரிசுகளை வழங்குவது உள்ளிட்ட முந்தைய 4 தினங்களைவிட, இன்றைய உறுதிமொழி தினமே காதல் வாரத்தில் முக்கியமானது. காதலுக்கும் தேர்தலுக்கும் மட்டுமல்ல, வாழ்தலுக்கும் வாக்குறுதிகள் அவசியம்.

உறுதிமொழியும் அதைப் பின்பற்றுவதற்கான பிரயத்தனமுமே வாழ்க்கைக்கு அழகு சேர்க்கும். உறுதிமொழிகளை பிரகடனம் செய்வதும், அதை ஈடேற்ற நித்தம் முன்னேறிச் செல்வதும், காதலைப் போலவே வாழ்தலையும் அழகாகவும், பொருள் கொண்டதாகவும் மாற்றும்.

Related Stories

No stories found.