மாநிலம் முழுதும் மாற்றுத்திறனாளிகள் மறியல்: ஆயிரக் கணக்கானோர் கைது!

மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்...
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்...

ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் வழங்குவதுபோல, தமிழ்நாட்டிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்கக் கோரி இன்று மாநிலம் தழுவிய மறியல் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைச் சங்கம் சார்பில், சென்னை தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியலில் சங்கத்தின் மாநில தலைவர் பா.ஜான்சிராணி தலைமை தாங்கினார். இதேபோல தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு, மாநில பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் தலைமையிலும், தர்மபுரி பென்னாகரத்தில் மாநிலப் பொருளாளர் கே.ஆர். சக்கரவர்த்தி தலைமையிலும் மறியல் நடந்தது.

மதுரை பேரையூரில் முத்துகாந்தாரி, கரூர் கிருஷணராயபுரத்தில் பி.ஜீவா, சென்னை எழும்பூரில் டி.வில்சன், பழநியில் எஸ்.பகத்சிங், செங்கல்பட்டு அருகே திருக்கழுக்குன்றத்தில் பி.எஸ்.பாரதி, ஊத்தங்கரையில் பி.திருப்பதி, சென்னை கிண்டியில் சாந்தி ஆகியோர் தலைமையில் ஏராளமான மாற்றுத் திறனாளிகள் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சி ராணி, பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன் ஆகியோர் கூறும்போது, “மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை தெலங்கானா, ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களைப் போன்று குறைந்தபட்சம் ரூ.3,000 ஆகவும், கடும் ஊனமுற்றோருக்கு ரூ.5,000 ஆகவும் தமிழக அரசு உயர்த்தி வழங்க வலியுறுத்தி சுமார் 120 இடங்களில் இந்த மறியல் நடைபெற்றது.

வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட தமிழக அரசு அலுவலகங்கள் முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டங்களில் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட சுமார் 20 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களது பாதுகாவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகளின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற முதலமைச்சர் முன்வர வேண்டும். இதைக்காட்டிலும் தீவிரமான போராட்டத்துக்கு எங்களை அரசு தள்ளிவிடக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம்” என்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in