ஒட்டிப் பிறந்த சகோதரர்களின் இரட்டை வாக்குரிமை!

ஒட்டிப் பிறந்த சகோதரர்களின் இரட்டை வாக்குரிமை!
வாக்குச்சாவடியில் சோஹ்னா - மோஹ்னா

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவில், ஒட்டிப் பிறந்த இரட்டையர் பெரும் சவாலுக்கு இடையே தனித்தனியாக தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

19 வயதாகும் சோஹ்னா - மோஹ்னா சகோதரர்கள் இருவரும் தங்கள் கன்னி வாக்குகளை இன்று செலுத்தினர். ஆனால் இவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை முறையாகச் செய்வதில் வாக்குச்சாவடி அலுவலர்கள் தடுமாறிப்போனார்கள்.

டெல்லியில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் இருவரும், பிறந்த உடனேயே பெற்றோரால் அநாதரவாக தவிக்கவிடப்பட்டவர்கள். இவர்களை பரிசோதித்த எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், இருவரையும் தனித்தனியாக பிரிப்பது உயிருக்கு ஆபத்து என்று தவிர்த்தனர்.

அமிர்தசரஸ் ஆதரவு இல்லம் ஒன்றின் அரவணைப்பில் வளர்ந்த இருவருக்கும், அண்மையில் பஞ்சாப் அரசு சார்பில் பணி கிடைத்தது. ஒட்டிப்பிறந்த இரட்டையர் என்பதால் ஒரே நபருக்கான பணியை இருவரும் பார்க்க உள்ளனர். ஆனால் இருவருக்கும் தனித்தனி வாக்குரிமை அளிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதன்படி தனித்தனி வாக்களர் அட்டைகள் தேர்தல் ஆணையம் சார்பில், சோஹ்கா - மோஹ்னா இரட்டையருக்கு அண்மையில் வழங்கப்பட்டது. இருவரும் இதயம், சிறுநீரகம், கரங்கள் ஆகியவற்றுடன் மூளையும் தனித்தனியாக பெற்றிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கால்கள், கல்லீரல் போன்றவை இருவருக்கும் ஒன்றாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சகோதரர்கள் இருவரும் இன்றைய தினம் அமிர்தசரஸ் வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க வந்தனர். பஞ்சாப்பின் பிரபலங்கள் என்பதால் இருவருக்கும் விமரிசையான வரவேற்பு வழங்கப்பட்டது. ஒருவர் வாக்கினை மற்றவர் அறியா வண்ணம் இருவரும் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கான பிரத்யேக கண்ணாடிகள் அணிந்து இருவரும் வாக்களித்தனர். தனித்துவ வாக்களிப்பு என்பதால் தேர்தல் அதிகாரிகள் வீடியோ பதிவும் மேற்கொண்டனர்.

Related Stories

No stories found.