பரோட்டா மாஸ்டருக்காகவே ஒரு கோச்சிங் சென்டர்

முன்மாதிரியாய் சிந்தித்த முகமதுகாசிம்!
மாணவர்களுடன் முகமது காசிம்...
மாணவர்களுடன் முகமது காசிம்...

அடிக்கடி பரோட்டா சாப்பிடுவது நல்லதில்லைதான் என்றாலும், ஆசைக்கு எப்போதாவது சாப்பிடத்தான் வேண்டி இருக்கிறது. மைதா மாவை அடித்துப் பிசைந்து உருண்டைகளாய் உருட்டி வைத்திருக்கும் அழகு... ஆவி பறக்கும் சூடான கல், தூக்கலான சால்னா வாசனை, கல்லிற்கு அருகிலேயே நறுக்கி வைக்கப்பட்டிருக்கும் வெங்காயம், ட்ரே நிறைய அடுக்கி இருக்கும் முட்டை. இதையெல்லாம் பார்த்தாலே நம்மையும் அறியாமல் பரோட்டா கடைகளுக்குள் புகுந்துவிடுவோம்.

இந்த பரோட்டா போடுவதை நேர்த்தியாகப் படித்துக் கொள்ளவும் பயிற்சி வகுப்பு வந்துவிட்டது. நீங்கள் படித்த படிப்பு உங்களைக் கைவிட்டாலும் இந்த பரோட்டா உங்களைக் கைவிடாது என கைமேல் அடித்துச் சொல்கிறார் மதுரையைச் சேர்ந்த முப்பது வயது இளைஞர் முகமது காசிம்! இவர் தான் பரோட்டா பயிற்சி மையத்தை நடத்தும் மாஸ்டர்.

பொதுவாக மே, ஜூன் மாதங்களில் பள்ளி - கல்லூரி மாணவர் சேர்க்கைகள் குறித்த விளம்பரங்கள் தான் ஆங்காங்கே பளிச்சிடும். ஆனால், தென் மாவட்டங்களில் பரோட்டா மாஸ்டர் பயிற்சி வகுப்புகள் குறித்த விளம்பரமும் இப்போது பிரபலம்.

இதுகுறித்து பயிற்சி மையத்தின் மாஸ்டர் முகமது காசிமிடம் காமதேனு மின்னிதழுக்காகப் பேசினோம். மனிதரின் நாடி, நரம்பெல்லாம் பரோட்டாவே ஊற்றெடுக்கிறது. உற்சாகமாக பேசத் துவங்கினார்.

”மதுரை, மல்லிக்கு மட்டுமல்ல... ஜிகிர்தண்டா, மல்லிப்பூ இட்லி இவற்றுடன் பரோட்டாவுக்கும் சால்னாவுக்கும் ஃபேமஸான ஊர் தான். மதுரைக்கு வந்தால் பரோட்டா சாப்பிடாமல் போகிறவர்கள் கம்மியாகத்தான் இருப்பார்கள். அந்த பரோட்டாவை வைத்தே பலருக்கும் வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கோச்சிங் சென்டரை ஆரம்பித்தேன். மூன்று தலைமுறையாக எங்கள் குடும்பத்திற்கு பரோட்டாக் கடைதான் தொழில். அவசரமாக வெளியே எங்காவது செல்ல வேண்டுமானால்கூட மாற்றிவிட பரோட்டா மாஸ்டர் கிடைக்கமாட்டார்கள். அதனால் கடையை பூட்டிவிட்டுத்தான் போகவேண்டி இருக்கும்.

மாவு பிசையக் கற்றுக்கொடுக்கும் முகமது காசிம்...
மாவு பிசையக் கற்றுக்கொடுக்கும் முகமது காசிம்...

இன்னொரு பக்கம் பாத்தீங்கன்னா... வேலை இல்லாமல் லட்சக்கணக்கில் இளைஞர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கும் மாஸ்டர் கிடைக்காமல் அவதிப்படும் பரோட்டா கடைக்காரர்களுக்கும் இடையே ஒரு இணைப்புப் பாலமாக இருக்க விரும்பினேன். அப்படி ஆரம்பிச்சதுதான் இந்த கோச்சிங் சென்டர். பொதுவாக, மாணவர்கள் கேட்ரிங் டெக்னாலஜி படிக்கும்பொழுது அங்கு தியரியாகத்தான் அதிகம் படிப்பார்கள். ஆனால் எங்கள் பயிற்சி வகுப்பில் முழுக்க முழுக்க பிராக்டிகல்தான்” என்று சொன்னார் காசிம்.

மொத்தம் பத்து நாள் வகுப்பு. அதற்கு நான்காயிரம் ரூபாய் கட்டணம். பன் பரோட்டா, வீச்சுப் பரோட்டா, எண்ணெய் பரோட்டா, சிலோன் பரோட்டா, ரோல் பரோட்டா, வாழை இலை பரோட்டா, கொத்துப் பரோட்டா என பத்து நாளும் பத்துவகை பரோட்டாக்கள் போட இங்கு பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. இந்த பேக்கேஜிலேயே மதுரை ஸ்டைலில் சால்னா, கிரேவி வைப்பது பற்றியும், தோசை, சப்பாத்தி உள்பட பரோட்டா மாஸ்டர் கல்லில் இருந்து போடும் அனைத்தும் கற்றுத் தரப்படுகிறது.

தொடர்ந்து நம்மிடம் பேசிய முகமது காசிம், ”மதுரை நாராயணபுரத்தில் எனது கோச்சிங் சென்டர் இருக்கிறது. கூடல்நகரில் எனக்கு பரோட்டாக் கடை உள்ளது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதால் பி.இ., பட்டதாரிகளும், எம்.பி.ஏ., படித்தவர்களும்கூட பரோட்டா மாஸ்டர் பயிற்சிக்காக எங்கள் சென்டருக்கு வருகிறார்கள். போனவாரம்கூட கன்னியாகுமரியில் இருந்து மருந்து விற்பனை பிரநிதி ஒருவர் இங்கு வந்து பரோட்டா போட கற்றுச்சென்றார்.

தினமும் 4 மணி நேரம் வகுப்புகள் இருக்கும். நானே மாவு, எண்ணெய் எல்லாம் கொடுத்துவிடுவேன். பத்துநாள் பயிற்சி முடிந்ததும், மதுரைவாசியாகவே இருந்தால் முதல்கட்டமாக 400 ரூபாய் நாள் சம்பளத்தில் நாங்களே வேலை வாங்கிக் கொடுத்து விடுவோம். இரண்டு, மூன்று மாதங்களிலேயே முழுமையாகக் கற்றுக்கொள்வார்கள். அதன்பின் சம்பளம் இரட்டிப்பாகும். ஒரு வருடத்துக்குள் 1,200 ரூபாய் சம்பளம் என்னும் இலக்கை எட்டிவிடுவார்கள்.

தன் மாணவர்களுடன்
தன் மாணவர்களுடன்

பத்துவகை புரோட்டாக்கள் மட்டுமல்லாது, ஃப்ரைடு ரைஸ், நூடுல்ஸ், சிக்கன் ரைஸ் என ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள் தயாரிப்பு குறித்தும் தனியாகக் கற்றுக்கொடுக்கிறேன். பரோட்டா மாஸ்டரைப் பொறுத்தவரை பக்குவமாக பரோட்டாவும், நாக்குக்கு ருசியாக கிரேவியும் கொடுத்துவிட்டாலே வாடிக்கையாளர்களுக்குப் பிடித்துவிடும்” என்றார்.

ஆரம்பத்தில் இதை ஒரு பொழுதுபோக்காகத் தான் தொடங்கியிருக்கிறார் முகமது காசிம். இங்கே வந்து படித்துவிட்டுச் சென்ற பலரும், உணவகங்களில் மாஸ்டராக சேர்ந்து கைநிறைய சம்பளம் வாங்கிவிட்டு அவருக்கு தொடர்ந்து அழைத்து நன்றி சொன்னதைப் பார்த்துவிட்டு இன்னும் பலருக்கும் உதவலாம் என்ற எண்ணத்தில் மையத்தின் செயல்பாட்டை தீவிரப்படுத்தினாராம். இவரிடம் புரோட்டா மாஸ்டர் பயிற்சி எடுத்து வெளிநாட்டில் மாஸ்டர் வேலைக்குச் சென்றவர்களும் பலர் உண்டு. மூன்றாண்டுகளில் நூற்றுக் கணக்கான நபர்களை பரோட்டா மாஸ்டர்களாக மாற்றி பிழைப்புக்கு வழிகாட்டி இருக்கும் இந்த மையம், கரோனா காலத்தில் வேலையைத் தொலைத்த பலருக்கும் ஆபத்பாந்தவனாய் இருந்திருக்கிறது.

நிறைவாக நம்மிடம் பேசிய முகமது காசிம், “நான் முதன்முதலில் பரோட்டா மாஸ்டர் கோச்சிங் சென்டர் என விளம்பரம் ஒட்டிய போது என் காதுபடவே பலர் கேலி பேசினார்கள். இந்த சென்டருக்கு ஆர்வமாய் படிக்க வரும் இளைஞர்களைப் பார்த்துவிட்டு இப்போது அவர்களெல்லாம் மூக்கில் விரல் வைக்கிறார்கள்” என்று சொல்லும் முகமது காசிம், ‘செல்ஃபி பரோட்டா கோச்சிங் சென்டர்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்திவருகிறார். நேரில் மதுரைக்கு வரமுடியாதவர்கள் இந்த சேனல் வழியாகவும் பரோட்டோ போடக் கற்றுக் கொள்ளலாம் என்பது எக்ஸ்ட்ரா தகவல்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in