எச்சரிக்கை... எடை குறைப்பிலும் ஏமாற்று வேலை!

கரோனாவைச் சொல்லி கல்லா கட்டும் களவாணிகள்
எச்சரிக்கை... எடை குறைப்பிலும் ஏமாற்று வேலை!

பெருந்தொற்று காலத்தில் உலகமெங்கும் பலரும் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினை உடல் எடை அதிகரிப்பு. பொதுமுடக்க தளர்வுகள் அமலுக்கு வந்தபின்னர் சுகந்தமான காற்றை சுவாசித்தபடி, பூங்காக்களில் நடைபயிற்சி, ஜிம்களில் உடற்பயிற்சி என்று சுதந்திரமாகச் சுற்றிவந்தோம். கட்டுப்பாடுகள் இறுக்கமாகி, உடற்பயிற்சி நிலையங்கள் மூடப்பட்ட தருணத்தில் வழக்கமாக உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள்கூட பயிற்சிகளைக் கைவிட்டு வீட்டில் முடங்க ஆரம்பித்தனர்.

இதனால் பலரும் பலவிதமான உடல் உபாதைகளுக்கு ஆளானார்கள். கரோனா காலத்தில், உடல் பருமன் கூடுவதால் ஏற்படும் பாதிப்புகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துவிட்டதாக அபாயச் சங்கை ஊதியிருக்கிறது அமெரிக்க அரசின் நேஷனல் சென்டர் ஃபார் பயோடெக்னாலஜி இன்ஃபர்மேஷன் நிறுவனம் நடத்திய ஆய்வு.

கரோனா சூழலில், வீட்டில் இருந்தபடியே உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க முடியுமா எனப் பலரும் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபடுகிறார்கள். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பல போலி பயிற்சியாளர்கள் சமூக வலைதளங்களில் ‘ஆன்லைன் ஃபிட்னஸ் கோச்சிங்’ என்ற பெயரில் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களிடம் சிக்காமல் உடல் எடையைப் பராமரிப்பது எப்படி? போலியான பயிற்சியாளர்களிடம் இருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி?

ஃபிட்னஸ் ரகசியம்

நாம் உட்கொள்ளும் கலோரி அளவும், உடல் உழைப்பின் மூலம் செலவழிக்கும் கலோரி அளவுக்கும் இடையில் உள்ள வித்தியாசம்தான் உடல் எடையைத் தீர்மானிக்கிறது. உதாரணத்துக்கு, நீங்கள் ஒரு நாளுக்கு 2 ஆயிரம் கலோரிகள் தரும் உணவை உட்கொள்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், உங்கள் உடல் உழைப்பின் மூலம் நீங்கள் 2,200 கலோரிகளைச் செலவழித்தீர்கள் என்றால் உங்கள் உடல் எடை குறையும். ஒருவேளை, நீங்கள் உட்கொண்ட கலோரி அளவைவிட குறைவான அளவு கலோரிகளைச் செலவழித்தீர்கள் என்றால், உங்கள் உடல் எடை கூடிக்கொண்டே போகும்.

சரி, கலோரி என்றால் என்ன என்று சிலருக்குக் கேள்வி எழக்கூடும்.

நாம் உட்கொள்ளும் உணவு நம் உடலுக்கு அளிக்கும் செயலாற்றலின் அளவுதான் கலோரி என்று அழைக்கப்படுகிறது. ஒரு மனிதன், ஒருநாளுக்கு 2,500 கலோரிகள் அளவு கொண்ட உணவுகளை உட்கொண்டால் போதும் என்று அறிவியல் கூறுகிறது. பொதுமுடக்கத்துக்கு முன்பு அலுவலகத்துக்குச் செல்ல பேருந்து நிறுத்ததுக்குச் செல்லும்போது, வண்டி ஓட்டும்போது, மாடிப்படிகளில் ஏறும்போது என்று பலவகையில் உங்கள் உடல் கலோரிகளைச் செலவழித்திருக்கும். ஆனால், தற்போது வீட்டிலிருந்தே வேலை என்பதால் உங்களுடைய கலோரிகள் எரிக்கப்படுவது குறைந்திருக்கும். இந்தச் சூழலில், உங்களுடைய வழக்கமான உணவுகள் குறையவில்லை என்றால் எடை ஒருபக்கம் ஏறிக்கொண்டேபோகும்!

லக்ஷ்மி குமார்
லக்ஷ்மி குமார்

கலோரிகளின் கணக்கு

உட்கொள்ளும் கலோரிகளின் அளவை எப்படிக் கணக்கிடுவது என்பது பலரிடம் இருக்கும் முக்கியக் கேள்வி. வெளிப்பார்வைக்கு இவ்விஷயம் மிகவும் சிக்கலாகத் தெரிவதால்தான், தங்களுக்கு டயட் வடிவமைத்துத் தருமாறு ஆன்லைன் பயிற்சியாளர்களைப் பலரும் அணுகுகிறார்கள்.

உணவுகளை அளக்கக்கூடிய சின்ன எடைக் கருவிகள் 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை சந்தையில் கிடைக்கின்றன. ‘மைஃபிட்னஸ்பால்’ (MyFitnessPal) என்ற மொபைல் செயலியை உங்கள் செல்போனில் தரவிறக்கி, நீங்கள் உண்ணும் உணவுகளின் எடையை இச்செயலியில் உள்ளிட்டால் போதும். உணவில் உள்ள கலோரி, மாவுச்சத்து, புரதம், கொழுப்பு என்று அனைத்தையும் துல்லியமாகக் கணக்கிட்டுவிடும் மைஃபிட்னஸ்பால். இச்செயலியில் பணம் கட்டினால் மேலும் பல வசதிகள் கிடைக்கும்.

போலி பயிற்சியாளர்கள்

கரோனா காலத்தில் வீட்டிலிருந்தே உடற்பயிற்சியை ஆன்லைன் மூலம் கற்றுக்கொள்ளலாம் என்று கூறி, மாதம் ரூ.5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பயிற்சியாளர்கள் என்ற பெயரில் பலர் வசூலிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இங்குதான் தொடங்குகிறது பிரச்சினை.

தகுதி இல்லாத பயிற்சியாளர்கள் எந்தவிதமான அறிவியல் புரிதலும் இல்லாமல் தரும் உணவுப் பரிந்துரைகள், உங்கள் ஆரோக்கியத்துக்கே உலைவைக்க வாய்ப்பிருக்கிறது. ஒரு வாரத்துக்கு 500 கிராம் வரை எடைக் குறைப்புதான் அறிவியல் ரீதியாக நடைமுறைச் சாத்தியம் உள்ள முறை. ஆனால் இணையத்தில், ஒரே வாரத்தில் 6 கிலோ எடைக் குறைப்புக்கு உத்தரவாதம் தரும் ஏடாகூடமான பயிற்சியாளர்களைச் சமீப காலமாகப் பார்க்க முடிகிறது. உடற்பயிற்சிக்குப் பயிற்சியாளர்களை வைத்துக்கொள்வது நல்ல விஷயம்தான். உங்களுடைய உடற்பயிற்சிகள், உணவு முறைகளைத் துல்லியமாகச் செயல்படுத்த பயிற்சியாளர்கள் உறுதுணையாக இருப்பார்கள். ஆனால், தீவிரமான உடற்பயிற்சி முறைகளில் நீங்கள் ஈடுபடும்போதுதான் உங்களுக்குப் பயிற்சியாளர்களின் துணை தேவைப்படும். எளிய முறையில் வீட்டிலிருந்தபடியே உடற்பயிற்சி மேற்கொள்ள, ஆன்லைன் பயிற்சியாளர்கள் தேவையே இல்லை.

இதையும் மீறி உங்களுக்கு ஆன்லைன் பயிற்சியாளர்கள் தேவை என்று தோன்றினால், நீங்கள் செய்ய வேண்டியது என்ன? ‘ஃபீனிக்ஸ் வெல்னஸ் அகாடமி’ என்ற நிறுவனத்தை நிறுவி அதன் மூலம் பல பயிற்சியாளர்களை உருவாக்கிவரும் லக்ஷ்மி குமாரிடம் இதுபற்றிப் பேசினோம்.

நல்ல பயிற்சியாளருக்கான இலக்கணம்

“ஒரு நல்ல பயிற்சியாளர் என்பவர் உங்களுக்கு விஷயங்களைக் கற்றுத் தருவதில் ஆர்வமாக இருக்க வேண்டும். அதைவிடுத்து, ‘என்னிடம் பணம் கட்டினால் என்னிடம் உள்ள ரகசியங்களை உனக்குச் சொல்லித்தருவேன்‘ என்று கூறினால் அவர் போலி. ஏனென்றால், ஃபிட்னஸில் ரகசியம் என்று எதுவும் இல்லை. குறைவான கலோரி, அதிகமான கலோரி இந்தக் கணக்குதான் ஃபிட்னஸ். அதை ஒவ்வொருவரது உடல்வாகு, வயது, பாலினத்துக்கு ஏற்றாற்போல் முறைப்படுத்திக் கொடுப்பதுதான் பயிற்சியாளரின் பணி.

நான் 2006 தொடங்கி இதுவரை 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு உடல் எடை குறைத்தல், உடல் எடையைக் கூட்டுதல் என்று 2 வகையிலும் பயிற்சி அளித்துள்ளேன். அத்தனை பேரிடமும் நான் சொல்லும் ஒரே விஷயம், ‘உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றம் ஏற்பட மாதக்கணக்காக உழைக்க வேண்டும், உணவு முறைகளில் ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும்’ என்பதுதான். ஆனால், இன்றைக்குப் பல பயிற்சியாளர்கள் ஒரே மாதத்தில் கட்டுடல் கிடைக்க உத்தரவாதம் தருவதாகக் கூறுகிறார்கள். அப்படியானவர்களிடமிருந்து விலகுவதே நல்லது.

பாடி பில்டர்கள் அனைவரும் பயிற்சியாளர்கள் கிடையாது. யாரையும், அவர்களின் உடலின் அழகை மட்டும் பார்த்து மட்டும் பயிற்சியாளராகத் தேர்ந்தெடுக்காதீர்கள். அவர்கள் என்ன படித்திருக்கிறார்கள், ஃபிட்னஸ் மட்டுமன்றி நியூட்ரீஷியன் படிப்புகளைப் படித்துள்ளார்களா என்பதையெல்லாம் ஆராய்ந்து விட்டு, உங்களுக்கான பயிற்சியாளர்களைத் தேர்ந்தெடுங்கள்” என்றார் லக்ஷ்மி குமார்.

உடல் எடையைப் பேணுவது முக்கியம்தான்; அதற்காக, போலிகளின் பேச்சை நம்பி பணத்தையும் இழந்து உடம்பையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள் மக்களே!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in