அதிசயம் நிகழ்த்திய ஆயுர்வேதம்!

கென்ய முன்னாள் பிரதமரின் மகளுக்கு மீண்டும் கிடைத்த கண் பார்வை!
அதிசயம் நிகழ்த்திய ஆயுர்வேதம்!
ஸ்ரீதரீயம் ஆயுர்வேத மருத்துவமனைக்கு வந்த ரெய்லா ஒடிங்காவுக்கு வரவேற்பு...

கென்யாவின் முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்காவின் மகளான ரோஸ்மேரி ஒடிங்கா, இழந்த கண் பார்வையை கேரளத்தின் ஆயுர்வேத சிகிச்சை மூலம் திரும்பப் பெற்ற செய்தி பரவலான கவனம் ஈர்த்திருக்கிறது.

2017-ல் ரோஸ்மேரிக்கு கண்ணுக்குள் ஏற்பட்ட கட்டியால் கண்பார்வை இழப்பு ஏற்பட்டது. தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி, இஸ்ரேல், சீனா ஆகிய நாடுகளுக்கு அவருடைய தந்தை கூட்டிச் சென்று சிகிச்சை அளித்தார். எனினும், பலன் கிடைக்கவில்லை.

ஆயுர்வேத சிகிச்சை

இந்தியாவில் ஆயுர்வேத சிகிச்சையில் இத்தகைய கண் கட்டிகளைக் கரைத்து பார்வையை மீட்சி பெற வைக்கிறார்கள் என்ற தகவலைக் கேட்டு, கேரளத்தின் எர்ணாகுளத்தில் உள்ள ஸ்ரீதரீயம் ஆயுர்வேத மருத்துவமனைக்கு மகளை அழைத்து வந்தார் ரெய்லா. அங்கே வரும்போது பார்வையற்ற ரோஸ்மேரி, மிக கவனமாக கால்களை அடிமேல் அடி வைத்து மெள்ளமாக நடந்து வந்தார். தலைமை ஆயுர்வேத மருத்துவர் நாராயணன் நம்பூதிரி தலைமையில் மருத்துவர்கள் குழு ரோஸ்மேரியை சோதித்துவிட்டு உடனே சிகிச்சையைத் தொடங்கியது.

கோப்புப் படம்
கோப்புப் படம்

நான்கு மாதங்களுக்குள் ரோஸ்மேரியின் பார்வை படிப்படியாக மீண்டது. பிறகு மருந்துகளுடனும் அவற்றை எப்படி உண்ண வேண்டும் என்ற வழிகாட்டுதல்களுடனும் கென்யா திரும்பினார் ரோஸ் மேரி. 2019-ல் அவருக்கு முழுதாகப் பார்வை திரும்பிவிட்டது. “முழுமையாக பார்வை இழந்திருந்த நான் இப்போது செல்போனில் வரும் குறுந்தகவல்களைக்கூட இடரில்லாமல் படிக்க முடிகிறது” என்று கூறுகிறார் ரோஸ்மேரி. நானும் எங்களுடைய குடும்பத்தாரும் ஆயுர்வேத மருத்துவமனைக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறோம் என்கிறார் அவர்.

இந்த ஆண்டு ஸ்ரீதரீயம் மருத்துவமனை மருத்துவர்களுக்கும் குழுவுக்கும் நன்றி தெரிவிக்க குடும்பத்துடன் வந்துவிட்டார் ரெய்லா ஒடிங்கா. பிப்ரவரி 7-ம் தேதி எர்ணாகுளத்தில் மருத்துவமனை இருக்கும் கூத்தாட்டுக் குளத்துக்கு வந்தவர்கள், அங்கேயே ஐந்து நாட்கள் தங்கினர். ரோஸ்மேரி மட்டும் இம்மாத இறுதிவரையில் இங்கே தங்கியிருப்பார்.

ஸ்ரீதரீயம் மருத்துவமனையின் சிறப்புகள்

இந்த மருத்துவமனை தலைமுறை தலைமுறையாக கடந்த முன்னூறு ஆண்டுகளாக கண் சிகிச்சை அளிக்கிறது. 25 ஆண்டுகளுக்கு முன்னால் நாராயணன் இந்த மருத்துவமனையை நவீனப்படுத்தினார். நவீன ஆங்கில கண் மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் நோயறியும் கருவிகளையும் காமிரா-கணினி இணைக்கப்பட்ட கருவிகளையும் நோயை அறியப் பயன்படுத்துகிறார். மற்றபடி கண் சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகளையே தருகிறார். கண்பார்வைக் கோளாறு எவ்வளவு சிக்கலாக இருந்தாலும் முற்றியிருந்தாலும் ஆயுர்வேத மருந்துகள் மூலமே குணப்படுத்துகிறார்கள்.

கோப்புப் படம்
கோப்புப் படம்

நைரோபியில் நவீன ஆயுர்வேத கண் மருத்துவமனையைத் திறக்க வாய்ப்பளித்தால் நிச்சயம் அங்கும் சென்று சிகிச்சை அளிப்போம் என்கிறார் மருத்துவமனையின் துணைத் தலைவர் ஹரி என். நம்பூதிரி. ஆயுர்வேத மருத்துவம் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்து வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஹரி, “அலோபதி (ஆங்கில) மருத்துவ முறை போல இங்கே தயார் மருந்துகள் அதிகம் கிடையாது. நோயாளியின் உடல் தன்மை, நோயின் தன்மை ஆகியவற்றுக்கு ஏற்ப மருந்துகளைத் தயாரித்துத் தருகிறோம். ஒருவருக்குக் கொடுத்த மருந்து இன்னொருவருக்கு தரப்படுவதில்லை. அதுவே இந்த சிகிச்சையின் தனிச் சிறப்பு” என்கிறார்.

மாற்று மருத்துவ முறைகள்

சித்த மருத்துவம், ஆயுர்வேதம் ஆகியவற்றுடன் ஜெர்மனியில் உருவான ஹோமியோபதி, இஸ்லாமிய ஹக்கீம்கள் கையாளும் யுனானி ஆகிய அனைத்துமே இந்தியர்களுக்குப் பழக்கமானவை. மாற்று மருத்துவமுறைகள் என்று இவற்றுக்குப் பெயர். அலோபதியில் பல நோய்களுக்கு மருந்து கிடையாது என்பது புரிந்தவர்கள் மாற்று மருத்துவ முறைகளை நாடி வருகிறார்கள். ஆயுர்வேதம் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பரவியிருந்தாலும் கேரளத்தில் அது மிகப் பெரிய வளர்ச்சியையும் ஆதரவையும் பெற்றுள்ளது.

கோப்புப் படம்
கோப்புப் படம்

தமிழகத்தில் தலைசிறந்த சித்த மருத்துவர்கள் இப்போதும் இருக்கிறார்கள். நாடியைப் பார்த்து நோயின் தன்மை, தீவிரத்தைச் சொல்லிவிடுவார்கள். எலும்பு முறிவுகளுக்குப் பச்சிலை மருந்து தந்து குணமாக்கும் பாரம்பரிய எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர்களும் இருக்கிறார்கள். ஆஸ்துமாவுக்கு மீன் மருந்து தருவது, நரம்பு நோய்களுக்கு – குறிப்பாக பக்கவாதம் வராமலிருப்பதற்கு மருந்து தருவது என்று தென்னிந்தியாவில் பாரம்பரிய மருத்துவ மனைகள் பல குடும்பங்களால் நடத்தப்படுகின்றன. மருத்துவ சுற்றுலா மையமாக இந்தியா மாறிக்கொண்டிருக்கிறது. ஆங்கில மருத்துவமுறையுடன் ஆயுர்வேதமும் இப்போது பலரையும் ஈர்க்கிறது.

பிரதமர் மோடியிடம் வேண்டுகோள்

மகளை ஸ்ரீதரீயம் மருத்துவமனைக்கு முதல் முறையாக அழைத்து வந்தபோது ரெய்லா ஒடிங்கா மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தார். மகளுக்குப் பார்வை மீண்டதும் உணர்ச்சி மேலிட்டு கண்ணீர் வடித்தார்.

கேரளத்திலிருந்து நைரோபி திரும்புவதற்கு முன்னால், கடந்த ஞாயிற்றுக்கிழமை தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார் ரெய்லா. ஆயுர்வேத கண் சிகிச்சை முறை குறித்து உலகின் அனைத்து நாடுகளும் அறியுமாறு நடவடிக்கை எடுங்கள் என்று மோடியிடம் உரிமையுடன் கேட்டுக்கொண்டார்.

அடுத்து அதிபர் தேர்தலில் போட்டியிடும் ரெய்லா, அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் கென்யத் தலைநகர் நைரோபியில் மருத்துவமனையைத் திறந்து கென்யர்கள் அங்கேயே நவீன சிகிச்சைகளை ஆயுர்வேதம் மூலம் பெற வழிசெய்வேன் என்று உறுதி அளித்திருக்கிறார்.

Related Stories

No stories found.