வைரல் பாட்டியை புகைப்படம் எடுத்தவரின் இன்றைய பரிதாப நிலை!

அனைத்தையும் இழந்து ஆதரவற்று நிற்கும் ஜாக்சன் ஹெர்பி
வைரல் பாட்டியை புகைப்படம் எடுத்தவரின் இன்றைய பரிதாப நிலை!
வேலம்மாள் பாட்டி

ஒரே புகைப்படத்தில் வைரல் ஆன புகைப்படக் கலைஞர் ஜாக்சன் ஹெர்பி, இப்போது தான், குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதாக அவலக்குரல் எழுப்புகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் பிரச்சினைகளை கண்டுகொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை எழுப்புகிறார்.

நாகர்கோவிலைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஜாக்சன் ஹெர்பி, தன் புகைப்படங்களால் கவனத்துக்குள்ளானவர். இவர் கரோனா காலத்தில் அதீத சிரத்தை கொண்டு எடுத்திருந்த படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டன. நாகர்கோவில் மாநகராட்சி புகைப்படக் கலைஞராகவும் இருந்த ஜாக்சன் ஹெர்பி, கரோனா நோயாளிகளை அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் முகாமுக்கே சென்று படங்கள் எடுத்தது, கரோனா நோயாளிகளை எரியூட்டும் படங்கள் எடுத்தது என வெகுவாகப் பேசப்பட்டார்.

இந்நிலையில், தமிழக அரசு கரோனாவால் மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்துவந்த நிலையில் அனைத்துக் குடும்ப அட்டைதாரருக்கும் 2 தவணைகளாக தலா ரூ. 2 ஆயிரம் மற்றும் மளிகைப்பொருட்களை வழங்கியது. இந்தப் பரிசுப்பொருட்களை வாங்கிச் சென்ற வேலம்மாள் பாட்டியை, ஜாக்சன் ஹெர்பி புகைப்படம் எடுத்திருந்தார். 'இந்தச் சிரிப்பே நம் ஆட்சியின் சிறப்பு’ என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இந்த புகைப்படத்தை தன் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அந்தப் புகைப்படம் பெரிய அளவில் வைரலானது. இதனால் வேலம்மாள் பாட்டிக்கு அரசு முதியோர் உதவித்தொகையும் கிடைத்தது. ஆனால், வேலம்மாள் பாட்டியை புகைப்படம் எடுத்த ஜாக்சன் ஹெர்பியோ, தான் இப்போது வாழ்வாதாரமே இழந்து நடுத்தெருவில் நிற்பதாகப் புலம்புகிறார்.

இதுகுறித்து காமதேனு இணையதளத்திடம் ஜாக்சன் ஹெர்பி கூறும்போது, “நாகர்கோவிலில் ஒரு சிறுபத்திரிகையில் வேலைசெய்தேன். கூடவே, நாகர்கோவில் மாநகராட்சி புகைப்படக் கலைஞராகவும் இருந்தேன். பணியில் எப்போதுமே அளவுக்கதிகமாக ரிஸ்க் எடுப்பேன். அதனால்தான் எனக்கு மாநகராட்சி புகைப்படக்கலைஞர் பணி வாய்ப்புக் கிடைத்தது. மாநகராட்சி புகைப்படக்காரரின் பணியே ஆட்சியில் யார் இருந்தாலும் அவர்களுக்கு ஆதரவான படங்களையும், மக்கள் நலத்திட்டங்களை எடுத்துக்கூறும் படங்களையும் எடுப்பதுதான். அப்படித்தான் நானும் இயங்கிவந்தேன்.

இந்நிலையில், என் புகைப்படத்தை முதல்வரே பகிர்ந்ததால் நானும் அதனால் வைரல் ஆனேன். முதல்வர் நேரில் சந்திக்க நேரம் கொடுத்தார். நான் எடுத்த வேலம்மாள் பாட்டியின் புகைப்படத்தை அவருக்கு பரிசாகக் கொடுத்தேன். பரபரப்பான வேலைசூழலுக்கு மத்தியில் என்னிடம் சில நிமிடங்கள் முதல்வர் பேசினார். அதன்பின் என் வாழ்வு வசந்தமாகும் என நான் நினைத்துக் கொண்டிருந்தபோதே, இருள் சூழ்ந்துவிட்டது.

சென்னையில் இருந்து ஊருக்கு திரும்பிய சில நாள்களிலேயே மாநகராட்சி புகைப்படக் கலைஞர் என்னும் பொறுப்பில் இருந்து என்னை நீக்கிவிட்டனர். திடீரென நான் வேலை செய்த பத்திரிகையில் இருந்தும் நீக்கிவிட்டார்கள். இதனிடையே ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவர், சென்னையில் உனக்கு அரசு வேலை தருகிறோம் என அழைத்தார். நானும் நாகர்கோவிலில் வசித்துவந்த சொந்த வீட்டை குத்தகைக்கு விட்டுவிட்டு, அந்தப் பணத்தில் சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்தேன். மனைவி, 2 குழந்தைகளுடன் சென்னையில் குடியேறினேன். நேர்முகத்தேர்விலும் கலந்து கொண்டேன். அடுத்த மாதம் பணியில் சேரச் சொன்னார்கள். அரசு புகைப்படங்களை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். ஆனால், திடீரென அழைத்து, ‘உங்களுக்கு வேலைதர முடியாது. உடனே ஊருக்கு கிளம்பிச் சென்றுவிடுங்கள்’ எனச் சொல்கிறார்கள். 3 வயதிலும் குறைவான 2 குழந்தைகளை வைத்துக்கொண்டு சென்னையில் ஒவ்வொரு நாளையும் கடன்வாங்கித் தான் நகர்த்திக் கொண்டிருக்கிறேன். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு என் நிலைபற்றித் தெரியாது. தெரிந்தால் அவர் நிச்சயம் உதவுவார். ஒரு உண்மையான கலைஞனை அவர் கைவிட மாட்டார்.

முதல்வருடன் ஜாக்சன் ஹெர்பி
முதல்வருடன் ஜாக்சன் ஹெர்பி

நான் என் அவலம் குறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு கொடுத்தேன். அதையும் யாரும் வாங்கவில்லை. வெட்கத்தை விட்டுச் சொன்னால், குழந்தைகளுக்கு பால்வாங்கிக் கொடுக்கக் கூட கடன்தான் வாங்குகிறேன். என்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்பதையே புரிந்துகொள்ள முடியவில்லை. இப்போது சிலர் நான் அதிமுக, பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாகச் சொல்கிறார்கள். மாநகராட்சி புகைப்படக் கலைஞரான நான் ஆளும்கட்சி சார்ந்துதான் இயங்க முடியும் என்னும் புரிதல்கூட இல்லாமல் என்னை துரத்திக்கொண்டிருப்பது அதிர்ச்சியூட்டுகிறது. குடும்பத்தோடு தற்கொலை செய்யும் முடிவுக்கு நம்மை நகர்த்திவிடுவார்களோ என்ற அச்சமும் எழுகிறது.

வேலம்மாள் பாட்டி இப்போது நன்றாக புன்னகைக்கிறார். ஆனால், அவரைப் புகைப்படம் எடுத்த நான் தினம், தினம் அழுதுகொண்டிருக்கிறேன். பிடிஐ செய்தி நிறுவனத்திலும் ஃப்ரீலான்ஸ் முறையில் புகைப்படக்கலைஞராக இருந்தேன். அதையும் விட்டுவிட்டுத்தான் சென்னைக்குப் போனேன். இப்போது என் அடையாளங்கள் அனைத்தையும் அழித்துவிட்டனர்” என புலம்பினார்.

பாட்டியின் புகைப்படம் வைரல் ஆன நேரத்தில் காமதேனு இணைய இதழில் பேட்டிக் கொடுத்திருந்த ஜான்சன் ஹெர்பி, ‘வேலம்மாள் பாட்டியின் மகன் தங்கள் காருக்கு டிரைவராக இருந்தார். குடும்பத்தோடு வெளியூர் போய்க் கொண்டிருந்தோம். பாட்டியின் மகன் காரை ஓட்டும்போது தூங்கிவிட்டார். கார் விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் என் உறவுக்கார வழக்கறிஞரின் நாக்கு போய்விட்டது. எனக்கும் தலையில் பலத்தகாயம். பள்ளிக்கூடம் போகும்போது மண்டைக்கட்டு என சக மாணவர்கள் கேலிசெய்தனர். அந்த கேலிக்கு பயந்தே பள்ளிப்படிப்பை விட்டேன். வேலம்மாள் பாட்டியின் மகனால் என் வாழ்க்கை போனது. அதை வேலம்மாள் பாட்டியின் புன்னகையால் மீட்டுத்தந்திருக்கிறார்’ என நம்பிக்கைத் ததும்ப பேசினார். ஆனால், இப்போது வேலம்மாள் பாட்டியின் புன்னகை புகைப்படமே ஜாக்சன் ஹெர்பியின் வாழ்வில் மீண்டும் சோகத்தை படரவிட்டுள்ளதாக நினைவுகூர்கிறார்.

தற்போதும் சென்னையிலேயே இருக்கும் ஜாக்சன் ஹெர்பி, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க தொடர்ந்து முயற்சித்து வருவதாகச் சொல்கிறார். நல்ல புகைப்படங்களைப் பேசும்படம் என்பார்கள். அப்படி, ஒரு பேசும்படத்தை எடுத்தவரின் இந்த புலம்பல் செய்தி எட்ட வேண்டியவர்களின் காதில் எட்டட்டும்!

Related Stories

No stories found.