அகமகிழ்ந்திருங்கள்!: ஆனந்த் மஹிந்திராவின் அட்டகாச வாழ்த்து!

ஆனந்த் மஹிந்திரா
ஆனந்த் மஹிந்திரா

சமூக ஊடகங்களில் தீவிரமாக களமாடும் தொழிலதிபர்களில் ஆனந்த் மஹிந்திராவும் ஒருவர். மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த், அன்றாடம் பகிரும் பதிவுகளுக்கென்று தனி ரசிகர்கள் உண்டு.

கிறிஸ்துமஸ் தினமான இன்றும் ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார் ஆனந்த் மஹிந்திரா. ஆப்பிரிக்க மண்ணின் அறியப்படாத கிராமம் ஒன்றில் எடுக்கப்பட்ட மிக எளிமையான வீடியோ. பின்னணியில் கிறிஸ்துமஸ் பாடல் ஒலிக்க வாண்டுகள் ஒன்றுகூடி உற்சாகமாக வாயசைத்தப்படி, துள்ளாட்டம் போடுகிறார்கள்.

வீடியோவை ஓடவிட்டால் அது முடியும் வரை பார்வையை திருப்ப முடியாது. ஒரு முறையோடும் நிறுத்த முடியாது. அப்படியொரு குதூகலம் அவர்களின் நடனத்திலும், முகத்திலும் கொப்பளிக்கிறது. மிகப்பெரும் மேடை இசை நிகழ்ச்சி போன்ற பாவனையின் மத்தியில் அவர்கள் ஆடுகிறார்கள். பிளாஸ்டிக் வாளிகளை கவிழ்த்துப்போட்டு ட்ரம்ஸ் வாசிக்கிறது ஒரு சுட்டி. இன்னொரு சிறுவன் மரப்பலகையில் கீபோர்ட் வரைந்து அத்தனை இயல்பாக அதனை ‘வாசிக்கிறான்’. இன்னும் சில சிறுமிகள் கழியில் காலி பிளாஸ்டிக் பாட்டிலை நட்டுவைத்து ‘பாடுகிறார்கள்’. அத்தனைக்கும் ஒரு சிறார் குழு சீரான நடன அசைவுகளுடன் கும்மாளமாய் குதித்தாடுகிறது.

வீடியோவின் பிரதான சிறப்பாக இசை, நடனத்தைவிட அத்தனை பேர் முகத்திலும் குடிகொண்டிருக்கும் மகிழ்ச்சி ஈர்க்கிறது. சந்தோஷம் என்பது வெளியிலிருந்து வருவதல்ல; உள்ளிருந்து பிரவாகமாய் பிறப்பது என்பதை சொல்லாமல் சொல்கின்றன அந்த வெகுளி முகங்கள். வீடியோவை பகிர்ந்திருக்கும் ஆனந்த் மஹிந்திராவும் அவ்வாறே தனது கருத்தையும் பிரதிபலித்திருக்கிறார். ‘மில்லியன் வார்த்தைகளில் விளக்க வேண்டியதை இந்த ஒற்றை வீடியோ சொல்கிறது. மகிழ்ச்சிக்கு மூலதனம் தேவையில்லை’ என்னும் பொருளில் தனது கருத்தையும் உடன் பகிர்ந்திருக்கிறார்.

ஆனந்த் மஹிந்திராவின் வீடியோவும், கருத்தும் இன்றைய தினத்தின் இந்திய பிரபலங்களின் ஹிட் பதிவுகளில் ஒன்றாக்கி இருக்கிறது. அவரது பதிவின் கீழ் கருத்து தெரிவித்த பலரும் மகிழ்ச்சி குறித்தும், அதன் அவசியம் குறித்தும், மகிழ்ச்சியாக இருப்பதற்கு வெளிக்காரணி எதுவும் தேவையில்லை என்றும் சிலாகித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in