இளைஞர்கள் இந்தத் தொழிலில் நம்பி இறங்கலாம்...

சாதிக்கத் துடிப்பவர்களுக்கு சாளரம் திறக்கும் சரவணன்!
சரவணன்
சரவணன்

பொறியியல் படித்துவிட்டு ஐடி கம்பெனிகளில் வேலை பார்த்தவர்கள் எல்லாம் அழுத்தம் நிறைந்த அந்த வேலையை உதறிவிட்டு விவசாயத்தில் இறங்கிவரும் இந்தக் காலத்தில், பொறியியல் படித்திருந்தாலும் அது தொடர்பான வேலைக்காக அப்ளிகேஷன் போட்டுவிட்டுக் காத்திருக்காமல் தங்களது பாரம்பரியத் தொழிலான நெசவுத் தொழிலைக் கற்று தடம்பதித்து வருகிறார் சரவணன்.

நெசவு செய்யும் சரவணன்...
நெசவு செய்யும் சரவணன்...

பழநிதான் சரவணனுக்கு பூர்விகம். அதிகம் சம்பாதிக்கலாம் என்ற ஆர்வத்தில் மின்னணு தகவல் தொடர்பில் பொறியியல் படித்து முடித்த சரவணன், நான்கு ஆண்டுகள் சென்னையில் இ-பப்ளிஷிங் நிறுவனம் ஒன்றில் பணியாற்றினார். ஆனால், அந்தப் பணியானது எதிர்பார்த்த வருமானத்தை ஓரளவுக்குக் கொடுத்தாலும் ஏங்கித் தவித்த நிம்மதியைத் தரவில்லை.

ஒருகட்டத்தில் சென்னை வாழ்க்கையை விரும்பாத சரவணன் சொந்த ஊருக்கே போய்விடுவது என தீர்மானித்தார். அங்குபோய் பிழைப்புக்கு என்ன செய்வது என யோசித்தவர், மரபுத் தொழிலாளான நெசவுத் தொழிலை படித்துக்கொள்ள முடிவெடுத்தார். அதற்காக, காகர்நாடக மாநிலம் மாண்டியாவிலுள்ள மேல்கோட்டை கிராமத்தில் தங்கியிருந்து நெசவுத் தொழிலை முறைப்படி கற்றார். ஓரளவுக்கு தன்னம்பிக்கை வந்ததும் தமிழகம் திரும்பிய சரவணன், வாசுதேவநல்லூர் அருகே 'பொதிகைச் சோலை' என்ற பசுமை கிராமத்தில் தறிக்கொட்டகை அமைத்து நெசவுத் தொழிலை முறைப்படி தொடங்கினார். இப்படித்தான் கைநிறைந்த வருமானத்தையும் மனம் நிறைந்த நிம்மதியையும் தனக்குச் சாத்தியமாக்கி இருக்கிறார் சரவணன்.

தனது வெற்றிக் கதையை உற்சாகமாக நம்மிடம் பகிர்ந்து கொண்டார் சரவணன். “இயற்கை விவசாயத்தின் மீதுதான் எனக்கு அதிகம் நாட்டம். அதையும் ஓரளவுக்கு நான் படித்தும் இருக்கிறேன். ஆனால், அதற்கான நிலம் இல்லாததால் என்னால் அதில் ஈடுபடமுடியல. அதுக்கு மாற்றாகத்தான் நமது பாரம்பரிய தொழிலான நெசவுத் தொழிலைத் தேர்வு செய்தேன். முறைப்படி அந்தத் தொழிலைக் கத்துக்கிட்டு 'துகில்' என்ற பேரில் நெசவு உற்பத்தியை ஆரம்பிச்சேன்” என்கிறார் சரவணன்.

வீட்டில் பெரிய அளவில் எதிர்பார்ப்பும் எதிர்ப்பும் இல்லாததால் ஓரளவுக்கு நிம்மதியாக தொழிலை நகர்த்த முடிவதாகச் சொல்லும் சரவணன், தன்னைப் போல ஆர்வத்துடன் நெசவு கற்றுக்கொள்ள வரும் இளைஞர்களுக்கு இந்தத் தொழிலைக் கற்றும் தருகிறார். சாப்பாட்டுச் செலவுக்கு மட்டும் சிறு தொகை கொடுத்தால் போதும். முழுக்க முழுக்க இலவசமாக இந்தத் தொழிலைக் கற்றுத் தருகிறார் சரவணன்.

சரவணன்
சரவணன்

தொடர்ந்து நம்மிடம் பேசிய சரவணன், “ஐடி கம்பெனியை விட நெசவுத் தொழிலில் வருமானம் குறைவு தான். இருந்தாலும் இதிலும் புதுமைகளைப் புகுத்தி கமர்ஷியலாக இதை சக்சஸ் ஆக்கினால் கூடுதல் வருமானம் ஈட்டலாம். அதற்கான வேலைகளை இப்போ பண்ணிட்டு இருக்கோம். நான் நெசவு படித்த மாண்டியாவின் மேல்கோட்டை நெசவாளர்கள் இந்தத் தொழிலில் கமர்ஷியலா சாதிச்சிருக்காங்க. இப்போதைக்கு எங்களுக்கு ஓரளவுக்கு வருமானம் இருக்கு. இதை இன்னும் அதிகப்படுத்தணும்னா சட்டைத் துணி, சேலை உள்ளிட்ட பல வகையான ஆடைகளை தயாரிக்கத் தேவையான தரமான துணிகள நெசவு செய்யணும். அப்படி செய்தால் நல்ல லாபம் ஈட்டலாம்.

நான் இதை வெறும் தொழிலாக மட்டும் பார்க்கல. இதை வாழ்வியலாகவே உணர்கின்றேன். இயற்கை விவசாயத்தை நோக்கி அதிகமான இளைஞர்கள் வரத் தொடங்கினாலும், மரபு தொழிலான நெசவை நோக்கிய இளைஞர்களின் வருகை குறைவு தான். விசைத்தறியில் தயாராகும் துணிக்கும் கைநெசவில் தயாராகும் துணிக்கும் நிறையவே வேறுபாடு இருக்கும். துணியைத் தொட்டுப் பார்க்கும்போதே அந்த வித்தியாசத்தை நாம் உணர முடியும். அதுபோல, கைநெசவில் தயாராகும் பருத்தி ஆடையை அணியும் போது கம்பீரமாக உணர முடியும்.

நம்ம ஊர் தட்பவெட்ப நிலைக்கு கைநெசவில் தயாராகும் பருத்தி ஆடைகள் தான் பெஸ்ட்னு சொல்லுவேன். இதில் சேர்க்கப்படும் சாயமானது நம் உடலுக்கு மட்டுமல்லாது... இயற்கைக்கும் எந்தக் கேட்டையும் விளைவிக்காது. பனைத் தொழில் வளர்ச்சிக்காக எப்படி தமிழக அரசு உதவுகிறதோ அது போல, நெசவுத் தொழிலுக்கும் இன்னும் கொஞ்சம் கூடுதலாக அரசு கைகொடுக்கணும். இளைஞர்களை இந்தத் தொழிலை நோக்கி ஈர்க்கும் வகையில் சிறப்புத் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த தமிழக அரசு முன்வரணும். அப்படிச் செய்தால் என்னைப் போல இன்னும் ஏராளமான இளைஞர்கள் இந்தத் தொழிலுக்குள் வருவார்கள்” என்றார்.

பருத்திப் பஞ்சை வாங்கி நூல் நூற்பது, நெய்த துணிகளுக்கு இயற்கைச் சாயம் பூசுவது உள்ளிட்ட நுட்பங்களையும் கற்றுக் கொண்டால் அதிலும் தனியாக லாபம் ஈட்டலாம் என்று சொல்லும் சரவணன், கைநெசவில் உருவாக்கும் துணிகளை நாமே ஆடைகளாக தைத்து மதிப்புக்கூட்டியும் பொருளீட்ட முடியும் என்று இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை தருகிறார்.

படித்த வேலைக்குத்தான் போவேன் என்று சொல்லிக்கொண்டு வீட்டுக்குப் பாரமாய் உட்கார்ந்திருக்காமல் பிடித்த வேலையைப் படித்துக்கொண்டு சாதிப்பேன் என்று சொல்லும் சரவணனைப் போன்ற இளைஞர்கள் இன்னும் ஏராளமாய் உருவாகட்டும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in