“மறு உலகத்தில் அவள் அன்பை யாசிப்பேன்” -தோழியின் இழப்பில் உருகும் யாஷிகா!

“மறு உலகத்தில் அவள் அன்பை யாசிப்பேன்” -தோழியின் இழப்பில் உருகும் யாஷிகா!

வாகன விபத்தில் தன்னை விட்டுப் பிரிந்த ஆருயிர் தோழிக்கு, அவரது பிறந்தநாளன்று உருக்கமான மடல் ஒன்றைப் பொதுவெளியில் பகிர்ந்து, அதனை வாசிப்பவர்களையும் உருக வைத்துள்ளார் நடிகை யாஷிகா.

கடந்த ஆண்டின் மத்தியில் நேரிட்ட கோர விபத்தொன்றில் தனது ஆருயிர் தோழியை இழந்தார் நடிகை யாஷிகா. நண்பர்களுடனான இரவு நேர உல்லாசப் பயணத்தின் இடையே எமனாய் குறுக்கிட்ட விபத்தில் யாஷிகாவும் படுகாயமடைந்தார். இடுப்பு, கால், முதுகு என பல இடங்களில் பலத்த காயமுற்று படுத்தபடுக்கையாக முடங்கினார். எலும்புமுறிவு காரணமாக யாஷிகா இனி அவ்வளவுதான் என்று உலவிய கணிப்புகளை பொய்யாகி, எழுந்துவர நீண்ட மருத்துவப் போராட்டத்தை அவர் மேற்கொள்ள வேண்டியிருந்தது. உடல்ரீதியான இந்த போராட்டத்தில் மத்தியில், தோழியைப் பலிகொடுத்த சோகமும் அவரை மனரீதியாக வெகுவாய் வாட்டி வந்தது.

ஒருவாறாக தன்னை முடக்கிய நோவுகள் அனைத்திலிருந்தும் மீண்டதுடன், இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளார் யாஷிகா. நிற்க முடியாது, நடக்க முடியாது என்றெல்லாம் பரவிக்கிடந்த புரளிகளை அடித்துநொறுக்கும் வகையில், நடனமாடியும், மாடல் ஷூட் நடத்தியும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். ஆனபோதும் அவ்வப்போது தன்னைப் பிரிந்துசென்ற ஆருயிர் தோழியின் நினைவுகளில் மூழ்கி விடுவார். அந்த வகையில், நேற்றைய தினம் அந்த தோழியின் பிறந்தநாளாகவும் அமைந்துவிட, இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட பழைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தபடி, உருக்கமான பதிவு ஒன்றையும் உடன் சேர்த்திருந்தார்.

“நீ என்றுமே எனக்கு ஒளியாக இருந்திருக்கிறாய். இன்று உனது பிறந்தநாள். ஆனால் நீ இன்று என்னுடன் இல்லை என்பதை என் மனம் நம்ப மறுக்கிறது. அந்த சோகம் உன் வாழ்வில் நடந்ததற்காக நான் மிகவும் வருந்துகிறேன். உனது புன்னகையை மிஸ் செய்கிறேன். உன் சிரித்த முகத்தை இப்போதும் பார்க்க வேண்டும் போல இருக்கிறது.

மருத்துவ சிகிச்சையில் யாஷிகா
மருத்துவ சிகிச்சையில் யாஷிகா

உன்னுடனான உரையாடல்கள், உனது குழந்தைத்தனமான பேச்சு என அனைத்தையும் இப்போது மிஸ் செய்கிறேன். உன் மீது நம்பிக்கை வைத்த அளவுக்கு வேறு யாரையும் நம்பியிருப்பேனா என தெரியவில்லை. நான் பத்தாவது படிக்கும்போது, தேர்வில் என்னருகில் அமர்ந்து பாடங்கள் சொல்லிக் கொடுத்தாய். இத்தனை வருடத்தில் நாம் சண்டையே போடவில்லை என்பது இன்னும் எனக்கு நெகிழ்ச்சியாக இருக்கிறது.

இப்பொழுது நீ ஒளிரும் நட்சத்திரமாக என்னை வழிநடத்திக் கொண்டிருக்கிறாய். உன்னுடைய ஒவ்வொரு கனவையும் நான் நிறைவேற்ற வேண்டும். நீ இல்லாமல் உன் குடும்பம் எப்படி அந்த வலியை கடந்து செல்கிறார்கள் என தெரியவில்லை. நீ என்னை குழந்தையில் இருந்து பெண்ணாக மாறியதுவரை கூடவே இருந்திருக்கிறாய். என் வளர்ச்சியையும் பார்த்துள்ளாய். வெளியிலும் உள்ளும் நான் யார் என்பதை நீ அறிவாய். நான் ஒரு வார்த்தை பேசினால், நீ அதை வாக்கியமாக முடிப்பாய். இது போன்ற உண்மையான ஒரு அன்பை நான் எங்கும் பார்க்க முடியாது. இனிமேலும் அப்படி ஒரு அன்பை கண்டுபிடிக்கவும் முடியாது. பிறந்தநாள் வாழ்த்துகள் ஸ்கூபி டூபி!” என நெகிழ்ச்சியாக தனது அன்பை வெளிப்படுத்தி உள்ளார் யாஷிகா.

தனது இழந்த தோழியாக, யாஷிகா பகிர்ந்திருக்கும் புகைப்படம்
தனது இழந்த தோழியாக, யாஷிகா பகிர்ந்திருக்கும் புகைப்படம்

மேலும், “மறு உலகில் நாம் சந்திப்போம். அதுவரை இங்கு உன்னையும் உன் நினைவுகளையும் நான் மிஸ் செய்கிறேன். உன்னுடைய குரலை மீண்டும் மீண்டும் அலைபேசியில் கேட்டு கொண்டிருக்கிறேன். நான் உன்னை எடுத்த சில புகைப்படங்களை இங்கு பகிர்கிறேன். நீ இங்கு இல்லை. ஆனால், இந்தப் புகைப்படத்தில் உள்ள உன் முகம் நீ இருப்பது போன்ற உணர்வை எனக்கு கொடுக்கிறது. நீயும் எங்களுடன் இருப்பாய் என்று நம்புகிறேன். உன்னை நான் அறிந்ததே என் வாழ்வின் வரம்தான். கடவுள் உனக்கு பதிலாக என்னை அழைத்திருக்க வேண்டும். உன்னை இப்பொழுது கட்டியணைக்க வேண்டும் போல உள்ளது” என அந்த நீண்ட அந்தப் பதிவில் தனது உணர்வுகளைப் பகிர்ந்து மனம் ஆறியுள்ளார் யாஷிகா.

யாஷிகாவின் இந்தப் பதிவுக்கு அவரது ரசிகர்கள் ஆறுதல் கூறி கமென்ட் செய்து வருகின்றனர். அவர்களில் பலரையும் யாஷிகாவின் பதிவு வெகுவாய் பாதித்துள்ளது. அனைவருமே தம்மில் நெருக்கமான ஓர் உறவையோ, நட்பையோ அகாலத்தில் இழந்திருப்பார்கள். அதையொத்த இன்னொருவரின் உருக்கமான உணர்வுகளை வாசிக்கும்போது, நம்முடைய இழப்பும், அதன் சோகங்களும் மனதில் வந்து மண்டும். அப்படியான பாதிப்பை யாஷிகாவின் பதிவை வாசித்தவர்கள் உணரத்தலைப்படவே, அப்பதிவுக்கான கமென்டுகளில் பலரது உருக்கங்களும் எதிரொலித்து வருகின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in