தந்தையும் தனயனும் கட்டிய தனித்துவ வீடு!

கழிவுகளைக் கலைநயமாக்கிய கட்டுமானம்
வீட்டின் முகப்புத் தோற்றம்
வீட்டின் முகப்புத் தோற்றம்

கட்டுமானப் பொறியாளர்கள் பக்குவமாகப் பார்த்துக் கட்டும் பல வீடுகளைப் பார்த்திருப்போம். கேரளத்தில் தந்தை, மகன் இருவர் மட்டுமே சேர்ந்து எல்லாப் பணிகளையும் அவர்களே செய்து, கட்டியெழுப்பியுள்ள வீடு பெரும் கவனம் ஈர்த்திருக்கிறது. பெரும்பாலும் வீட்டுவேலை செய்கையில், கழிவு என ஒதுக்கித் தள்ளப்படும் பொருட்களைப் பிரதானமாகக் கொண்டே கட்டப்பட்டிருக்கும் இந்த இல்லம், மலையாளிகளின் மனதில் குடிகொண்டுவிட்டது. ‘குறைவான செலவில் நிறைவாகக் கட்டப்பட்ட வீடு’ என சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

மீதம் வந்த மரப்பலகையில் இருந்து டைனிங் டேபிள்
மீதம் வந்த மரப்பலகையில் இருந்து டைனிங் டேபிள்

பத்தனம்திட்டா மாவட்டத்தின் மலப்பள்ளி பகுதியில் இருக்கிறது இந்த இல்லம். 3 சென்ட் பரப்பில் 1,556 சதுர அடியில் கட்டப்பட்டிருக்கும் இந்த வீட்டினுள் நமக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. காற்றும், வெளிச்சமும் மிதமிஞ்சிக் கிடைக்கும் வகையில், பார்த்துப் பார்த்துக் கட்டி எழுப்பியிருக்கும் இந்த வீட்டில், 4 படுக்கை அறைகள் இருக்கின்றன. செடிகளும் கொடிகளுமாக வீட்டின்மேல் படர்ந்து பசுமை போர்த்தி, வாசலே வண்ணமயமாக வரவேற்கிறது.

அடிப்படையில் உள்கட்டமைப்பு வடிவமைப்பாளரான ரோகித், இந்த இல்லத்தை தனது தந்தை தங்கப்பனோடு சேர்ந்து கட்டியிருக்கிறார். இந்த வீட்டின் கட்டுமானம் தொடங்கி, எலெக்ட்ரிக்கல், பிளம்பிங் என ஒட்டுமொத்தப் பணியிலும் இவர்கள் இருவரை தவிர வேறுயாரும் ஈடுபடவில்லை. அதனாலேயே இந்த வீட்டைக் கட்டி முடிக்க முழுதாக 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. தன் வீட்டின் சிறப்பம்சங்கள் குறித்து சிலாகிப்புடன் பேசத் தொடங்கினார் ரோகித்.

பழைய சைக்கிள் அழகூட்டும் வரவேற்பு அறையில்...
பழைய சைக்கிள் அழகூட்டும் வரவேற்பு அறையில்...

“முதலில் காற்றோட்டமுள்ள வீடாக இருக்க வேண்டும் என முடிவெடுத்தேன். இதனால் 5 அடி அகலம், 7 அடி நீளத்தில் ஜன்னல் போட்டேன். வீட்டின் முகப்பில் தோட்டங்களில் முள்வேலிக்குப் போடப் பயன்படுத்தும் கல்லைத்தான் வீட்டு வாசல்வரை போட்டிருக்கிறேன். இது பார்க்க அழகாகவும் இருக்கும். அதேநேரம் மழை நேரத்தில் வழுக்கவும் செய்யாது. வீட்டின் வரவேற்புப் பகுதியில் பெரிய சோபா செட்கள் போட்டால் அதிகம் செலவு பிடிக்கும். அதேநேரம் அதைவிட அழகூட்டும் வகையில் ஒரு பழைய சைக்கிளை கொண்டு வந்து நிறுத்தினேன். அதை ஆக்கர் கடையில் இருந்து 200 ரூபாய் கொடுத்து வாங்கினேன். அதன் சீட்டைக் கழற்றிவிட்டு, வீட்டில் மரவேலைகள் செய்தபோது மிச்சம்வந்த தடியால் அதன் மீது பலகை அமைத்தேன். அந்தப் பலகையின் மேல் செடிகளை வைத்ததும் அந்த இடத்திற்கே ‘ராயல் லுக்’ வந்துவிட்டது. இதேபோல் மிச்சம் வந்த பலகைகளை பரணில் கோர்த்துவிட்டு அதன் மேல் செடிகளை வைத்திருக்கிறேன். அதிலும் தொட்டிக்குப் பதிலாகப் பழைய கால பரணைப் பயன்படுத்தியிருக்கிறேன். சாக்குப்பையை சிமென்டில் குழைத்து மீன் தொட்டியாக்கிவிட்டேன். இதேபோல் வீட்டில் இருந்த மீன் சட்டியெல்லாம் இப்போது பூந்தொட்டியாகிவிட்டன” என அவர் ஒவ்வொரு பகுதியாகச் சுற்றிக்காட்ட, நமக்கும் புத்துணர்வு தொற்றிக்கொள்கிறது.

வீணான மரத்துண்டில் வீட்டின் ஜன்னல்
வீணான மரத்துண்டில் வீட்டின் ஜன்னல்

வீணான மரத் துண்டில் ஜன்னல்

பொதுவாகவே வீடு கட்டுவதில் ஜன்னல், கதவு, வீட்டின் முகப்புப் பகுதியில் மர இருக்கைகள் ஆகியவைதான் அதிக செலவை இழுப்பதாக இருக்கும். ஆனால், அந்தச் செலவையும் ஜீரோ பட்ஜெட்டில் எதிர்கொண்டிருக்கிறார் ரோகித். தன் வீட்டின் ஜன்னல்கள், இருக்கைகள், டைனிங் டேபிள் என அத்தனையும் வேறு பொருட்கள் செய்யும்போது வீணானதாக ஒதுக்கப்பட்ட பலகைகளில் இருந்தே உருவாக்கியிருக்கிறார். வீட்டில் ஜன்னல்களில் இப்படித்தான் பழைய வீணான பலகைகள் வரிசை கட்டுகின்றன. ஜன்னல்களுக்குக் கதவு போடாமல் சூரிய ஒளியும், காற்றும் தேவையான அளவுக்குக் கிடைக்குமாறும் அமைத்திருக்கிறார். வீட்டுக்கு வண்ணம் தீட்டிய பெயின்ட் டப்பாவை அழகூட்டி, அதில், மிச்சம் வந்த பி.வி.சி பைப்பையும் இணைத்து தனக்குத் தெரிந்த தொழில்நுட்பத்தைப் புகுத்தி, இரவு விளக்காக்கியிருக்கிறார். இப்படி இந்த வீடு முழுமைக்கும் எளிமையும் புதுமையுமான அம்சங்கள் இனிமை சேர்க்கின்றன.

மாடிப்படியில் கம்பிபோல் இருக்கும் வெள்ளைக் கயிறு
மாடிப்படியில் கம்பிபோல் இருக்கும் வெள்ளைக் கயிறு

நாம் பிரமிப்பாக இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தபோது, மீண்டும் பேசத் தொடங்குகிறார் ரோகித்.

“வீட்டின் மாடிக்குச் செல்லும் பாதையில் பிடிமானத்துக்குக் கம்பி கொடுப்பது வழக்கம். அதற்குப் பதிலாக கயிறு கொடுத்திருக்கிறேன். பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கும். அதேபோல் வீட்டில் சில இடங்களில் கம்பி பயன்படுத்தி இருப்பேன். இந்தக் கம்பியும்கூட வளைந்துவிட்டதாக ஒதுக்கிப்போடப்பட்டிருந்த கம்பிகள்தான். அப்படி வளைந்த கம்பிகளை ஆக்கர் கடையில் விலைக்கு வாங்கிவந்தேன். என் வீட்டின் டிசைனே வளைந்த கம்பிகளாக இருப்பதைப்போல் திட்டமிட்டுக்கொண்டு, அப்படியே அதைப் பயன்படுத்தினேன். வீட்டில் இருந்த மீன் தொட்டி ஒன்றைத்தான் தூணாக மாற்றியிருக்கிறேன். அந்தத் தொட்டியில் இருந்த கல், பாசியெல்லாம் அந்த தூணுக்குள் இருக்கும். மீதம்வந்த பைப்களைக் கொண்டு வீட்டில் அலமாரிகள் அமைத்துள்ளேன். பழைய சைக்கிள் செயினில் பல்ப் இணைத்துக் கொடுத்து அழகூட்டும் பொருளாக வடிவமைத்திருக்கிறேன்.

துணிக்கடை போல்...
துணிக்கடை போல்...
வீணான மரத்துண்டில் இருக்கைகள்
வீணான மரத்துண்டில் இருக்கைகள்

இப்படி வீடு நிறைய, கழிவு என ஒதுக்கித் தள்ளும் பொருட்களைக் கொண்டே அழகூட்டியிருப்பது குறித்து, எனது யூடியூப் தளத்தில் போட்டிருந்தேன். அதைப் பார்த்துவிட்டு மலையாள செய்தி சேனல்களில் இருந்து பலரும் வந்தார்கள். அதனால் என் வீடே வைரல் ஆகிவிட்டது. இப்போது தினமும் 50 பேராவது இந்த வீட்டைச் சுற்றிப்பார்க்க வருகிறார்கள். வீட்டில் 4 படுக்கை அறைகளிலும் கழிப்பிடம், குளியல் அறை இருக்கிறது. பெரிது ஒன்றும், சிறிது ஒன்றுமாக 2 சமையலறைகள். தரைத்தளமும், முதல் தளமுமாக பெரிய வீடுதான். இதுபோக மொட்டைமாடியிலும் ஒரு அறை இருக்கிறது. இத்தனை பெரிய வீட்டையும் வெறும் 20 லட்ச ரூபாயில் கட்டிமுடித்துவிட்டோம். அதற்குக் காரணம், கழிவு என ஒதுக்கிய பொருள்களை மலிவு விலைக்கு வாங்கிப் பயன்படுத்தியதுதான்’’ என்று சொல்லும் ரோகித், “கழிவு என எதுவுமே இல்லை. எதையும் கலைப்பொருளாக மாற்றிவிட முடியும்” என்று புன்னகைக்கிறார்!

வீட்டின் பால்கனியில் இருக்கும் ஊஞ்சலும்கூட, வேண்டாம் என வீசி எறியப்பட்ட பலகைகளின் ஒட்டுக் கூட்டணிதான். அதன் பக்கத்திலேயே மிச்சம் வந்த இரும்பு கம்பிகளைக் கொண்டு கார்ட்டூன் பொம்மையும் ஆக்கியிருக்கிறார் ரோகித். இதேபோல் ஜீன்ஸ் பேன்டை சிமென்டில் குழைத்தும் பூந்தொட்டியாக்கி உள்ளார். வீட்டின் மாஸ்டர் பெட்ரூமில் ஒருபகுதியில் இருக்கும் உடை மாற்றும் அறை, இன்றைய கால துணிக்கடைகளுக்கே சவால் விடுகிறது.

வீடு ஒவ்வொருவருக்கும் பெருங் கனவு. ஒவ்வொரு வீடு கட்டப்படும்போதும் ஏதோ ஒருவகையில் இயற்கை வளங்கள் காவு கொடுக்கத்தான்படுகின்றன. இப்படியான சூழலில், கழிவு என ஒதுக்கித்தள்ளும் மரப் பொருட்களிலிருந்தே தன் வீட்டை கலைநயத்துடன் மிளிரச் செய்திருக்கும் ரோகித் பாராட்டுக்குரியவர்தான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in