உள்ளாட்சியிலும் மகளிரின் வலிமை முழுமையாக வெளிப்படட்டும்!

உள்ளாட்சியிலும் மகளிரின் வலிமை முழுமையாக வெளிப்படட்டும்!

நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், நம்பிக்கையளிக்கும் விஷயமாக நாம் பார்க்க வேண்டியது பெண்களுக்குக் கிடைத்த முக்கியத்துவம். பெண்களுக்கான இடஒதுக்கீடு 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்ட பின்னர் நடந்திருக்கும் முதல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என்பதால், இந்த முறை அதிகமான பெண்கள் தேர்தலில் போட்டியிட முன்வந்தனர். தமிழக வரலாற்றில் அதிகமான பெண்கள் பங்கேற்ற முதல் தேர்தல் என்றும் இதைச் சொல்லலாம்.

எல்லாக் கட்சிகளிலும் சரிபாதியாக இளம் பெண்கள், கல்லூரி மாணவிகள், இல்லத்தரசிகள் வேட்பாளர்களாக முன்னிறுத்தப்பட்டது ஆரோக்கியமான விஷயம். ஆண் வாக்காளர்கள் முன்வைக்கும் வாக்குறுதிகளைக் கேட்டு வாக்களித்துவந்த பெண்களில் பலர், இந்த முறை தாங்களே வாக்குறுதிகளை முன்வைத்தது குறிப்பிடத்தக்க மாற்றம். உள்ளாட்சி அமைப்புகளின் பணி என்பது, அந்தந்தப் பகுதியில் வசிக்கும் குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளை முக்கிய இலக்காகக் கொண்டது. குடும்ப நிர்வாகத்தில் பெரும் பங்கு வகிக்கும் பெண்கள், உள்ளாட்சி நிர்வாகப் பொறுப்புகளில் அதிக அளவில் அமர்வது இவ்விஷயத்தில் ஆக்கபூர்வ மாற்றங்களுக்கு வழிவகுத்திருக்கிறது.

சங்கடங்களும் இல்லாமல் இல்லை. பெண்கள் அதிக அளவில் போட்டியிட்ட இந்தத் தேர்தலில் வாக்களிக்க முன்வந்தவர்கள் குறைவு என்பது ஓர் உறுத்தலான அம்சம். அதேபோல், பெரும்பாலும் அரசியல் கட்சி நிர்வாகிகளின் மனைவி, மகள், சகோதரி போன்றோர் அதிகமாகக் களமிறக்கப்பட்டனர். அந்த வகையில், பெயரளவில் அவர்களை முன்னிறுத்தி ஆண்களே அதிகாரபூர்வமற்ற உள்ளாட்சி நிர்வாகிகளாகப் பணிபுரியும் வாய்ப்புகளும் அதிகம்.

கடந்த காலங்களிலும் இதே போக்கு இருந்துவந்தது. தற்போது, ஆண்களின் ஆதிக்கத்தைக் குறைக்கும் வகையில்தான் 50 சதவீத இடஒதுக்கீடும் வழங்கப்பட்டது. அந்த நோக்கம் சிதைவுறாத வகையில், பெண்கள் சுதந்திரமாகச் செயல்பட ஆண்கள் வழிவிட வேண்டும். பெண்கள் சுயமாக இயங்க தடைகள் இருக்கின்றனவா என்பதைக் கண்காணிக்கவும் ஒரு நிரந்தர ஏற்பாட்டைச் செய்யலாம். அதன் மூலம் பெண் சக்தியின் முழுமையான வலிமையை வெளிப்படச் செய்யலாம்!

ஓவியம்: முத்து

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in