நம்பிக்கையளிக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்!

நம்பிக்கையளிக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்!

நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், பெண்களுக்கும் பட்டியலின சமூகத்தினருக்கும் அளிக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்துகிறது. முக்கியத்துவம் வாய்ந்த சென்னை மாநகராட்சி மற்றும் தாம்பரம் மாநகராட்சியின் மேயர் பதவிகள் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு, நடக்கும் முதல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் எனும் வகையில் கவனம் ஈர்த்திருக்கும் தேர்தல் இது.

குடிநீர் விநியோகம் தொடங்கி சுகாதாரப் பணிகள் வரை பல்வேறு பணிகளை மேற்கொள்வது உள்ளாட்சி அமைப்புகள்தான். அரசின் நலத்திட்டங்கள் கடைக்கோடி குடிமகனுக்கும் முறையாகச் சென்று சேர பாலமாக இருப்பதும் உள்ளாட்சி அமைப்புகள்தான். அரசியல் கட்சிகளின் ஆதிக்கத்தையும் தாண்டி, பொதுநலனில் அக்கறை கொண்ட சாமானியர்களும் உள்ளாட்சித் தேர்தலில் நின்று வெற்றிபெற முடியும். இத்தனை முக்கியத்துவம் கொண்ட ஜனநாயக அமைப்பில், விளிம்புநிலை மக்களுக்கான பிரநிதித்துவம் அர்த்தபூர்வமானது.

உள்ளாட்சி அமைப்புகளின் பணிகளையும், மக்களின் அன்றாடத் தேவைகளையும் முழுமையாகப் புரிந்துகொண்டு பணியாற்றும் திறன் கொண்டவர்கள் பெண்கள். அவர்களுக்கு உள்ளாட்சியில் 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுவது மிக முக்கியமான நகர்வு. இதன் மூலம், கட்சி அரசியல் சார்பற்ற, அதேசமயம் சமூக விழிப்புணர்வு கொண்ட பெண்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கமுடியும். தற்போது, 50 சதவீத இடஒதுக்கீடு பெண்களுக்கு வழங்கப்படுவதன் மூலம், கூடுதலான எண்ணிக்கையில் பட்டியலின பெண்களும் உள்ளாட்சி அமைப்புகளில் இடம்பெறவிருக்கிறார்கள்.

வாழ்க்கைத் துணைவிகளை உள்ளாட்சித் தேர்தலில் நிறுத்தி வெற்றிபெற வைத்துவிட்டு, அதிகாரத்தைக் கைக்கொள்ளும் ஆண்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். மறுபுறம், கட்சி அமைப்புகளிலேயே பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. ஆனால், அதையும் தாண்டி சீரிய உழைப்புடனும் தன்னம்பிக்கையுடனும் செயலாற்றிப் புகழ்பெற்ற பெண்கள் பலர். அவர்களின் வரிசையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சரிபாதி பெண்களின் இருப்பு, பல சாதனைகளின் தொடக்கப் புள்ளியாக அமையட்டும்!

ஓவியம்: முத்து

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in