ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக ஒருமித்த சட்டம் உருவாகட்டும்!

ஆன்லைன் சூதாட்டம்
ஆன்லைன் சூதாட்டம்The Hindu

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு பலியாகும் உயிர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பது கவலை அளிக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான அவசர சட்டம் காலாவதியானதும், புதிய சட்ட ஏற்பாடு ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருப்பதும் இந்தக் கவலைக்கு காரணமாக உள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடைவிதிப்பதில் மாநில அரசின் முனைப்புகளுக்கு அப்பால், நாடு நெடுகிலுமான ஒருமித்த சட்டம் ஒன்றை மத்திய அரசு உருவாக்குவதே நிரந்தர தீர்வாகவும் இருக்க முடியும்.

உலகத்தை ஒரு கிராமமாக சுருக்கி, ஏராளமான அனுகூலங்களை வாரிவழங்கும் இணையத்தின் கசடுகளில் ஒன்று ஆன்லைன் சூதாட்டம். இந்த ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழ்நாடு மட்டுமன்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பலியாகும் உயிர்கள் அநேகம். ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக இந்தியாவின் 19 மாநிலங்கள் தடை விதித்து சட்டம் இயற்றியுள்ளன. சூதாட்டம் என்பது மாநில அரசின் வரம்பின் கீழ் வருவதால் இந்த ஏற்பாடு. அதேவேளையில், ஆன்லைன் சூதாட்ட செயலிகளை நீக்குவதன் வாயிலாக இந்த சட்டத்தை அர்த்தமுள்ளதாக நடைமுறைப்படுத்துவதில், மத்திய மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்ப அமைச்சகத்தின் வரம்புக்கு உட்படுகிறது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட அவசர சட்டம் இயற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலும் பெறப்பட்டது. ஆனால், இந்தத் தடையை நிரந்தமாக்கும் சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் வழங்காது ஆளுநர் விளக்கம் கோரியதும், தமிழக அரசு பதில் அளித்ததுமாக இழுபறி நீடிக்கிறது. மாநில அரசு சட்டப்பேரவையைக் கூட்டி முடிவெடுக்கும் தீர்மானங்கள் மீது ஆளுநர் தேவையற்ற கால தாமதம் செய்வதைச் சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றமும் அதிருப்தி தெரிவித்தது. இந்தப் போக்கு தொடருமெனில் உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தவும் நேரிடும் எனவும் அழுத்தம் காட்டியிருக்கிறது.

ஆன்லைன் சூதாட்டம்
ஆன்லைன் சூதாட்டம்The Hindu

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டச் தடைச்சட்டம் அமலாவதில், அரசியல் கலந்திருப்பதான குற்றச்சாட்டுகளையும் எளிதில் கடந்துவிட முடியாது. அப்படியே மாநில அரசு பிரத்யேக தடைச்சட்டம் கொண்டுவந்தாலும், அவற்றைக்கொண்டு ஆன்லைன் சூதாட்டத்தில் பித்தானவர்களுக்கு சட்டபூர்வமான அச்சத்தை உருவாக்கலாமே தவிர, முழுமையான தடையை அமல்படுத்துவதில் சிக்கல்கள் நீடிக்கவே செய்யும்.

இதற்கு வலுசேர்ப்பது போல அண்மையில் மத்திய அரசு வெளியிட்ட ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான வரைவுகளில், ஆன்லைன் சூதாட்டம் என்பது ஆன்லைன் விளாயாட்டுகளில் எளிதில் ஒளிந்துகொள்ள ஏதுவாக அமைந்திருப்பது அதிர்ச்சிக்குரியது.

இந்த இடத்தில்தான், நாடு நெடுகிலும் ஒருமித்த வகையில் ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தை மத்திய அரசே உருவாக்கி அதனை நடைமுறைப்படுத்தவும் முன்வர வேண்டும் என்ற கோரிக்கை அர்த்தம் பெறுகிறது. விளையாட்டு செயலிகளின் போர்வையில் ஆன்லைன் சூதாட்ட செயலிகளால் அதிக வரி வருவாய் கிடைக்கிறது என்பதற்காகவும், ஒருசில அரசியல் காரணங்களுக்காகவும் ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டத்தை ஆராயாது இருப்பது நாடு நெடுக மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

ஆன்லைன் சூதாட்டம்
ஆன்லைன் சூதாட்டம்The Hindu

எனவே, ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான மாநில அரசின் சட்ட ஏற்பாடுகள் மட்டுமன்றி, மத்திய அரசும் முழுமூச்சாய் அதில் இறங்க வேண்டும். ஆன்லைன் விளையாட்டுகள் - ஆன்லைன் சூதாட்டம் இடையிலான வேறுபாடு, ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிப்பதோடு அதற்கான செயலிகளை நீக்குவதற்கான உத்தரவு உள்ளிட்டவற்றை மத்திய அரசு பிறப்பிப்பதும் அவற்றை கண்காணிப்பதுமே நிரந்தர தீர்வாக அமையும். இதில் அலட்சியமும், அரசியலும் கலப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கும் என்பதை அரசுகள் மறக்காதிருக்கட்டும். சூதாட்ட செயலிகளால் இனியும் உயிர்கள் பறிபோகாதிருக்கட்டும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in