வரம்பற்ற ரசிக மோகங்களுக்கு வேண்டும் கடிவாளம்!

வரம்பற்ற ரசிக மோகங்களுக்கு வேண்டும் கடிவாளம்!
Updated on
2 min read

சென்னை சிந்தாதிரிப்பேட்டை பரத்குமார் வீடு பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களை இழந்து துக்கம் பூண்டிருக்கிறது. 19 வயது கல்லூரி மாணவரான பரத்குமார் இப்போது உயிரோடு இல்லை. தனது விருப்பத்துக்குரிய நடிகரின் பொங்கல் வெளியீட்டு திரைப்படத்தை வரவேற்கச் சென்றவர், சடலமாக திரும்பியிருக்கிறார். லாரியிலிருந்து விழுந்து முதுகுத்தண்டு முறிந்ததில் பரிதாபமாக பரத்குமார் உயிர் பறிபோயிருக்கிறது.

சமுதாயத்தின் முதுகுத்தண்டான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியிலான இந்த மிதமிஞ்சிய ரசிக மோகம் தேவைதானா? திரைப்படங்களை ரசிப்பதும், அதில் தோன்றும் நடிகர்களைக் கொண்டாடுவதும் பல தலைமுறைகளாக நீடித்து வருகிறது. ஆனால், வரம்பற்ற ரசிக மோகங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை என்பதையும் இது போன்ற அகால மரணங்கள் முகத்திலறைந்து உணர்த்துகின்றன.

பெருந்தொற்று முடக்கத்தால் 2 ஆண்டு காலமாக மூடிக்கிடந்த திரையரங்குகள் கடந்த சில மாதங்களாக புத்துயிர் பெற்று வருகின்றன. ஓடிடி மற்றும் தொலைக்காட்சிகளில் சுருண்டிருந்த ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். இதனால் திரைத்தொழில்களும் அவற்றை நம்பிய ஆயிரக்கணக்கான குடும்பங்களும் வாழ்வு பெற்றிருக்கின்றன. பண்டிகைக்கு மேலும் குதூகலம் சேர்க்கும் வகையில் உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்கள் திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ளன.

இதையொட்டி அரசின் தடையை மீறி தங்கள் உயிரை பொருட்படுத்தாத இளைஞர்கள், வானுயர் கட் அவுட்டுகளுக்கு பாலபிஷேகம் செய்கின்றனர். கொண்டாட்டம் என்ற பெயரில் வன்முறையில் இறங்குகின்றனர். சிலர் பொது அமைதிக்கு குந்தகமும் செய்கிறார்கள். இவர்களுக்கு தூபமிடும் வகையில் நள்ளிரவு, அதிகாலை என சினிமா காட்சிகள் திறக்கின்றன.

வருமானத்துக்கு வாய்ப்பில்லாத வயதிலான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், சினிமா டிக்கெட்டுக்கு மட்டுமே ஆயிரக் கணக்கில் கைக்காசை செலவழிக்கின்றனர். மேலும், சமூக ஊடகங்கள் முதல் நேரடி களம் வரை போட்டி நட்சத்திரங்களின் ரசிகர்களுடன் வரம்பற்ற மோதலிலும் இறங்குகின்றனர். உச்சமாக உயிரையும் துச்சமென விடத் துணிகின்றனர்.

இத்தகைய மிதமிஞ்சிய ரசிகப் போக்கு என்பது தமிழ்நாட்டுக்கு புதிதல்ல என்றபோதும், உயிரை விடும் அளவுக்கு விபரீதங்கள் அரங்கேறுவதை தடுத்தாக வேண்டும். பூனைக்கு எவரேனும் மணி கட்டியாக வேண்டும். சம்பந்தப்பட்ட உச்ச நட்சத்திரங்கள் இதில் முதலடி வைக்க முன்வர வேண்டும். தங்கள் வார்த்தைகளால் ரசிகர்களை வழி நடத்த முயற்சிக்க வேண்டும். சட்டம் - ஒழுங்கு நடவடிக்கைகள் பாய்வதைக் காட்டிலும் இந்த மந்திரச்சொல்லுக்கு ரசிகர்கள் நிச்சயம் உடன்படுவார்கள். மாறாக, தங்களது திரைப்படங்கள் வெற்றிபெற இந்த ரசிக கொண்டாட்டங்கள் அவசியம் என, ரசிகர்களை கண்டும் காணாதிருக்கும் நட்சத்திரங்களின் போக்கு கண்டிக்கத்தக்கது.

பரத்குமார்
பரத்குமார்

ஒரு உச்ச நட்சத்திரம் படத்தில் நடிப்பதோடு என் வேலை முடிந்தது என ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டு உலகம் சுற்றுகிறார். மற்றொருவர், திரையிலும் அடுத்து அரசியலிலும் தன்னை தக்கவைத்துக்கொள்ள ரசிகர்களின் போக்கை ஊக்குவிக்கிறார். இப்படி தங்கள் சுயநலத்துக்காகவும், கோடிகளை குவிக்கும் ஆதாயத்துக்காகவும், ரசிகர்களுக்கு கடிவாளமிட மறுக்கும் நட்சத்திரங்கள் கவலைக்குரியவர்கள்.

தங்கள் பிள்ளைகளின் ரத்தம், ரசிக மோகத்தில் சாலைகளில் தெறிப்பதை எந்த பெற்றோராலும் சகித்துக்கொள்ள இயலாது. இந்தப் போக்கு தொடருமானால் அவற்றுக்கு அணைபோட அரசே முன்வர வேண்டும். ரசிக கொண்டாட்டங்கள் முதல் ரசிகர் சிறப்பு காட்சிகள் வரை அரசு முறைப்படுத்த முன்வர வேண்டும்.

பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு வீடுகள் எங்கும் குலவையிட்டு மகிழ, பரத்குமார் போன்ற ஒரு ரசிகனின் இல்லத்தில் ஓலம் சூழ்ந்திருக்கும் நிகழ்வுகள் இனியும் நிகழாதிருக்கட்டும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in