ஆளுநரும் முதல்வரும் பரஸ்பரம் இறங்கி வரட்டும்!

ஆளுநரும் முதல்வரும் பரஸ்பரம் இறங்கி வரட்டும்!

சமீபகாலமாக தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான முரண்கள் அதிகரித்துக்கொண்டே செல்வது கவலையளிக்கிறது. தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் தேநீர் விருந்து அளிக்க ஆளுநர் முன்வந்த நிலையில், அதை அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து முதல்வரும் புறக்கணித்திருப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

உண்மையில், மத்திய - மாநில அரசுகளுக்கு இடையில் ஒரு உறவுப் பாலமாக ஆளுநர் விளங்க வேண்டும் என்பதுதான் சுமுகமான அரசியல் நிகழ்வுகளை விரும்பும் அனைவரின் நோக்கம். ஆனால், நடைமுறையில் அது பெரும்பாலும் சாத்தியமாவதில்லை. ஒரு மாநிலத்தின் ஆளுநர் எனும் வகையில் தன்னிடம் அரசியலுக்கோ, விருப்பு வெறுப்புகளுக்கோ இடமில்லை என்று தற்போதைய ஆளுநர் பேசினாலும், அவ்வப்போது அவருக்குள் அரசியல் சாயல் வந்துவிடுவதைப் பார்க்கமுடிகிறது.

நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரும் மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதில் சுணக்கம், எழுவர் விடுதலை விவகாரத்தில் தாமதம் எனப் பல்வேறு விஷயங்களில் தமிழக அரசுடன் ஆளுநர் முரண்படுவதாகவே விமர்சிக்கப்படுகிறது.

மறுபுறம், அரசியல் மனமாச்சரியங்களைக் கடந்து தேநீர் விருந்து போன்ற நிகழ்வுகளை ஆளுநர் முன்னெடுக்கும்போது அதில் உள்நோக்கம் இருப்பதாகக் கருதி அரசும், ஆளும் கூட்டணிக் கட்சிகளும் முன்முடிவுடன் முரண்டுபிடிப்பதும் தேவையற்றது. இதுபோன்ற சந்திப்புகள் மரபு ரீதியாகக் கடைபிடிக்கப்படும் இறுக்கத்தைத் தளர்த்தக்கூடியவை. மாநிலத்தின் தேவைக்காக பிரதமர், உள் துறை அமைச்சர் போன்றோரைச் சந்திக்க வேண்டியிருக்கும் நிலையில், ஆளுநரிடமிருந்து மட்டும் ஏன் விலகி நிற்க வேண்டும்?

நடைமுறையில், மத்திய அரசின் அறிவுறுத்தலின்படிதான் ஆளுநரின் முடிவுகள் அமையும் என்பதே நிதர்சனம். கடந்த திமுக ஆட்சிக்காலங்களில் ஆளுநர்களுடன் நல்லுறவு பேணப்பட்டது என்பதும் மறுக்க முடியாத உண்மை. இந்நிலையில், இதுபோன்ற முரண்களால் கசப்புணர்வு உருவாகிவிடாமல் இருக்க ஆளுநரும், முதல்வரும் பரஸ்பரம் இறங்கிவர வேண்டும்.

ஓவியம்: முத்து

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in