பட்ஜெட்: பாதி கனவாக முடிந்து விடக் கூடாது!

பட்ஜெட்: பாதி கனவாக முடிந்து விடக் கூடாது!
Supplied Pic

வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பட்ஜெட் எனும் அறிவிப்புடன், 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். மகளிர் முன்னேற்றம், சமூகக் கட்டமைப்பு உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அவர் அளித்த நம்பிக்கை இந்த பட்ஜெட்டில் நன்றாகவே வெளிப்பட்டிருக்கிறது. எனினும், செய்ய வேண்டியவை இன்னும் நிறையவே உள்ளன.

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் உயர் கல்வி பயிலும்போது மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. வரவு, செலவுத் திட்டத்தில் கணக்கிடப்பட்ட 58,692.68 கோடி ரூபாய்க்கு மாறாக, திருத்த மதிப்பீடுகளில் வருவாய் பற்றாக்குறை 55,272.79 கோடி ரூபாயாகக் குறையும் எனும் அறிவிப்பும் நம்பிக்கையளிக்கிறது. மகளிருக்கு மாதாந்திர உரிமைத் தொகையாக 1,000 ரூபாய் அளிக்கப்படும் எனும் நம்பிக்கை வெளிப்பட்டிருப்பது ஓர் ஆறுதல்.

அதேசமயம், தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை இந்த பட்ஜெட்டில் திமுக அரசு நிறைவேற்றவில்லை. கட்டுமானப் பொருட்களை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் சேர்க்காதது, கல்விக் கடனைத் தள்ளுபடி செய்யாதது, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை அதிகரிக்கப்படாதது என அந்தப் பட்டியல் நீள்கிறது. தொழில் துறை விஷயத்தில் மத்திய அரசின் திட்டங்களைத் தாண்டி தமிழக அரசு புதிதாக எதையும் செய்யவில்லை என்று விமர்சிக்கப்படுகிறது. நிதிப் பற்றாக்குறை 4.61 சதவீதத்தில் இருந்து 3.80 சதவீதமாகக் குறைவதும் ஒரு நல்ல அறிகுறி. அதேவேளையில் வருவாய் உயர்ந்திருக்கும் நிலையிலும் கடன் தொகை அதிகரித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டும் முக்கியமானது.

தேர்தல் அறிக்கையில் அளித்த எல்லா வாக்குறுதிகளையும் ஆட்சிக்கு வந்த ஒரே வருடத்தில் நிறைவேற்றிவிட முடியாதுதான். இன்னமும் மக்களுக்கு இந்த அரசின் மீது நம்பிக்கை இருக்கவே செய்கிறது. அந்த நம்பிக்கை குலையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்!

ஓவியம்: முத்து

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in