குழந்தைகளின் கல்வி விஷயத்தில் குழப்பம் கூடாது!

குழந்தைகளின் கல்வி விஷயத்தில் குழப்பம் கூடாது!
PICHUMANI K

மழலையர் வகுப்புகள் அரசுப் பள்ளிகளிலிருந்து அங்கன்வாடிக்கு மாற்றப்பட்டதை எதிர்த்துக் குரல்கள் எழுந்த நிலையில், அந்த உத்தரவை தமிழகப் பள்ளிக் கல்வித் துறை திரும்பப் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. அதேசமயம், குழந்தைகளின் கல்வி சார்ந்த விஷயத்தில் அவசரமான, அலட்சியமான அறிவிப்புகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியாக வேண்டியிருக்கிறது.

2019 முதல் தமிழகத்தின் 2,381 அரசுப் பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யூகேஜி ஆகிய மழலையர் வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன. அரசுப் பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையான மழலையர் வகுப்பு நடத்தப்பட்டதால், ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் அதற்குத் தங்களைப் பழக்கப்படுத்திக்கொண்டனர். கூடவே, கரோனா காலத்தில் பலரும் அரசுப் பள்ளிகளையே சார்ந்திருந்தனர்.

இந்தச் சூழலில், மழலையர் வகுப்புகளை அங்கன்வாடிகளுக்கு மாற்றியது குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பான அச்சத்தைப் பெற்றோர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. இப்போது அந்த அச்சம் நீங்கியிருந்தாலும், அரசு செய்ய வேண்டிய விஷயங்கள் இன்னும் இருக்கின்றன. முந்தைய அறிவிப்புக்குக் காரணமாகச் சொல்லப்பட்ட ‘ஆசிரியர்கள் பற்றாக்குறை’ எனும் பதம் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆசிரியர் காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்புவதன் மூலம்தான் கல்வித் துறையின் குறைபாடுகளை ஓரளவேனும் களைய முடியும்.

முந்தைய ஆட்சியில், குறிப்பாக பெருந்தொற்றுக் காலத்தில் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட பல அறிவிப்புகள் கடும் எதிர்ப்புக்குப் பின்னர் திரும்பப் பெறப்பட்டன. முழுமையாக ஆய்வுசெய்து இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட வேண்டும் எனும் பொறுப்புணர்வு இல்லை என்பது அதிமுக அரசு எதிர்கொண்ட முக்கிய விமர்சனம். இந்த நிலையில் திமுகவும் அதே பாதையில் செல்வது ஏமாற்றமளிக்கிறது. குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் குழப்பம் கூடாது. கல்வி என்பது அடிப்படை உரிமை என்பதை மனதில் கொண்டு அரசு செயலாற்ற வேண்டும்!

ஓவியம்: முத்து

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in