மாற்றுக் கருத்துகளுக்கும் இடம் அளிப்பதே முழுமையான ஜனநாயகம்!

சி.வி.ஆனந்த போஸ் -  ஆர்.என்.ரவி
சி.வி.ஆனந்த போஸ் - ஆர்.என்.ரவி
Updated on
2 min read

மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ், பல்கலைக்கழக நிகழ்வொன்றில் பங்கேற்க சென்றபோது, மாணவர்கள் அவருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டினர். போராட்ட மாணவர்கள், “கல்வியை காவி மயமாக்கும் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்” என்று கோஷம் போட்டனர். அது குறித்து பின்னர் ஆளுநர் பேசும்போது, ”போராட்டங்கள் ஜனநாயகத்தின் அங்கம்; எதிர்ப்புகள் வரவேற்கப்படுகின்றன” என்றார் திறந்த மனதோடு. அவரின் இந்தக் கருத்து மேற்கு வங்கத்துக்கு அப்பாலும் பேசப்பட்டது.

மேற்கு வங்க ஆளுநரை முன்வைத்து சர்ச்சை எழுந்த நாளில், அதையொத்த சம்பவம் தமிழகத்திலும் அரங்கேறியது. “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செல்லும் இடங்களில் எல்லாம் சனாதனத்தை தூக்கிப் பிடிக்கிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கறுப்புக்கொடி காட்டுவோம்” என்று சில அமைப்புகள் அறிவித்தன. இதனையடுத்து, சேலம் பெரியார் பல்கலைக்கழகம், ‘ஆளுநர் பங்கேற்கும் விழாவில் மாணவர்கள் எவரும் கறுப்பு ஆடை அணிந்து வரக்கூடாது’ என சுற்றறிக்கை விட்டது. ‘பெரியார் பெயரிலான பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஆடைக்கு எதிர்ப்பா?’ என்ற சர்ச்சை எழுந்ததும், சுற்றறிக்கையை பல்கலைக்கழகம் திரும்பப் பெற்றது.

சேலம் என்றில்லை தமிழக ஆளுநர் பங்கேற்கும் வேறுபல பல்கலைக்கழக விழாக்களிலும் இது போன்ற கட்டுப்பாடுகள் அதிகம் தட்டுப்படுகின்றன. அரசியலையும் பாடமாக படிக்கும், வாக்களிக்கும் வயதுடைய கல்லூரி மாணவர்கள், தங்களது அதிருப்தி அல்லது எதிர்ப்பை அமைதியாக வெளிப்படுத்து வதற்கான, ஜனநாயக உரிமைகளை தடுப்பது குறித்து உயர்கல்வி நிலையங்களும் அதன் உயரே இருப்பவர்களும் மறுபரிசீலனை செய்தாக வேண்டும். சுதந்திரமடைந்ததன் 75-வது ஆண்டில், பன்முகத்தன்மை கொண்ட மிகப்பெரும் தேசத்தின் தனிச்சிறப்பான, ஜனநாயக உரிமைகளை நாம் இன்னுமே விவாதித்தாக வேண்டியதாகிறது.

வெள்ளை மாளிகை பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரதமர் மோடி; அவரிடம் கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளர் சபரினா சித்திக்
வெள்ளை மாளிகை பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரதமர் மோடி; அவரிடம் கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளர் சபரினா சித்திக்

ஐநா அவை முதல் அமெரிக்க நாடாளுமன்றம் வரை பங்கேற்கும் பெருமை மிக்க கூட்டங்கள் அனைத்திலும், “இந்தியா ஜனநாயகத்தின் தாய்; இந்தியாவின் வேர்களில் ஜனநாயகம் இருக்கிறது” என்றெல்லாம் முழங்கி வருகிறார் பிரதமர் மோடி. ஆனால், அதே அமெரிக்க நாடாளுமன்ற உரையையொட்டி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், இந்தியாவில் சிறுபான்மையினர் நிலைமை குறித்து பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பிய பெண் பத்திரிகையாளரை, சமூக ஊடகங்களில் மோடி ஆதரவாளர்கள் தரம் தாழ்ந்து தாக்க ஆரம்பித்தார்கள். இந்த அத்துமீறலுக்கு வெள்ளை மாளிகை ஆட்சேபம் தெரிவிக்கும் அளவுக்கு நிலைமை மோசமானது. சர்வதேச அரங்கில் இந்திய ஜனநாயகத்தின் பெருமை குறித்து பிரதமர் மோடி பேசியதன் ஈரம் காய்வதற்குள் இத்தனையும் நடந்தது.

இந்தியாவுக்குள் இந்த நிலைமை இன்னும் பரிதாபத்தில் இருக்கிறது. கேள்வி எழுப்புவோர் பத்திரிகையாளர் என்றில்லை, ஆள்வோருக்கு எதிராக சமூக ஊடகங்களில் சுதந்திரமாக தங்கள் கருத்துகளை பகிரும் சாமானியர்கள், குறிவைத்து தரமற்ற வகையில் தாக்கப்படுவதும், காவல்துறை கைதுகள் அரங்கேறுவதும் சாதாரணமாக நடக்கிறது. தீவிர வலதுசாரித்துவம் பேசும் பாஜகவினர் மட்டுமல்ல, அவர்களுக்கு எதிர்திசையில் நடைபோடும் திமுக ஆட்சி நடத்தும் தமிழகத்திலும், இந்தக் கைதுகள் அண்மைக்காலமாக தொடர்கதையாகின்றன. அதிகாரத்தில் அமர்ந்ததும் அதுநாள் வரை பழகிய, சுதந்திரமாக கருத்து தெரிவிக்கும் உரிமையை அடுத்தவர் எடுத்தாளும்போது சீற்றம் கொள்கிறார்கள்.

மாற்றுக் கருத்துகளுக்கு இடமளிக்கும் வகையிலான, அமைதியான போராட்டங்கள் மற்றும் எதிர்ப்பை தெரிவிக்கும் நடவடிக்கைகளுக்கு வாய்ப்பு அளிக்கும்போது மட்டுமே ஜனநாயகம் முழுமை பெறும். ஜனநாயகம் குறித்தான நமது பெருமையும் அர்த்தம் பெறும். மாற்றுக் கருத்துகளுக்கும் திறந்த மனதோடு இடமளிப்போம். நமது பெருமைக்குரிய ஜனநாயகம் முழுமையடைய உதவுவோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in