ஆசிரியர்களே சாதி பார்க்கலாமா?

ஆசிரியர்களே சாதி பார்க்கலாமா?

பள்ளிகளில் சாதி பாகுபாடு கூடாது என சமூக அக்கறை கொண்ட அனைவரும் தொடர்ந்து வலியுறுத்திவரும் நிலையில், சக ஆசிரியர்களின் சாதியைக் காரணம் காட்டி மாணவர்கள் மத்தியில் சாதிய விஷத்தைப் பரப்ப சில ஆசிரியர்களே முயற்சி செய்ததாக வெளியாகும் செய்திகள் மிகுந்த ஏமாற்றம் தருகின்றன.

‘சாதிகள் இல்லையடி பாப்பா’ எனும் பாரதியின் வரிகள் கற்றுத்தரப்படும் பள்ளிகளில் ஆசிரியர்களே சாதிய கண்ணோட்டத்துடன் நடந்துகொள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. சாதிக் கயிறுகள் பிரச்சினை காரணமாக நடந்த மோதலில் சமீபத்தில் ஒரு மாணவர் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, பள்ளிகளில் சாதி அடையாளங்கள் கூடாது என கல்வித் துறை சார்பில் தலைமை ஆசிரியர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால், வழிகாட்ட வேண்டிய ஆசிரியர்களே இவ்விஷயத்தில் சுயசாதி அடையாளப் பெருமிதங்களில் மூழ்குவது கவலையளிக்கும் விஷயம்.

இன்றைய நாகரிக சமூகத்திலும் குடிநீர் அருந்தும் விஷயத்தில்கூட மாணவர்களிடம் பாகுபாடு காட்டுவது, சாதி ரீதியாக இழிவுபடுத்தும் வகையில் பேசுவது என ஒரு சில ஆசிரியர்கள் நடந்துகொள்ளத்தான் செய்கிறார்கள். சிலர் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, சாதிய ரீதியாகத் தூண்டிவிடுவது என நடந்துகொள்வதால் துணிச்சல் பெறும் மாணவர்கள் மற்ற சமூகத்தினரை நட்பு ரீதியாக அணுகுவதைத் தவிர்த்துவிடுகிறார்கள். இதுபோன்ற பிரச்சினைகள் பள்ளி வளாகத்துடன் நின்றுவிடுவதில்லை. சாதி அடிப்படையில் பள்ளி மாணவர்களுக்கு இடையில் நிகழ்ந்த மோதல்கள், காவல் நிலையம் வரை சென்ற சம்பவங்களையும் நாம் பார்த்திருக்கிறோம்.

அதேசமயம், இந்த அநீதிப் போக்கைப் பொதுமைப்படுத்த முடியாது. இதுபோன்ற தவறான செயல்பாடுகளைப் பெரும்பாலான ஆசிரியர்களும் மாணவர்களும் விரும்பவில்லை. வைரலாகப் பரவும் அந்த ஆடியோவில், “எல்லோரும் சமம்தானே” என்று சொல்லும் அந்த மாணவரின் குரலே அதற்கு சாட்சி. கல்வியின் அடிப்படையே மனிதகுல மேம்பாடுதான். அதற்கு பொறுப்பான ஆசிரியர்கள் இவ்விஷயத்தில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும்.

ஒவியம்: முத்து

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in