மதுக் கடைகளை மூடி மாணவர்களைக் காப்போம்!

மதுக் கடைகளை மூடி மாணவர்களைக் காப்போம்!

தமிழகப் பள்ளி மாணவர்கள் குறித்து பெருமிதப்படுவதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கும் நிலையில், அவர்களில் சிலரது எதிர்காலம் குறித்துக் கவலைப்படும் அளவுக்குத் தீவிரமான பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது மதுப் பழக்கம்.

சமூகத்தில் நடக்கும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களுக்குப் பிரதான காரணமாக இருக்கும் மதுப் பழக்கம் பள்ளி மாணவர்களையும் பாதித்திருக்கிறது. மாணவர்கள் மட்டுமல்லாமல் மாணவிகளும், பள்ளிச் சீருடையோடு மது அருந்தும் காட்சிகள் பதற வைக்கின்றன. கூடவே, ஆசிரியர்களிடம் மரியாதை இன்றி நடந்து கொள்வது, பொது இடங்களில் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்வது என மாணவர்களில் சிலர் கட்டுப்பாடு இல்லாமல் நடந்து கொள்கிறார்கள்.

இந்தச் சூழலில், மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்றால் மதுக் கடைகளை மூடுங்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருக்கிறார். எழுதுகோல் கிடைப்பதைவிட எளிதாக மதுபானம் கிடைப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இது அக்கறையுள்ள, ஆக்கபூர்வமான வாதம். தமிழகத்தில் யார் ஆளுங்கட்சியாக இருந்தாலும் டாஸ்மாக் விஷயத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள். டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாயை இழக்க விரும்பாததே இதற்குக் காரணம்.

தற்போது தமிழகத்தில் 5,350 டாஸ்மாக் கடைகள் உள்ளன. புதிய டாஸ்மாக் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை என்கிறது தமிழக அரசு. எதிர்ப்பு வரும் இடங்களில் கடையை மூடும் அரசு, அந்தக் கடையை வேறு இடத்தில் திறக்கிறது. ஒட்டுமொத்தமாகவோ அல்லது படிப்படியாகவோ டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பதுதான் சமூக அக்கறையுள்ளவர்களின் வேண்டுகோள்.

அரசு குறைந்தபட்சம் பள்ளிகளின் அருகில் இருக்கும் மதுக் கடைகளை மூடுவது, தடையின்றி மது கிடைக்கும் எனும் நிலையை மாற்றுவது என்பன உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அது மது எனும் அரக்கனின் பிடியிலிருந்து மக்களையும், மாணவர்களையும் விடுவிப்பதற்கான தொடக்கப்புள்ளியாக இருக்கட்டும்.

ஓவியம்: முத்து

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in