பெண் கல்வியில் இன்னும் கவனம் தேவை!

பெண் கல்வியில் இன்னும் கவனம் தேவை!

எதிர்பாராத தருணங்களில் கிடைக்கும் இனிப்பின் சுவை அதிகம். அந்த வகையில், கிராமப்புறப் பகுதிகளில் எழுத்தறிவுத் திட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளாகத் தமிழகம் முன்னணி வகிப்பதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் கூறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். ஆனால், அது மட்டும் போதாது!

மக்களவையில் திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்வி மற்றும் துணைக் கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில்கள், தமிழகத்தில் எழுத்தறிவுக்காகவும், டிஜிட்டல் எழுத்தறிவுக்காகவும் அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் விளைவாக இந்த இடத்தை நாம் அடைந்திருப்பதாகச் சொல்கின்றன. இதைப் பாராட்டும் அதேவேளையில், தமிழகத்தில் எழுத்தறிவு விஷயத்தில் பெண்களின் நிலை எப்படி இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும்.

2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, தேசிய அளவில் ஆண்களின் எழுத்தறிவு 82.14 சதவீதம்; பெண்களின் எழுத்தறிவு 65.46 சதவீதம். தமிழகத்தில் அது முறையே 86.77 மற்றும் 73.44 சதவீதம். உண்மையில், பெண்களின் எழுத்தறிவு விஷயத்தில், கேரளம், மகாராஷ்டிரத்துக்கு அடுத்தபடியாக, 3-வது இடத்தில் தமிழகம் இருப்பது நல்ல விஷயம். ஆனால், எழுத்தறிவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தைத்தான் நாம் கவனிக்க வேண்டும்.

பெண் குழந்தைகள் அனைவரும் பள்ளிப் படிப்பை முடித்த பின்னர், உயர் கல்விக்குச் செல்கிறார்களா என்பதைக் கவனித்தாலே நாம் நல்ல நிலையை அடைந்திருக்கிறோமா இல்லையா என்பதைப் புரிந்துகொள்ளலாம். சொல்லப்போனால், இதுகுறித்த உறுதியான புள்ளிவிவரங்களும் நம்மிடம் இல்லை.

அத்துடன், பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியக் குடும்பங்களில் ஏற்பட்ட வருவாய் இழப்பு, வறுமை காரணமாக இடைநிற்றல், குழந்தைத் திருமணம் எனப் பல்வேறு முட்டுக்கட்டைகள் விழுந்திருக்கின்றன. ஏராளமான பெண் குழந்தைகள் கல்வியிலிருந்து வெகுதூரம் சென்றுவிட்டார்கள். இந்நிலையில், கல்வி விஷயத்தில், குறிப்பாகப் பெண் கல்வி விஷயத்தில் நாம் அடைய வேண்டிய இலக்கைப் பற்றி திட்டமிடுவோம்.

ஓவியம்: முத்து

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in