டெங்குவை வெல்ல உறுதிபூணுவோம்!

தலையங்கம்
டெங்குவை வெல்ல உறுதிபூணுவோம்!

கரோனா காலம் இன்னமும் முடிவுக்கு வந்துவிடாத நிலையில், தமிழகத்தில் டெங்கு பரவல் அதிகரித்திருப்பதாக வெளியாகும் செய்திகள் கவலை தருகின்றன. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். அத்துடன் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய டெங்கு காய்ச்சல் பரவல் குறித்து தமிழகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட 11 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

நன்னீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் ஏடிஸ் கொசுக்கள் மூலம் டெங்கு பரவுகிறது. டெங்குவுக்கு இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கென தனி சிகிச்சையும் இல்லை. தீவிர பாதிப்பு எனும்போதுதான் உடலில் தட்டணுக்கள் குறைவதைத் தடுக்க சிகிச்சை எடுக்க வேண்டியிருக்கும். ஆக, வருமுன் காப்பதுதான் டெங்குவைத் தடுக்க முக்கியமான வழி. அதற்கு ஒரே வழி கொசுக்களை ஒழிப்பதுதான்.

கொசுக்களை ஒழிப்பதில் சில ஐரோப்பிய நாடுகள் வெற்றிகரமாகச் செயல்பட்டிருக்கின்றன. அதையெல்லாம் முன்மாதிரியாகக் கொண்டு டெங்கு பரவல் அபாயத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட வேண்டும். கொசுக்கள் வளர வாய்ப்பு அளிக்காதவாறு சுற்றுப்புறத்தைச் சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும். வசிப்பிடங்களைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தெருக்களைச் சுத்தமாக வைத்துக்கொள்வதில் சுகாதாரப் பணியாளர்களின் அரிய பணியைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் நூறு நாள் பணியாளர்களைத் தூய்மைப் பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தியிருப்பது இவ்விஷயத்தில் அரசின் அக்கறையைக் காட்டுகிறது.

மழைக்காலங்களில்தான் டெங்கு பரவல் அதிகரிக்கிறது என உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது. தற்போது தமிழகத்தில் பரவலாக மழை பெய்துவருகிறது. வடகிழக்குப் பருவமழையும் விரைவில் தொடங்கவிருக்கிறது. கடுமையான சவால் தந்த கரோனாவை, இழப்புகளுக்கு இடையிலும் எதிர்கொண்டு சமாளித்துவருகிறோம். டெங்கு விஷயத்திலும் அதே உறுதியுடன் அரசு தொடர்ந்து செயல்பட வேண்டும். இந்தப் பணியில் மக்களும் அரசுக்குத் துணை நிற்க வேண்டும்!

ஓவியம்: முத்து

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in