
சாலை விபத்துகள் குறித்த செய்திகள் வராத நாள் இல்லை எனும் நிலை மாறி, இப்போதெல்லாம் ஒரே நாளில் ஏகப்பட்ட விபத்துகள் நடப்பதைப் பார்க்கிறோம். தமிழகத்தில், குறிப்பாக தலைநகர் சென்னையில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆகஸ்ட் 29-ல் வெளியான தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி, கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவின் 53 நகரங்களில் 55,400 விபத்துகள் நடந்திருக்கின்றன. அதில் சென்னையில் மட்டும் 5 ஆயிரம் விபத்துகள் நடந்திருக்கின்றன. இது முந்தைய ஆண்டை ஒப்பிட 15 சதவீதம் அதிகம். தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக அதிகமான சாலை விபத்துகள் நடக்கும் பெரு நகரம் சென்னைதான் என்பது மிகுந்த கவலையளிக்கிறது.
சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையில், கடந்த ஆண்டு சென்னை இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. சென்னை மட்டுமல்ல, தமிழகத்தின் நிலையும் இவ்விஷயத்தில் கவலையளிக்கும் விதமாகவே இருக்கிறது. தமிழகத்தில் 2020-ல் நடந்த விபத்துகளில் 14,527 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த ஆண்டு உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கிறது. மொத்தம் 15,384 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
அதற்கு முந்தைய ஆண்டுகளில் உயிரிழப்புகள் இன்னும் கூடுதலாக (2018-ல் 18,394 மரணங்கள், 2019-ல் 18,129 மரணங்கள்) இருந்த நிலையில், 2020-ம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சற்றே ஆறுதல் தந்தன. ஆனால், மீண்டும் நிலைமை மோசமாகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம், 93 சதவீத விபத்துகள் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாலும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாலும் ஏற்பட்டவை என்பதுதான். குறிப்பாக, இருசக்கர வாகனங்கள்தான் இப்படியான விபத்துகளில் சிக்கியிருக்கின்றன.
2021-ல் பொதுமுடக்கம் அமலில் இருந்தபோது சாலையில் அதிகமான வாகனப் போக்குவரத்து இல்லாததைப் பயன்படுத்திக்கொண்டு பலரும் அதிவேகத்தில் வாகனத்தை ஓட்டி விபத்தில் சிக்கியிருக்கிறார்கள். தவிர, அந்தச் சமயத்தில் கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதில் மருத்துவமனைகள் அதிக கவனம் செலுத்திவந்த நிலையில், சாலை விபத்துகளில் படுகாயமடைந்தவர்கள் உரிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
அலட்சியம், அதிவேகம், விதிமீறல் என சாலை விபத்துகளுக்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. அவற்றில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது மிக முக்கியமான காரணி. சாலை விபத்துகளுக்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கும் காரணி அது. பொதுமுடக்கத்தின்போது சாலையில் வாகன ஓட்டிகளுக்குக் கிடைத்த சுதந்திர உணர்வு இப்போது கிடைப்பதில்லை. ஆனால், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் அவலம் தொடரவே செய்கிறது.
கடந்த ஆண்டு கரோனா கட்டுப்பாடு காரணமாக, நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்ததால் அதுபோன்ற விபத்துகளின் எண்ணிக்கை சற்றே குறைந்திருந்தது. அப்படியான சூழலிலும் மதுவால் ஏற்பட்ட சாலை விபத்துகளில் நிகழ்ந்த மரணங்களின் அடிப்படையில் சென்னை இரண்டாவது இடத்தில் இருக்கிறது (முதல் இடம் ஜபல்பூருக்கு). ஜூன் மாதம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுவிட்டதைத் தொடர்ந்து மதுப் பிரியர்கள் பலர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கியிருக்கிறார்கள்.
நமது கேள்வி இதுதான் - மதுவால் ஏற்படும் மரணங்களை அரசு இன்னும் எத்தனை காலத்துக்கு வேடிக்கை பார்க்கும்? சாலை விதிகளை மீறுபவர்களைக் கண்டிக்கலாம். அபராதம் விதித்து அடுத்த முறை அந்தத் தவறைச் செய்யாமல் தடுக்கலாம். ஆனால், மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்களை என்ன செய்வது? அதற்கு யார் பொறுப்பேற்பது?
2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும் என அறிவித்த திமுக, ஆட்சிக்கு வந்த பின்னர் அதில் எத்தனை படிகள் முன்னேறியிருக்கிறது? 2016 தேர்தலில் பூரண மதுவிலக்கு எனும் வாக்குறுதியைக் கொடுத்தது தங்கள் தோல்விக்கான காரணங்களில் ஒன்று என திமுகவினர் நினைத்திருக்கலாம். அதனால், இவ்விஷயத்தில் தற்போதைய அரசு ரொம்பவே ‘கவனமாக’ இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இதையெல்லாம் எத்தனை நாட்களுக்குப் பொறுமையாகக் கடந்துவர முடியும்? அரசு நினைத்தால் நடக்காதது எதுவும் இல்லை. மதுப் பழக்கம் கொண்டவர்களின் வீடுகளில் ஏற்படும் சாதாரண சச்சரவுகள்கூட கொலை, தற்கொலை என விபரீதத்தில் முடிவதை அன்றாடச் செய்திகள் உணர்த்துகின்றன. மதுவால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து மருத்துவர்கள் எத்தனையோ முறை எச்சரித்தும் அந்த அவலம் தொடர்கிறது. இதற்கெல்லாம் அரசு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறது? என்ன தீர்வை முன்வைக்கப்போகிறது?