விளையாட்டின் தலைநகர் ஆகட்டும் தமிழகம்!

விளையாட்டின் தலைநகர் ஆகட்டும் தமிழகம்!

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதற்கு அடுத்த நாள், பள்ளி மாணவிகளோடு உரையாடி அவர்களின் குறைகளையும் செவிமெடுத்தார். அப்போது ஒரு மாணவி இப்படித் தெரிவித்தார், “விளையாட்டுப் பாடவேளையில் வேறு பாடங்கள் எடுக்காது எங்களை விளையாட அனுமதிக்க வேண்டும்” என்பது தான் அது.

அமைச்சராக பொறுப்பேற்றதுமே, “தமிழகத்தை இந்தியாவின் விளையாட்டு தலைநகராக்குவேன்” என்று சூளுரைத்திருக்கிறார் உதயநிதி. அதற்கான பாதையை இந்த பள்ளி மாணவியின் ஆதங்கத்திலிருந்தே தொடங்கலாம்.

மாணவி குறிப்பிட்டவாறு பெரும்பாலான பள்ளிகளில் விளையாட்டு பாடவேளைகளை பிள்ளைகளிடமிருந்து அபகரித்துவிடுகிறோம். அவர்களின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு என்ற பெயரில் ஏட்டுக்கல்வியை மட்டுமே திணிக்கிறோம். விளையாட நேரம் ஒதுக்காது குழந்தைகள் படிப்பதை ஆசிரியர்களும், பெற்றோர்களும் பெருமையாக கருதும் போக்கே நிலவுகிறது.

தனிப்பட்ட மனித சக்தியும், அவற்றை ஒன்றிணைக்கும் சமுதாயத்தின் சக்தியும், உடல் வலிமையை பெருக்குவதில் இருந்தே தொடங்குகின்றன. விளையாட்டின் மூலமாகவே இந்த உடல் வலிமையை நோக்கி பிள்ளைகளை அடியெடுக்கச் செய்ய முடியும். இளம் வயதினர் மத்தியிலான இணக்கம் பெருகவும், சுகாதாரம் பழகவும், ஆரோக்கியமான போட்டி மனப்பான்மை வளர்க்கவும் விளையாட்டு மட்டுமே கைகொடுக்கும். தனிநபர் பண்புகளை செம்மைப்படுத்தி சீரிய குடிமக்களை உருவாக்குவதிலும் விளையாட்டுக்குப் பங்குண்டு.

ஆனால், நமது பள்ளிகள், வீடு, சமுதாயம் என பல வாய்ப்புகளிலும் பிள்ளைகள் விளையாட வாய்ப்பில்லாது செய்து விடுகிறோம். ஏராளமான பள்ளிகள் மைதானம் இன்றியும், உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாதும் உள்ளன. முக்கிய விளையாட்டுகளின் பயிற்சியாளர்களுக்கு நிரந்தர பணியிடம் ஒதுக்கப்பட வேண்டும். பள்ளிகளுக்கு அப்பால், சமுதாயத்திலும் விளையாட்டு மைதானங்களுக்கு இடமும், தளவாடங்களும், விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட வேண்டும். அலைபேசியை சற்று நேரமேனும் மறந்துவிட்டு வியர்வை பொங்க பள்ளி - கல்லூரி வயதிலான மாணவ மாணவியர் விளையாடிப் பழக வேண்டும்.

பள்ளி கல்லூரிகளில் விளையாட்டு மற்றும் போட்டிகளை ஊக்குவிப்பதோடு, திறமை மிக்கோரை இளம் வயதிலேயே கண்டறிய வேண்டும். அவர்களுக்கென சர்வதேச தரத்திலான பயிற்சிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். படிப்பு மட்டுமே வாழ்க்கை என பேதலித்திருக்கும் பெற்றோருக்கும் விழிப்புணர்வூட்ட வேண்டும். அதற்கு, விளையாட்டு மூலமாகவும் சிறப்பான எதிர்காலம் சாத்தியமாகும் என்ற நம்பிக்கையை நடைமுறையில் உருவாக்க வேண்டும்.

நகரங்கள் மட்டுமன்றி கிராமங்களில் இருந்தும் விளையாட்டில் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அமைச்சர் அறிவித்திருக்கும் முதலமைச்சர் தங்கக் கோப்பை போன்ற விளையாட்டு போட்டிகள் வாயிலாக கிராமப்புறங்களில் இருந்தும் தகுதியானவர்களை முத்தெடுக்கலாம். விளையாட்டுத் துறை மேம்பட அதிக நிதி ஒதுக்குவதும், தனியார் பங்களிப்பும் அவசியம். விளையாட்டை வாழ்க்கையாகவே தேர்ந்தெடுப்போருக்கு, அதற்கான பயிற்சிகளோடு, பணி வாய்ப்பு, காப்பீடு ஆகியவற்றையும் உறுதி செய்ய வேண்டும்.

வட சென்னையின் குத்துச் சண்டை முதல் அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு வரை, பிராந்தியங்களில் செழித்திருக்கும் பாரம்பரிய விளையாட்டுகளின் மேம்பாட்டுக்கு, அதே இடங்களில் பிரத்யேக கட்டமைப்புகளை உருவாக்கும் அரசின் முயற்சிகள் முழுமை பெற வேண்டும். விளையாட்டு சார்ந்த பொருளாதாரத்தை மாநிலத்தில் உருவாக்க, செஸ் ஒலிம்பியாட் போன்ற சர்வதேச போட்டிகளை மேலும் அதிகரிக்க வேண்டும். சதுரங்கத்தில் உலகின் தலைமகன்களை தந்த தமிழகம் அந்த இடத்திலிருந்து வழுவாதிருக்க, அடுத்த தலைமுறையினர் மத்தியிலிருந்தும் உரியவர்களை தொடர்ந்து உருவாக்க வேண்டும்.

தமிழகத்தில் பரவலாக விளையாடப்படும் கபடி, கோகோ, கால்பந்து, கையுந்துபந்து, கூடைப்பந்து, ஹாக்கி ஆகிய விளையாட்டுகளுக்கான கட்டமைப்புகளை அதிகரிக்க வேண்டும். அமைச்சர் அறிவித்திருக்கும் தொகுதிக்க்கு தலா ஒரு மினி ஸ்டேடியம் என்ற அறிவிப்பை ஊரக அளவிலும் விரிவாக்கம் செய்யலாம். சென்னையில் சர்வதேச தரத்திலான விளையாட்டு நகரம் அமைத்தல், சென்னை, திருச்சி, மதுரை, நீலகிரி என மண்டல ஒலிம்பிக் அகடாமிகள் அமைத்தல் உள்ளிட்ட தற்போதைய அரசின் முன்னெடுப்புகள் முழுவீச்சில் செயலாக்கம் பெற வேண்டும்.

கோப்பைகளை வெல்வது மட்டுமல்ல, சிறப்பான சமுதாயத்துக்கு அடித்தளமிடுவதிலும் விளையாட்டுத் துறையின் மேம்பாடு ஒளிந்திருக்கிறது. அது, விளையாட்டுத் துறையின் தலைநகராக தமிழகத்தை உருவாக்கும் கனவு மெய்ப்படவும் உதவும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in