அரசியல் வெற்றி அல்ல, மாணவர் நலனே முக்கியம்!

அரசியல் வெற்றி அல்ல, மாணவர் நலனே முக்கியம்!
Karunakaran M

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் மசோதாவைத் தமிழக அரசுக்கே ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியிருப்பதும், அதற்கு தமிழக அரசின் தரப்பிலிருந்து எழுந்திருக்கும் எதிர்வினையும் நீட் விவகாரத்தை மீண்டும் பேசுபொருளாக்கியிருக்கின்றன.

2017-லேயே அதிமுக ஆட்சிக்காலத்தின்போது நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதா, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அது மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு அதே ஆண்டில், எந்தக் காரணமும் சொல்லாமல் திருப்பி அனுப்பப்பட்டது. இந்தத் தகவலை நீண்ட காலமாக வெளியில் சொல்லாமல் தவிர்த்ததாக அதிமுக அரசின் மீது விமர்சனங்கள் எழுந்தன. இதை அரசியல் ரீதியாக அணுகிய திமுக, நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்டம் கொண்டுவருவதாகத் தேர்தல் வாக்குறுதி அளித்தது.

ஆட்சிக்கு வந்த பின்னர், அதை நிறைவேற்ற முடியாமல் அரசியல் ரீதியிலான அழுத்தத்தைத் திமுக அரசு எதிர்கொள்கிறது. ஆனால், தொடர்ந்து இதை ஓர் அரசியல் பிரச்சினையாகவே அணுகுவது சரியல்ல. திமுக அரசு கொண்டுவந்த மசோதா மாணவர்களின் நலன்களுக்கு, குறிப்பாக தமிழக கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது என ஆளுநர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இப்படியான சூழலில், நீட் விஷயத்தில் மற்ற மாநிலங்கள் ஏன் தமிழக அரசுடன் நிற்கவில்லை என்பதையும் நீட் எதிர்ப்பாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் நீட் எதிர்ப்பாளர்கள் முன்வைக்கும் கருத்துகளை மத்திய அரசும் பரிசீலிக்க வேண்டும். எப்படிப் பார்த்தாலும் இறுதியில் மாணவர்கள்தான் இதில் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அவர்களின் எதிர்காலத்தைப் பிரதானமாக மனதில் கொண்டு அரசியல் விளையாட்டுகள் இல்லாமல் ஒரு இறுதி முடிவை விரைந்து சொல்ல வேண்டும். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கின் குற்றவாளிகள் விடுதலை போல இதுவும் இன்னும் பல வருடங்கள் பந்தாடப்பட்டுக்கொண்டே இருந்தால், அதனால் நன்மை எந்தத் தரப்புக்குமே இருக்காது.

ஓவியம்: முத்து

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in