மாற்றுத்திறனாளிகளின் மனம் குளிரட்டும்!

மாற்றுத்திறனாளிகளின் மனம் குளிரட்டும்!

மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் கட்டிடங்களை உருவாக்கும் தனியார் நிறுவனங்களுக்கு விருது வழங்குவதாகத் தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதைச் சிறப்பாக அமல்படுத்தும் தனியார் நிறுவனங்களுக்கு, சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் 3-ம் தேதி அன்று மாநில அரசின் இரண்டு விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன.

மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தின்படி அரசு / தனியார் நிறுவனங்கள் தங்கள் கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்குத் தடையில்லா சூழலை உருவாக்குவதை ஊக்கப்படுத்தும் பணிகளில் இறங்கியிருக்கும் அரசு இப்படி ஒரு முன்முயற்சியை எடுத்திருக்கிறது. பொதுவாகவே, வழக்கமான பாதுகாப்பு நெறிமுறைகளே அலட்சியத்துடன் கையாளப்படும் சூழலில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள் குறித்து யாரும் அதிகம் கவலைப்படுவதில்லை. இதற்கான சட்டங்கள் இருந்தும் அவை முழுமையாகப் பின்பற்றப்படுவதில்லை.

பொது இடங்களிலும் அரசு / தனியார் கட்டிடங்களிலும் பெரும் சிரமத்தை எதிர்கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்காகச் செய்ய வேண்டிய விஷயங்கள் ஏராளம். சமீபத்தில், கழிப்பறையைப் பயன்படுத்துவதில் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஒரு கவிதை எழுதியிருந்தார். மக்கள்பால் கரிசனம் கொண்ட ஓர் அரசு இதுபோன்ற குரல்களின் பின்னே இருக்கும் வலியை உணர்ந்துகொள்ள வேண்டும்.

அனைத்து அரசுக் கட்டிடங்களிலும் அடுத்த ஆண்டிற்குள் மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் 2021 செப்டம்பரில் உத்தரவிட்டது. அடுத்த ஆண்டில் (2022) மாற்றுத்திறனாளிகள் அணுக முடியாத அளவுக்கு எந்தக் கட்டிடமும் இருக்காது என்று அரசுத் தரப்பிலும் உறுதியளிக்கப்பட்டது. இது எந்த அளவுக்குப் பூர்த்திசெய்யப்பட்டிருக்கிறது என அரசு தெரிவிக்க வேண்டும்.

விதிமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்றச் செய்ய அரசுதான் சீரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தட்டிக்கொடுத்து விருதுகள் வழங்குவதுடன், விதிமுறைகளைப் பின்பற்றாதவர் களை தண்டிக்கவும் செய்தால் இதுபோன்ற விஷயங்களில் ஓர் ஒழுங்கு ஏற்படும்; நிரந்தரத் தீர்வும் கிடைக்கும்!

ஓவியம்: முத்து

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in