பாலியல் குற்றங்களைக் களைய சமூக மாற்றம் அவசியம்!

பாலியல் குற்றங்களைக் களைய சமூக மாற்றம் அவசியம்!

தமிழகத்தில் அடுத்தடுத்து வெளியாகும் கூட்டுப் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் மிகுந்த அதிர்ச்சி தருகின்றன. பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வல்லுறவு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து, அதில் தொடர்புடையவர்கள் கைதுசெய்யப்பட்ட பின்னர் அதுபோன்ற அவலங்கள் குறையும் என எதிர்பார்த்திருந்தவர்களுக்கு இன்றைய சூழல் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெண்கள், சிறுமிகள், ஏன் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்கூட நிகழ்ந்தவண்ணம் உள்ளன. அவற்றில் தொடர்புடையவர்களில் பெரும்பாலானோர் நெருங்கிய உறவினர்கள் என்பது பெரும் கொடுமை. பெண்களைக் காதலிப்பதுபோல் நடித்து, அந்த உரிமையில் அத்துமீறலில் ஈடுபட்டு, அதைக் காணொலியாகப் பதிவுசெய்து மிரட்டும் கொடூரக் குற்றங்களிலும் சிலர் ஈடுபடுகிறார்கள்.

சிலர் அதற்குத் தங்கள் அரசியல் பின்னணியை ஒரு கேடயமாகவும் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதற்கு விருதுநகர் பாலியல் வன்கொடுமைச் சம்பவம் ஓர் உதாரணம். அந்தச் சம்பவத்திலும், வேலூரில் நள்ளிரவில் ஷேர் ஆட்டோவில் பயணித்த பெண் மருத்துவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவத்திலும் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் பங்கெடுத்திருப்பது இன்னொரு அதிர்ச்சி.

மது, போதைப்பொருட்கள், செல்போன் எனப் பல்வேறு விஷயங்கள், இதுபோன்ற விபரீதங்களின் பின்னணியில் இருக்கின்றன. இன்னொருபுறம், பெண்ணுடல் மீது ஆண்கள் கொண்டிருக்கும் கட்டமைப்பும் ஒரு காரணம். ஆண்கள் தங்களுக்கு எதிரான வலுவான சாட்சியமாகக் காணொலிப் பதிவுகள் இருப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் குற்றத்தில் ஈடுபடும்போது, பெண்கள் அதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் அவர்களின் மிரட்டலுக்கு ஆளாவது பேரவலம்.

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகப் பெண்கள் சட்ட நடவடிக்கைகள் எடுக்க அரசு அமைப்புகள் உறுதியாகத் துணை நிற்க வேண்டும். அத்தகைய சட்ட நடவடிக்கைகளையும் தாண்டி பாலியல் குற்றங்களைக் கட்டுப்படுத்த சமூகத்தில் மனமாற்றமும் விழிப்புணர்வும் முக்கியம். அரசு நிறுவனங்களும் சமூக அமைப்புகளும் இணைந்தே அந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

ஓவியம்: முத்து

Related Stories

No stories found.