மாணவர்களின் மன உளைச்சலைக் களைவோம்!

தேர்வு சூழ் அச்சங்கள்
தேர்வு சூழ் அச்சங்கள்The Hindu

மாணவ சமுதாயத்தினரை சூழ்ந்திருந்த ஆண்டு இறுதித் தேர்வுக்கான அழுத்தங்கள் விலகி, தேர்வு முடிவுகள் என்னும் புதிய அழுத்தம் நெருக்கும் நேரம் இது. மாணவர்கள் எளிதில் மனதிடத்தை இழக்கவும், இயல்பு குலையவும், தவறான முடிவுகளில் தடுமாறவும் வாய்ப்புள்ள தருணமும் கூட. இந்த நேரத்தில் மாணவப் பருவத்தினரை அரவணைத்து அடுத்தக் கட்டத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டிய கடமை, பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்திலுள்ள அனைவருக்கும் அதிகம் காத்திருக்கிறது.  

தேர்வுக்கு தயாராவோர்
தேர்வுக்கு தயாராவோர்The Hindu

மே 5-ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, மே 7-ம் தேதி நடைபெறும் நீட் தேர்வை முன்னிட்டு, மே 8-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. பிளஸ் 2 தேர்வு முடிவுகளின் அழுத்தம், மாணவர்களின் நீட் தேர்வு அழுத்தத்தை அதிகமாக்கக் கூடும் என்ற அரசின் எச்சரிக்கை உணர்வே இதற்குக் காரணம்.

இன்னும் கூட, இந்த நீட் தேர்வு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகளுக்கு இடையே கூடுதல் இடைவெளி விட்டிருக்கலாம். எனினும், எந்த வகையிலும் மாணவர்களுக்கு மன உளைச்சல் கூடாது என்ற தமிழக அரசு முன்னெடுத்த நல்லெண்ண நோக்கத்தை, வீட்டுப் பெரியவர்கள் உள்வாங்குவதும், அதற்கேற்ப செயல்படுவதும் அவசியம்.

‘பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் / சால மிகுத்துப் பெயின்’ என்பது குறள். மெல்லிய மயில் இறகாக இருப்பினும், அளவுக்கு அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முறிந்துபோகக்கூடும் என்பது இதன் பொருள். வாழ்வின் நெருக்கடிகளும், கடின அனுபவங்களும் வாய்த்திராத மாணவப் பருவத்தினரின் மென்மனதை, தேர்வு முடிவுகளோ அல்லது அவை குறித்த அச்சமோ முறிக்க வாய்ப்பளித்து விடக்கூடாது.

தேர்வுகள் மற்றும் தேர்வு முடிவுகளை பதற்றமின்றி எதிர்கொள்ள மாணவர்களை முன்கூட்டியே தயார் செய்வது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் கடமையாகும். அவர்களுடன் குடும்பத்தார் போதிய நேரம் செலவிடுவதும், ஊக்கமூட்டும் வார்த்தைகளை பரிமாறுவதும் அவசியம். மாணவர்கள் மத்தியில் மனச்சோர்வின் அடையாளம் தென்பட்டால் மேலதிக அரவணைப்பு வழங்கவும், அவசியமெனில் மருத்துவ ஆலோசனையை நாடவும் தயங்கக்கூடாது.

தேர்வெழுதும் மாணவியர்
தேர்வெழுதும் மாணவியர்The Hindu

தேர்வின் வெற்றி தோல்வி மட்டுமல்ல; எதிர்பார்த்த மதிப்பெண் தவறினாலோ அல்லது அது குறித்த அச்சமோகூட, இப்போதெல்லாம் மாணவர்களின் சஞ்சலத்துக்கு காரணமாகி விடுகிறது. எனவே, தேர்வு முடிந்த கையோடு அது குறித்த அழுத்தங்களை மாணவர்கள் மத்தியிலிருந்து துடைத்தெறிவது பெரியவர்களின் கடமை. எதிர்பார்த்த மதிப்பெண் வாய்க்காது போனாலும், மறு கூட்டல், மறு மதிப்பீடு, உடனடித் தேர்வு என காத்திருக்கும் ஏராளமான வாய்ப்புகளில் எளிதில் நிவாரணம் பெறுவது குறித்து அறிவுறுத்தலாம். 

அல்லாது போனாலும், கிடைத்த மதிப்பெண்ணைக் கொண்டு, உருப்படியான உயர்கல்விக்கு திட்டமிடும் வகையில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகளில் எளிதில் கடைத்தேற்றம் காணலாம். எனவே, முதலில் பெற்றோர் தங்கள் அளவில் தேர்வுசார் அழுத்தத்திலிருந்து விடுபடுவதும், பின்னர் மாணவர்களை அவை சூழாது பாதுகாப்பதும் அவசியம்.

தேர்வு முடிவுகள் மட்டுமல்ல, கோடைக்கால பயிற்சி வகுப்புகள் என்ற பெயரிலும், அடுத்த கல்வியாண்டுக்கான சிறப்பு வகுப்புகள் என்ற பெயரிலும் மாணவர்களை அளவுக்கு மீறி நசுக்காது இருப்பதும் முக்கியம். கோடை விடுமுறை என்பதன் நோக்கத்தை சிதைக்காது, குழந்தைகளின் பொதுவான வாசிப்பு, உள்ளரங்க விளையாட்டு, சிறு சுற்றுலா, உறவினர்கள் நட்புகளுடன் அறிமுகம், கிராமங்கள், ஆன்மிக தலங்களுக்கு பயணிப்பது என கோடை விடுமுறையை அர்த்தமுடன் செலவிடலாம்.

நடப்பு வாழ்வியலை அதிகம் அச்சுறுத்தும் உடல் - மன ஆரோக்கியத்துக்கு, கோடை விடுமுறையை நல்வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வோம். தேர்வு அச்சங்கள் உட்பட அழுத்தங்கள் ஏதும் மாணவர்களை சாய்க்காதிருக்க அரவணைத்துப் பாதுகாப்போம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in