கரோனா வதந்திகளை வேரறுக்க உறுதியேற்போம்!

கரோனா வதந்திகளை வேரறுக்க உறுதியேற்போம்!

அதிகம் பரவ வாய்ப்புள்ள கரோனா நான்காவது அலை, மக்களை படுத்துமா அல்லது வந்த தடம் அறியாது மறையுமா என்ற ஐயங்களுக்கு மத்தியில் நமது அன்றாடங்கள் கழிகின்றன. அப்படியே இந்த அலை பெரிதாக எழுந்தாலும், பழகிய தடுப்பு முறைகளோடு புதிய திரிபு சவாலை எளிதில் எதிர்கொள்வோம். ஆனால், அந்த முன்னேற்பாட்டுக்கு இடம்கொடாது நித்தம் ஒரு வதந்தி பரவி, மக்களை நிம்மதியிழக்கச் செய்து வருகிறது. ஒரு வகையில் கரோனோவைவிட கடுமையானதாக இந்த வதந்திகள் வலம் வருகின்றன.

முந்தைய அலைகளின் மத்தியிலும், இந்த வதந்திகள் மக்களின் இருப்பை பெரிதும் சோதித்தன. பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முயற்சியில் தன்னுடைய உயிரை ஈகிய மருத்துவருக்கு இடுகாட்டில் இடம் அளிக்க மறுத்ததில், மக்கள் மத்தியில் அதிகம் பரவியிருந்த வதந்திக்கு பெரும் பங்குண்டு. கரோனாவுக்கு எதிரான போரில் மக்களின் உயிர் காக்கும் அஸ்திரமாக களமிறங்கிய தடுப்பூசிகளைச் சுற்றிதான் எத்தனை வதந்திகள்? பலகட்ட பரிசோதனைகளை தாண்டி அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாது வீம்பு கொள்வோர் இன்னும் கணிசமான எண்ணிக்கையில் இருக்கின்றனர்.

சீனாவில் அப்படியான வதந்திகளுக்கு இரையாகி தடுப்பூசிகளை தவிர்த்தவர்களே, தற்போதைய கரோனா புதிய திரிபுக்கு ஆளாகி அதிகம் உயிரிழப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ‘ஆண்மை இழப்பு மருந்துகளை, மேற்கு நாடுகள் கலந்திருக்கின்றன’ என்று பரப்பப்பட்ட வதந்திகளால், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் போலியோ சொட்டு மருந்துகளை மக்கள் அதிகளவில் புறக்கணித்தனர். போலியோ பாதிப்புடன் பிறக்கும் அந்த நாடுகளின் அடுத்த தலைமுறை, அதற்கான விலையை கொடுத்து வருவது கண்கூடு.

அறிவியல் வளர்ச்சியின் ஆகப்பெரும் நடப்பு உதாரணமாக, சமூக ஊடகங்கள் நம்மை வசீகரிக்கின்றன. மக்களை ஒருங்கிணைக்கவும், கருத்துகளைப் பகிரவும், அதிகார பீடங்களை நோக்கி கேள்விகள் எழுப்பவும், தீயதை ஒதுக்கி நல்லதை சிலாகிக்கவும் இந்த சமூக ஊடகங்களின் பங்களிப்புகள் அநேகம். ஆனால் அவற்றையும், மேற்படி வதந்தி பரப்பலின் ஊதுகுழலாக மாற்றுவது துரதிருஷ்டவசமானது.

தற்போதைய சூழலில் போக்குக் காட்டும் கரோனா புதிய திரிபு பரவலின் மத்தியிலும் ஆளாளுக்கு வதந்திகளை அள்ளி வீசி வருகிறார்கள். ’மருத்துவ உண்மை, அரசின் அறிவிப்புகள், சர்வதேச தரவுகள்’ ஆகிய முலாம்களில் விஷமிகள் பரப்பும் வதந்திகளுக்கு, இன்னொரு மூலையில் இயல்பு வாழ்க்கையை தொலைத்து அவதிக்கு ஆளாவோர் ஏராளம்.

தனிநபர்களின் வதந்தி பரப்பலோடு, ஊடகம் என்ற போர்வையில் புற்றீசலாய் புறப்பட்டிருக்கும் இணையவெளி இம்சைகளும், தங்கள் போக்கில் வதந்திகளை வீரியமாய் நிறுவத் துடிக்கிறார்கள். ஊடகம் என்பதற்கான தார்மிக நெறிகளோ, விழுமியங்களோ பழகாத இந்த பரபரப்பு திலகங்களாலும், வதந்திகள் பெருமளவு மக்கள் மனதில் விதைக்கப்பட்டு வருகின்றன. மரபான ஊடகங்களுக்கு அப்பால் பரபரப்புக்கு தீனியிடும், சாரமற்ற இந்த அரைவேக்காட்டுப் போக்குகளையும் பொதுமக்கள் அடையாளம் கண்டு உஷாராவது அவசியம்.

கரோனா சமூகப்பரவலின் கண்ணிகளை போராடி அறுத்த அனுபவம் நமக்குண்டு. அதே போன்று, பரவும் வதந்திகள் நம்மை கண்ணிகளாக பயன்படுத்திக் கொள்வதற்கும் அனுமதி மறுப்போம். கரோனாவின் விபரீத திரிபுக்கு இணையாகப் பரவும் வதந்திகளை வேரறுக்க பொறுப்போடு உறுதியேற்போம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in