சொத்து வரியை ஒரேயடியாய் உயர்த்துவது நியாயம் அல்ல!

சொத்து வரியை ஒரேயடியாய் உயர்த்துவது நியாயம் அல்ல!

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் ஏற்கெனவே அல்லாடிக்கொண்டிருக்கும் தமிழக மக்களை, சொத்து வரி உயர்வால் மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கிறது தமிழக அரசு. 150 சதவீதம் வரை சொத்து வரியை அரசு அதிகரித்திருப்பது என்ன காரணம் சொன்னாலும் ஏற்க முடியாத ஒன்று.

15-வது நிதிக்குழுவின் வழிகாட்டுதல்களின்படி சொத்து வரியை உயர்த்தியிருப்பதாகவும், சொத்து வரியை உயர்த்தாவிட்டால் மத்திய நிதியை விடுவிக்க முடியாது என மத்திய அரசு கொடுத்த அழுத்தத்தாலேயே இதைச் செய்திருப்பதாக தமிழக அரசு கூறுகிறது. ஆனால், பெருந்தொற்று கால பாதிப்புகள் ஏற்படுத்திய சுமைகளால் தடுமாறிக்கொண்டிருக்கும் மக்களுக்கு இது கூடுதல் சுமைதான். ‘கரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மேம்படுத்தப்படும் வரையில், சொத்து வரி அதிகரிக்கப்படாது’ என்று தேர்தல் அறிக்கையிலேயே திமுக உறுதியளித்திருந்ததையும் இங்கே நினைவூட்ட வேண்டி இருக்கிறது.

மேலும், எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் கட்டுமானப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. இந்தச் சூழலில் சொத்து வரியை அதிகரிப்பது என்பது நியாயமற்றது. பிற மாநிலங்களை ஒப்பிட தமிழகத்தில் பெருமளவில் நகரமயமாக்கல் நடந்தேறியிருக்கும் நிலையில், சொத்து வரியாக ஆண்டுதோறும் குறைவான தொகைதான் வசூலிக்கப்படுகிறது எனும் வாதமும் ஏற்கத்தக்கதல்ல. ஏனெனில், வரி அல்லாத வருவாயைப் பெருக்குவதில் கவனம் செலுத்தாமல், வரி வருவாயை அதிகரித்துக்கொண்டே செல்வது மக்களுக்கு அழுத்தத்தைத்தான் அதிகரிக்கும். நேர்முக மற்றும் மறைமுக வரிகளிலேயே வரி ஏய்ப்பு நடந்துகொண்டிருக்கும் நிலையில், அதை முறைப்படுத்தத்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சொத்து வரி உயர்வால் வீட்டு வாடகையும் உயரும் என்பதால் வாடகைதாரர்களின் வலியும் அதிகரிக்கும். எனவே, தமிழக அரசு இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும். நிர்வாகச் செலவுகள் மக்களை அதிகம் பாதிக்காத வகையில், சரியாகத் திட்டமிட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in