சிறுதானியங்களுக்கும் சற்று இடம் அளிப்போம்!

சிறுதானியங்களுக்கும் சற்று இடம் அளிப்போம்!

தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகள் மூலமாக செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. திட்டத்தின் நோக்கம் வரவேற்கப்பட வேண்டியது என்ற போதும், அதற்கான செயலாக்கம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

செயற்கையான வேதிப்பொருட்களை சேர்ப்பதற்கு பதிலாக பட்டை தீட்டாத அரிசியை வழங்கலாம் என இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன. தமிழக அரசு இந்த கோரிக்கையை பரிசீலிக்கும் என்றே நம்புவோம். கூடவே, அரசின் நோக்கத்தையும், மக்களின் எதிர்பார்ப்பையும் திருப்திபடுத்தும் இன்னொரு அம்சத்தையும் பரிசீலிப்போம். பொது விநியோக திட்டத்தில் சிறுதானியங்களுக்கும் சற்று இடமளிப்போம்.

நமது அன்றாடங்களில் இன்று ஆக்கிரமித்திருக்கும் இதர உணவுப் பொருட்கள் போல, சிறுதானியங்கள் நமக்கு திணிக்கப்பட்டவை அல்ல. தினை, சாமை, ராகி, கம்பு, சோளம், வரகு, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியங்கள், நமது பாட்டனும் பூட்டனும் பயிர் செய்து, உண்டு களித்திருத்ததில் பல்லாயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் மிக்கவை. நமது வாழிடத்தின் மண் வளம், மழைப் பொழிவு, இதர தட்பவெப்ப காரணிகளுக்கு ஈடுகொடுத்து, தற்சார்பும், தன்னிறைவுமாக இந்த சிறுதானியங்கள் செழித்திருந்தன.

சந்தையில் ஊடுருவிய நுகர்வு கலாச்சாரம் மற்றும் வெள்ளை நிறத்தின் மீதான மோகத்தில், அரிசி பயன்பாட்டை அதிகரித்து 2 தலைமுறைகள் ஆகிறது. அரிசியில் ஆதாயம் பெற்ற வணிகமும், அரசியலும் பாரம்பரிய அரிசி ரகங்களை புதிய கலப்பினங்களால் விரட்டியடித்தன. இன்று சத்துக்குறைபாடும், வாழ்வியல் நோய்களும் பீடித்த நிலையில் சிறுதானியங்கள் உள்ளிட்ட பாரம்பரிய ரகங்களை ஏக்கத்தோடு திரும்பி பார்க்கிறோம்.

இந்த இடத்தில் மக்கள் நலன் நாடும் அரசின் கடமை முக்கியத்துவம் பெறுகிறது. சென்னை மற்றும் கோவை மண்டலங்களின் நியாய விலைக் கடைகளில், சிறுதானியங்களை சந்தைப்படுத்தும் முயற்சி இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், உரிய கவனம் பெறாததில் அத்திட்டம் துவண்டு கிடக்கிறது. இந்தத் திட்டத்தைச் செம்மையாக செயலாக்க அரசே நேரடியாக பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளின் வாயிலாக சிறுதானியங்களை வழங்க முன்வரலாம். அரிசிக்கான இடத்தில் பகுதியளவேனும் சிறுதானியங்களுக்கு ஒதுக்கலாம்.

ரேஷன் கடைகள் மட்டுமன்றி, மதிய உணவுத் திட்டம், அங்கன்வாடி மையங்கள், கர்ப்பிணிகளுக்கான ஊட்டங்கள் உட்பட அரசின் பல்வேறு நலத்திட்டங்களிலும் சிறுதானியங்களுக்கு இடமளிக்கலாம். சத்து மாவு உட்பட ஊட்டச்சத்துக்கான இதர பரிந்துரைகளிலும் சிறுதானியங்களை பகுதியளவேனும் சேர்க்கலாம். இந்த முயற்சிகள் குறைந்தபட்ச ஆதார விலை முதல் மானியங்களின் பலன்கள் வரை விவசாயிகளும் பயனடைய உதவும்.

சிறுதானியங்களுக்கான தேவை அதிகரிக்கும்போது அவற்றை விளைவிக்கும் சிறுகுறு விவசாயிகள் வாழ்வாதாரம் பெறுவார்கள். மானாவாரியில் விளையக்கூடிய இந்த சிறுதானியங்களுக்கு அரிசி உள்ளிட்ட இதர பயிர் ரகங்கள் போல பிரத்யேக பாசன வசதி தேவையில்லை. நமது மண்ணின் பாரம்பரிய பயிர்களான சிறுதானியங்களுக்கு நச்சு உரம், பூச்சிக்கொல்லிகளும் அவசியமில்லை.

சிறுதானியங்களை அரசே மீட்டெடுக்கும்போது, பொதுமக்கள் மத்தியிலான பயன்பாடும் தாமாக அதிகரிக்கும். அரிசியின் அபரிமிதமான தேவையால் வெளிமாநிலங்களில் இருந்து அவற்றை வரவழைக்கும் தடுமாற்றங்கள் தீரும். சிறுதானியங்களால் தன்னிறைவும், தற்சார்பும் மேம்படும்.

படுத்தி எடுக்கும் நீரிழிவு போன்ற வாழ்வியல் நோய்களில் இருந்தும் மக்கள் விடுபடலாம். நுண்ணூட்டங்கள், நார்ச்சத்து மிகுந்த சிறுதானியங்கள் மலச்சிக்கல் முதல் புற்றுநோய் வரை சமகாலத்தில் அதிகரிக்கும் ஆரோக்கிய சீர்கேடுகளை எதிர்த்துப் போராட உதவும். முக்கியமாக, இவை இயற்கையாகவே செறிவூட்டலை வரமாக வாங்கி வந்தவை. ஊட்டச்சத்து, ஆரோக்கியம் மட்டுமல்ல சுவைக்கும் சிறுதானியத்தில் இடமுண்டு. இட்லி, தோசை முதல் பாயாசம், பிரியாணி வரை பரிமாறலாம்.

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, எதிர்வரும் 2023-ம் ஆண்டினை சிறுதானியங்களுக்கான ஆண்டாக ஐ.நா அறிவித்துள்ளது. இதனையொட்டி நாடு முழுவதுமே சிறுதானிய மறுமலர்சிக்கான முன்னெடுப்புகள் தொடங்கப்பட உள்ளன. முன்மாதிரி மாநிலமான தமிழகம், இதிலும் தேசத்துக்கு வழிகாட்டட்டும்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in