மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்திடுக!

மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்திடுக!
V_GANESAN

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (Tangedco) பரிந்துரைத்த கட்டண உயர்வை, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கிறது. நஷ்டத்தில் இயங்கும் மின்வாரியத்தின் வருவாயை அதிகரிப்பதற்காக இந்தக் கட்டண உயர்வு என அரசு காரணம் சொல்கிறது. ஆண்டுதோறும் கட்டணத்தை மாற்றியமைத்துக்கொள்ளவும் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியிருக்கிறது.

ஏற்கெனவே அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வால் அவதியுற்றுவரும் சாமானிய மக்கள், தொழில் துறையினர் இந்நடவடிக்கையால் கடும் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்திருக்கிறார்கள். தங்கள் கோபத்தைப் பல்வேறு வகைகளில் வெளிப்படுத்தியும் வருகிறார்கள். அவர்களின் எதிர்ப்புணர்வு நிச்சயம் நியாயமானதுதான்!

இவ்விஷயத்தில் தமிழக அரசின் தற்காப்பு வாதங்கள், அரசின் பிடிவாதமான நிலைப்பாட்டை உணர்த்துகின்றன. அரசின் முடிவுகள் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் தருணங்களில் எதிர்க்கட்சிகளின் விமர்சனக் குரல் மிகவும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும். மின் கட்டண உயர்வைப் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கண்டித்ததையடுத்து, அதிமுக ஆட்சிக்காலத்தில் சராசரியாக 60 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாகவும், தற்போது 20 முதல் 24 சதவீதம் வரை மட்டுமே கட்டணம் அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளிக்கிறார்.

3.5 கோடி மின் நுகர்வோரில் 7,338 பேரிடமிருந்து மட்டும்தான் எதிர்ப்பு வந்திருக்கிறது; மற்றவர்கள் கட்டண உயர்வை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் அமைச்சர் சொல்வது எந்த அடிப்படையில் எனப் புரியவில்லை. பிற மாநிலங்களை ஒப்பிட தமிழகத்தில் மின் கட்டணம் குறைவு என்றும் வாதிடுகிறார் அமைச்சர். இவ்விஷயத்தில் எதிர்க்கட்சியான அதிமுகவின் விமர்சனத்தையும், கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியின் விமர்சனத்தையும் அவர் முற்றாக மறுதலித்துவிட்டார்.

இதற்காக நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டங்களில் தொழிற்சங்கங்கள், பல்வேறு அமைப்புகள் கலந்துகொண்டு முன்வைத்த கருத்துகளும் புறந்தள்ளப்பட்டிருக்கின்றன.

‘மத்திய நிதியை விடுவிக்க வேண்டுமானால், கட்டணத்தைத் திருத்தியமைக்க வேண்டும் என மத்திய மின்சாரத் துறை முன்நிபந்தனை விதிக்கிறது. கடன் வழங்குவதற்கு ரிசர்வ் வங்கியும் பிற மத்திய நிதி நிறுவனங்களும் இதே நிபந்தனையை விதிக்கின்றன’ என இந்த முடிவை எடுத்ததற்கான காரணங்களை மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அடுக்குகிறது.

ஆனால், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சொந்தமாக உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் அளவு ஏன் குறைந்துகொண்டே செல்கிறது என்பது குறித்தோ, ஏன் தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் வாங்குகிறது என்பது குறித்தோ ஒழுங்குமுறை ஆணையம் ஏன் கேள்வி எழுப்பவில்லை என சமூக ஆர்வலர்கள் கேட்கிறார்கள். நிர்வாக ரீதியிலான பிரச்சினைகள் சாமானியர்களின் தலையில் ஏன் சுமையாக இறங்க வேண்டும் என்பது அவர்களின் நியாயமான கேள்வி.

8 ஆண்டுகளுக்குப் பிறகு மின் கட்டணம் உயர்த்தப்படுவது என்பது அரசைப் பொறுத்தவரை ஒரு வலுவான வாதமாக இருக்கலாம். ஆனால், கரோனா காலத்தில் சந்தித்த சரிவுகளிலிருந்து மீண்டுவரும் மக்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் இது பாதகமான விஷயம்தான். மின் கட்டண உயர்வு என்பது அடுக்கடுக்கான சங்கிலித் தொடராக மேலும் பலவற்றின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும். அதை சாமானியர்களால் தாங்க முடியாது. எனவே, அரசு இந்தக் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in