அதிர்ச்சியை மக்களால் தாங்க முடியாது அரசுகளே!

அதிர்ச்சியை மக்களால் தாங்க முடியாது அரசுகளே!

மின்விநியோகத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு தமிழக மக்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. மின்தடை இல்லாத மாநிலமாகத் தமிழகம் இருக்கும்; முதல்வரின் பொற்கால ஆட்சியில் மின்தடையே வராது என்றெல்லாம் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நம்பிக்கையுடன் பேசிய சில நாட்களிலேயே இப்படி திடீரென ஏற்பட்ட மின்வெட்டு தமிழக மக்களை அவஸ்தைக்குள்ளாக்கியிருக்கிறது.

மத்திய மின் தொகுப்பிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தில் 750 மெகாவாட் மின்விநியோகம் தடைபட்டதுதான் இதற்குக் காரணம் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருக்கிறார். தூத்துக்குடி அனல் மின்நிலையத்தைத் தொடர்ந்து, நெய்வேலி அனல் மின் நிலையத்திலும் நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் பழுது காரணமாக மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கர்நாடக மாநிலம் குட்கியில் உள்ள தேசிய அனல் மின் கழகத்திலிருந்து 115 மெகாவாட் வராமல் போனதும் இதற்கு ஒரு காரணமாக முன்வைக்கப்படுகிறது.

இதற்கிடையே, நிலக்கரி தட்டுப்பாடு காரணமாகப் பல மாநிலங்களில் இந்தப் பிரச்சினை ஏற்படலாம் எனும் செய்தியும் வெளியாகியிருக்கிறது. எனினும், மின்னுற்பத்திக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பில் இல்லை என்று வரும் செய்திகளை மத்திய அரசு மறுக்கிறது. இப்படியான எல்லா தகவல்களும் தர்க்கங்களுக்கும் வாதங்களுக்கும் வேண்டுமானால் பயன்படலாம். ஆனால், கோடைகாலத்தில் கடும் வெப்பம் அதிகரித்துவரும் காலகட்டத்தில் இதுபோன்ற விளக்கங்கள் மக்கள் முன் எடுபடாது. மின்சாரத் தட்டுப்பாடு நேரடியாகத் தொழில் துறையைப் பாதிக்கும். உற்பத்தி சரிவு, வேலையிழப்பு, விலைவாசி உயர்வு என அடுக்கடுக்கான பிரச்சினைகள் ஏற்படும்.

நிலக்கரி தட்டுப்பாடு தவிர்க்க முடியாதது என்றால், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பதில் தொலைநோக்குத் திட்டங்கள் வேண்டும். அதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் களையப்பட வேண்டும். எனவே, இந்தப் பிரச்சினையை வைத்து அரசியல் செய்வதைக் கைவிட்டுவிட்டு மத்திய - மாநில அரசுகள் உறுதியான தீர்வை எட்ட முயல வேண்டும்.

ஓவியம்: முத்து

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in