நயத்தகு நாகரிகம் பேணுவோம்!

நயத்தகு நாகரிகம் பேணுவோம்!

அண்மையில் ஜி-20 உச்சி மாநாடு தொடர்பான டெல்லி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர்களுடன், பிரதமர் மோடி அரசியல் மாச்சரியங்கள் மறந்து உற்சாகமாக உரையாடி மகிழ்ந்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுன கார்கே, திரிணமூல் கட்சியின் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களும் பிரதமருடன் இணக்கமாக தென்பட்டது கண்கொள்ளா காட்சி.

அவர்களில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், மோடியுடன் இயல்பாக கலந்ததுடன் தேசத்தின் பெருமிதமான ஜி-20 ஏற்பாடுகளில் ஒருமித்த கருத்துகளை முன்வைத்ததில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகி இருக்கிறார். கொள்கை அடிப்படையில் பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு கடும் எதிர்நிலை வகிப்பவர் ஸ்டாலின். ஆனபோதும் எங்கே வேறுபட வேண்டும், எங்கே தோள்தர வேண்டும் என்பதில் தமிழக முதல்வரின் முதிர்ச்சி தேசிய அரங்கில் பளிச்சிட்டிருக்கிறது.

ஸ்டாலின் போலவே அரசியல் களத்தில் பரஸ்பரம் அனல் கக்கினாலும் பிரதமர் மோடியுடன், தனிப்பட்ட முறையில் எதிர்க்கட்சி தலைவர்கள் பாராட்டிய நாகரிகம் மெச்சத்தக்கது. அவை தொடர்பான புகைப்படங்களை பார்க்கையில், விவாதத்துக்குரிய பழம் கேள்வி ஒன்று மீண்டும் மேலிடுகிறது. டெல்லி அரசியல் நாகரிகம் ஏன் பிராந்தியங்களில் பிரதிபலிப்பதில்லை?

குறிப்பாக, தமிழகத்தில் அண்மைக்காலமாக, திமுக - அதிமுக மற்றும் பாஜக - திமுக மத்தியிலான வார்த்தைப் போர் அடிக்கடி வரம்பு மீறுகிறது. வடக்கில் நாகரிகம் காக்கும் கட்சிகள், தெற்கே வந்ததும் தேய்வது ஏன்? அரசியல் கட்சிகள் மத்தியில் மட்டுமன்றி, ஒரே கட்சியின் நிர்வாகிகள் இடையேயும் நாகரிகம் என்ன விலை என்ற நிலவரமே நீடிக்கிறது. தனிநபர் தாக்குதல்கள் தலைவிரித்தாடுகின்றன. காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வெடிக்கும் கைகலப்பு, பாஜகவில் காது கூசும் ஏச்சுகள், அதிமுக குழுக்களுக்கு இடையிலான மோதல்கள், திமுக நிர்வாகிகளின் வாரல்கள் என சகலத்திலும் நாகரிகம் வறண்டிருக்கிறது.

வாய்ப்புக் கிடைத்தால் இப்படியும் பேசுவார்களா என்று அவல ஆச்சரியம் தருகிறார்கள் நம் அரசியல் பிரதிநிதிகள். நேற்று வரை தோளுரச குழைந்தவர்கள், உட்கட்சி அரசியலில் இன்று எதிர்நிலை எடுத்ததற்காக விஷம் கக்கும் அளவுக்கு அடியோடு மாறிப்போவார்களா? இவர்களை அடியொற்றி வளரும் கட்சியின் இளம் தொண்டர்கள், இந்த வசவு மோதல்களை சமூக ஊடகங்கள் வாயிலாக அடுத்த மோசமான கட்டத்துக்கு எடுத்துச்செல்வதும் கவலைக்குரியது.

அரசியல் கட்சிகள் மத்தியில் அரங்கேறும் இந்த அவலம் பொதுத்தளத்திலும் பிரதிபலிக்கும் அபாயமுள்ளது. வாக்களிக்கும் வயது வந்தோர் மட்டுமன்றி, வளரும் தலைமுறையினர் மற்றும் குழந்தைகள் மத்தியிலும் இந்த அரசியல் போக்கு மோசமான முன்னுதாரணமாகிறது. குழாயடி வசைகளை எளிதில் கடந்து செல்வதுபோல, பொறுப்பான இடத்தில் இருப்பவர்களின் பேச்சுக்களை கடந்துவிட முடிவதில்லை.

பொதுவாழ்க்கைக்கு வந்தவர்களின் பேச்சு, மூச்சு உட்பட அனைத்தையும் நவீன தொழில்நுட்பங்கள் மக்களிடம் எளிதில் கொண்டுபோய் சேர்த்து விடுகின்றன. அதற்காகவேனும் அரசியல்வாதிகள் பார்த்துப் பேசலாம். வருங்காலங்களில் அரசியல்வாதிகளின் நாக்கைப் பொறுத்தும், பொதுமக்கள் தங்கள் வாக்கை தீர்மானிக்க முனையலாம் என்பதை உரியவர்கள் கவனத்தில் கொள்ளட்டும்.

எனவே, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பதில் காட்டும் அக்கறையை, அடிப்படை நாகரிகம் பேணுவதிலும் அரசியல்வாதிகள் காட்டட்டும். கட்சிகளின் தலைமையும் அவற்றை அறிவுறுத்தட்டும். நம் குழந்தைகளுக்கு நல்ல முன்மாதிரியாக அரசியல்வாதிகள் திகழட்டும். அரசியல் தலைகளின் நாகரிகம், சமூகத்தின் இதர அடுக்குகளையும் சென்று சேரட்டும்.

நயத்தகு நாகரிகம் பேணுவோம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in