சட்டம் ஒழுங்கு - பிடி இறுகட்டும்!

காவலர் - சித்தரிப்புக்கானது
காவலர் - சித்தரிப்புக்கானது

எதிர்க்கட்சியாக இருக்கும்போது காவல்துறையின் இதயம், ஈரல் குறித்து கேள்வி எழுப்புவதும், ஆட்சியில் அமர்ந்த பிறகு அதே கேள்விக்கு வாய்ப்பளிப்பதும், தமிழ்நாட்டில் எல்லா ஆட்சியிலும் தொடரவே செய்கிறது. தற்போதும் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு கவலைக்குரியதாக மாறிவருவதை, பொதுமக்களின் அதிருப்தி முதல் அரசியல் கட்சிகளின் போராட்டங்கள் வரை சுட்டிக்காட்டவே செய்கின்றன.

எந்த ஆட்சியாக இருப்பினும், சட்ட விரோத சம்பவங்களின் அரங்கேறலுக்கு அவை விதிவிலக்கல்ல. ஆனால், அவற்றை காவல்துறை அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்; விரைந்து செயல்பட்டு, மீண்டும் அதுபோன்ற சம்பவம் நிகழாதிருக்க மாற்று நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களுக்கு வழிவகை செய்கிறார்கள் என்பதில் வேறுபாடுவார்கள்.

தமிழ்நாடு காவல்துறை
தமிழ்நாடு காவல்துறை

ஆட்சிகள் மாறும்போதெல்லாம் இந்த சட்டம் ஒழுங்கு குறித்தான எதிர்பார்ப்புகளும் மக்கள் மத்தியில் கூடவே செய்கின்றன. இந்த முறையும் ஆட்சி மாற்றத்தினை அடுத்து, நகரப் பேருந்துகளில் மகளிருக்கான பாதுகாப்பு தொடங்கி ரோந்துப் பணிகளில் நவீனம் வரை பல்வேறு நடவடிக்கைகள் வரவேற்பு பெறவே செய்தன. இந்த திட்டங்களுக்கு அப்பால் நடைமுறையில் எழும் குற்றங்கள் மற்றும் அவற்றை விரைந்து எதிர்கொள்வதில் காவல்துறையின் செயல்பாடும் கேள்விக்கு உள்ளாகி வருகிறது.

குற்றங்கள் நிகழ்ந்ததும் அவற்றை விரைந்து புலனாய்வு செய்து குற்றவாளிகளை பிடிப்பதில் காவல்துறை காட்ட வேண்டிய துரிதம் ஒருபுறமிருக்க, சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் நிகழ்வதற்கு முன்னரே அவற்றை மோப்பமிட்டு தடுக்க எத்தனிக்கும் உளவுப் பிரிவின் கடமைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. மாநில முதல்வரின் வீட்டின் முன்பாக வலதுசாரி மாணவர் அமைப்பின் முற்றுகைப் போராட்டம் முதல் கள்ளக்குறிச்சி பள்ளி வளாக கலவரம் வரை மாநில உளவுத்துறையின் தோல்வியையும் இங்கே சொல்லியாக வேண்டியதிருக்கிறது.

கோவை கார் குண்டு வெடிப்பு பின்னணியிலான பயங்கரவாத முகத்தில் தொடங்கி மாநிலமெங்கும் தலைவிரித்தாடும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விநியோகம் வரை பல்வேறு நிழல் சம்பவங்களும் அவற்றில் மறைந்திருக்கும் வலைப்பின்னலும் அமைதியை விரும்பும் தமிழக மக்கள் மத்தியில் கவலைகளை எழுப்பி வருகின்றன. மாநிலத்தின் அமைதிக்கும், மக்களின் நிம்மதிக்கும் உளவுத் துறையினரின் பங்களிப்பு அதிகம். ஆனால், அவர்களது உழைப்பு சொந்த மற்றும் எதிர்க்கட்சியினரை ஆராய்வது உள்ளிட்ட விழல்களில் விரயமாகும்போது, பிற்பாடு சட்டம் ஒழுங்கை கவனிக்க முடியாது போகிறது.

மாநிலத்தின் எல்லைக்குள்ளான சட்டம் ஒழுங்கு மட்டுமன்றி, எல்லையில் ஊடுருவும் அபாயங்களும் பூகோள ரீதியாக தமிழகத்துக்கு அதிகம். அண்டை தேசமான இலங்கை ஸ்திரமின்மையால் தள்ளாடும்போது, அதனை மையமாகக் கொண்ட சர்வதேச ஆயுத மற்றும் போதைப்பொருள் பரிமாற்றம் அதிகரிப்பதும், தமிழக உளவுத்துறையின் கடமையை அதிகம் கோருபவை. அனுபவமிக்க ஆட்சியாளர்கள் பெயரளவிலான உளவுத்துறை ரிப்போர்டுகள் மட்டுமன்றி, அடிமட்டத்தில் களமாடும் உளவுத்துறையினர் முதல் மூத்த பத்திரிகையாளர்கள் வரை தொடர்பில் இருப்பார்கள். ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் கட்சி மற்றும் ஆட்சியினர் போக்கை தட்டிவைக்கவும் அவை உதவும். அதுபோலவே, அதிகார ஆசியில் ஒரு சில காவல்துறை உயரதிகாரிகள் சுணங்கிப்போயிருப்பது, மாநில நலனுக்கு கேடாய் மாறும் என்பதெல்லாம் பீடத்தில் அமர்ந்திருப்பவர்கள் அறியாதது அல்ல.

கோவையில் கொலையை நிகழ்த்திவிட்டு சாவகாசமாய் நடைபோட்டவர்கள்
கோவையில் கொலையை நிகழ்த்திவிட்டு சாவகாசமாய் நடைபோட்டவர்கள்

அண்மை தினங்களில் அரங்கேறியவற்றில், கோவை நீதிமன்ற வளாகத்தை ஒட்டி பட்டப்பகலில் நடந்தேறிய கொலைச் சம்பவம், அதே கோவையில் வீடுபுகுந்து துப்பாக்கியால் சுட்டும் அரிவாளால் வெட்டியதுமான சம்பவம், திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளைகள், சென்னை நகைக்கடை கொள்ளை... என பொதுமக்களை பகீரிடச் செய்பவை அதிகரிப்பது விசனத்துக்குரியவை.

கோவை நீதிமன்ற வளாகக் கொலைச் சம்பவத்தில் வெளியான வீடியோக்களில் தென்பட்ட கொலையாளிகளின் தோரணை, காவல்துறை மீதான கிரிமினல்களின் அச்சமின்மையை பிரதிபலிக்கின்றன. கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் கொலையான சம்பவத்தில் தனிப்பட்ட விரோதமே காரணம் என்ற போதும், ஆளும்கட்சி கவுன்சிலர் ஒருவர் கைதாகி இருப்பது அதிகார பின்புலமும் ஒரு காரணம் என்று காட்டுகிறது.

காலத்துக்கு ஏற்ற மாற்றமாய் இணையப்பெருவெளியிலான குற்றங்களும், சட்டம் ஒழுங்கு பராமரிப்பின் கவலைகளை அதிகரித்து வருகின்றன. புவி எல்லைகளைக் கடந்து விரியும் குற்றவாளிகளின் வலைப்பின்னலும், காவல்துறையின் சைபர் பிரிவு மேலும் நவீனம் பெறுவதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. இது தவிர, வட மாநில தொழிலாளர்களின் போர்வையில் ஊடுருவும் குற்றப் பின்னணி கொண்டவர்களும், காவல்துறைக்கு கூடுதல் சவால்களை தந்து வருகிறார்கள். இவர்கள் தமிழகத்தில் கொடூர செயல்களை நிகழ்த்திவிட்டு, வட மாநிலங்களுக்கு தப்பியோடுவதும் அதிகரித்து வருகிறது.

இவற்றை எல்லாம் இரும்புக் கரம் கொண்டு அடக்குவதும், களத்தில் தீரமாக செயல்படக்கூடிய காவல்துறையினருக்கு பொறுப்புகள் வழங்குவதும், நவீன தொழில்நுட்பங்களை கையாளுவதும், அண்டை மாநிலங்கள் மற்றும் மத்திய உளவு அமைப்புகளுடன் சேர்ந்து செயல்படுவதும்.. தமிழகத்தின் அமைதிப் பூங்கா அடையாளம் என்றைக்கும் நீடிக்க உதவும்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in