கட்சியினர் கடமையில், கண்ணியம், கட்டுப்பாடு குலையாதிருக்கட்டும்!  

கே.என்.நேரு - திருச்சி சிவா
கே.என்.நேரு - திருச்சி சிவா

திருச்சி திமுகவினர் மத்தியிலான மோதலை சாதாரண உட்கட்சி விவகாரமாக ஒதுக்கிவிட முடியாது. ஆளும்கட்சி மாநில அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்கள், அதே கட்சியின் மாநிலங்களவை எம்பி ஒருவரின் வீட்டிலும், நீதிமன்றம் மற்றும் காவல் நிலையத்திலும் புகுந்து தாக்கும் சிசிடிவி காட்சிகள், சமூக ஊடகங்களில் பரவி, காண்போரை பதைபதைக்கச் செய்திருக்கிறது.

உட்கட்சி அரசியல் மோதல்கள் எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். ஜனநாயக கட்டமைப்பிலான கட்சியின் உறுப்பினர்கள், தங்களது ஆதரவு மற்றும் எதிர்ப்புகளை வெளிப்படுத்த எத்தனையோ வழியுண்டு. ஆனால், சட்டம் - ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் குண்டர்களைப் போல, ஆளும்கட்சியினரே தரக்குறைவாக நடந்துகொண்டது பொதுமக்களை அதிர்ச்சியடைச் செய்திருக்கிறது.

மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவிக்கும் அளவுக்கு, தமிழகத்தில் குற்றவாளிகளை போலீசார் சுட்டுப்பிடிக்கும் போக்கு அண்மைக்காலமாக அதிகரித்திருக்கிறது. சமூகத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மத்தியில் அச்சமின்மை தென்படுவதாக காவல்துறை கருதியதே, இதற்கு காரணமாகவும் சொல்லப்படுகிறது.

திருச்சி சிவா வீட்டில் தாக்கப்பட்ட வாகனங்கள்
திருச்சி சிவா வீட்டில் தாக்கப்பட்ட வாகனங்கள்The Hindu

திருச்சியில், குவிக்கப்பட்ட தடுப்புகள் மற்றும் போலீசாரை மீறி, காவல்நிலையத்துக்குள் புகுந்து, திருச்சி சிவா ஆதரவாளர்கள் மீது கே.என்.நேரு ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய காட்சிகள், இதே அச்சமின்மையை பிரதிபலிக்கின்றன. சட்டத்தை மீறுவதில் ஆளும் கட்சியினரே மோசமான உதாரணமாக மாறுவது, சமூக விரோதிகளுக்கு உவப்பு சேர்ப்பதாக அமைந்துவிடும் என்பதை அறியாதவர்களா இவர்கள்?

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சிThe Hindu

கட்சித் தலைமை மற்றும் வாக்களித்த மக்கள் குறித்தான கவலை ஏதுமின்றியும், பொறுப்பற்றும் அவர்கள் நடந்துகொண்ட காட்சிகள் கவலை அளிப்பவை. முதல்வரின் தலைமையில் அனுதினமும் மேற்கொள்ளப்படும், ஆட்சிக்கு நற்பெயர் ஈட்டுவதற்கான முன்னெடுப்புகளை, இது போன்ற ஒரு சில மோசமான சம்பவங்கள் காணடித்துவிடும். தவறிழைத்தவர்கள் மீது உடனடியாக கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்தது வரவேற்புக்குரியது.

கூடுதலாக, கட்சிக்கும், ஆட்சிக்கும் பெருமை சேர்க்கும் வகையில், ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள, உரியோர் அறிவுறுத்த வேண்டியதும் அவசியம். ஆட்சி மாற்றத்தை விரும்பி வாக்களித்த மக்களை ஏமாற்றாது ஆளும்கட்சியினர் நடந்துகொள்வதே, அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்ட கண்ணியம், கட்டுப்பாடுக்கு பெருமை சேர்க்கும். இவற்றை குறிப்பிட்ட கட்சி என்றில்லாது அனைத்துக் கட்சியினரும் உதாரண பாடமாக கொள்வதும் நல்லது!  

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in