நீட் விவகாரத்துக்கு நிரந்தரத் தீர்வைக் காணட்டும் அரசு!

நீட் விவகாரத்துக்கு நிரந்தரத் தீர்வைக் காணட்டும் அரசு!
M_SAMRAJ

தமிழகத்தில் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது நீட் நுழைவுத் தேர்வு. முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்திருக்கிறது. மருத்துவக் கனவில் இருந்த சில மாணவச் செல்வங்கள் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுகள் வேதனை தருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து எழும் விவாதங்கள் தற்போது மீண்டும் சூடுபிடித்திருக்கின்றன. இந்த விவகாரத்தில் நிலவும் தெளிவின்மையும் அலட்சியமும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் எனத் தெரிகிறது.

பிற மாநிலங்களை ஒப்பிட தமிழகத்தில்தான் நீட் தேர்வுக்கு எதிரான குரல்கள் அதிகம். வசதிவாய்ப்பு இருப்பவர்களின் பிள்ளைகள் பள்ளிப் படிப்பைத் தாண்டி இதற்கென பிரத்யேகப் பயிற்சி எடுத்துக்கொண்டால்தான் இந்தத் தேர்வில் வெல்ல முடியும் எனும் நிலை இருப்பதை மறுப்பதற்கில்லை. இதை ஒரு முக்கியக் காரணியாகத் தமிழகம் முன்வைக்கிறது. இந்த முறை தமிழகத்தில் முதலிடம் பிடித்த மதுரையைச் சேர்ந்த மாணவர், கடுமையாக உழைத்து, திரும்பத் திரும்பப் படித்துக்கொண்டே இருந்ததால்தான் இதைச் சாதிக்க முடிந்தது எனக் கூறியிருக்கிறார். நீட் தேர்வை முதல் முறையாக எழுதும் மாணவர்களைவிடவும், இரண்டாவது அல்லது மூன்றாவது முறை எழுதும் மாணவர்களே வெற்றிவாய்ப்பைப் பெறுகிறார்கள்.

பொருளாதார வசதி கொண்ட மாணவர்களுக்கு வேண்டுமானால் இது சாத்தியமாகலாம். பல்வேறு தடைகளுக்கு மத்தியில் பள்ளிப் படிப்பில் நன்கு தேர்ச்சி பெற்றிருக்கும் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் இப்படியான வாய்ப்பைப் பெற முடியுமா என்பதுதான் முக்கியமான கேள்வி. இந்த முறை அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களில் பெரும்பாலானோர் தோல்வியடைந்திருக்கிறார்கள்.

கூடவே, பிற மாநிலங்களைவிட தமிழகத்தில்தான் தேர்ச்சி விகிதம் குறைவு. 75.9 சதவீதத் தேர்ச்சி பெற்று டெல்லி முதலிடம் பெற்றிருக்கும் நிலையில், தமிழகம் 29-வது இடத்தில் இருக்கிறது. சில மாணவர்கள் பூஜ்ஜியம், பூஜ்ஜியத்துக்குக் கீழ் என மதிப்பெண் எடுத்திருப்பதும் ஆச்சரியம் தருகிறது. இத்தனைக்கும் இந்தத் தேர்வைத் தமிழில் எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை இந்த முறை அதிகம். எனில், எங்கு தவறு நேர்கிறது என்பதை அரசும் கல்வியாளர்களும் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும். அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மாணவர்களுக்கு நீட் தேர்வின் சூட்சுமங்களை முறையாகப் பயிற்றுவித்தனவா எனப் பலரும் கேள்வி எழுப்புகிறார்கள்.

இத்தனை பிரச்சினைகளுக்கு நடுவில் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான கியூட் நுழைவுத் தேர்வு, ஐஐடி-யில் சேர்வதற்கான ஜேஈஈ தேர்வுகள் ஆகியவற்றுடன் நீட் தேர்வை இணைக்கும் யோசனையில் பல்கலைக்கழக மானியக் குழு இருக்கிறது. இப்போதைக்கு இந்தத் தேர்வுகளை இணைக்கும் எண்ணம் இல்லை என மத்திய அரசு கூறியிருந்தாலும் இன்னும் சில ஆண்டுகள் அது நடைமுறைக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இப்படியான சூழலில், தமிழக அரசு முன்னால் இருக்கும் தெரிவுகள் இரண்டுதான். ஒன்று - நீட் தேர்வுக்குத் தமிழகத்துக்கு விலக்கு கோரும் நடவடிக்கைகளை மத்திய அரசுடன் இணக்கமாகப் பேசி சாத்தியப்படுத்த வேண்டும் அல்லது - அரசியல் மனமாச்சரியங்கள், தேர்தல் வாக்குறுதி போன்றவற்றைச் சற்றே ஒதுக்கிவைத்துவிட்டு மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றிபெறுவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும்.

அதை விட்டுவிட்டு, ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு தொடர்பான விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் மாணவர்கள் இழக்க அரசு காரணமாக இருக்கக்கூடாது. இவ்விஷயத்தில் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகள், கல்வியாளர்கள், செயற்பாட்டாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் நன்கு ஆலோசித்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நீட் விவகாரம் தொடர்ந்துகொண்டே இருப்பதும் மாணவர்கள் அதன் விளைவுகளைச் சந்திப்பதும் இனியும் தொடரக்கூடாது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in