நிச்சய வெற்றியைத் தரட்டும் நீட் பயிற்சி வகுப்புகள்!

நிச்சய வெற்றியைத் தரட்டும் நீட் பயிற்சி வகுப்புகள்!
G_SRIBHARATH

நீட் தேர்வுக்கான அரசுப் பயிற்சி வகுப்புகள் நவம்பர் 26 முதல் தொடங்கியிருக்கின்றன. அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கும் முக்கியக் களமாகக் கருதப்படும் இந்த இலவசப் பயிற்சி வகுப்புகள் வரவேற்புக்குரியவை. அதேசமயம், கடந்த முறையைப் போல் அல்லாமல் இந்த முறை இந்தப் பயிற்சி வகுப்புகளால் அதிகமான பலன் ஏற்பட வேண்டும் எனும் குரல்கள் எழுந்திருக்கின்றன.

இன்றைய சூழலில் நீட் தேர்வு தவிர்க்க முடியாததாகிவிட்டதால், கொள்கை அளவில் அதை எதிர்த்துவரும் தமிழக அரசு வேறு வழியின்றி அதற்கான முன்தயாரிப்புகளில் ஈடுபட்டுவருகிறது. எனினும், அதில் சில சிக்கல்களும் இருக்கின்றன. கடந்த முறை பள்ளிகள் திறக்கப்பட்டு 5 மாதங்களுக்குப் பின்னர், மிகவும் தாமதமாகவே நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கின, பயிற்சியும் முறையாக வழங்கப்படவில்லை என விமர்சனங்கள் எழுந்தன. தனியார் பயிற்சி மையங்களும் இணையவழிப் பயிற்சியைத்தான் மேற்கொண்டன. கூடவே, கரோனா பெருந்தொற்றுக் கட்டுப்பாடுகளால் கல்வியில் ஏற்பட்ட சுணக்கமும் ஒரு காரணமானது.

அதன் விளைவு நீட் தேர்வு முடிவுகளில் வெளிப்பட்டது. முந்தைய ஆண்டைவிட தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்தது. அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைந்தது. தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 12,840 அரசுப் பள்ளி மாணவர்களில் 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். பிற மாநிலங்களை ஒப்பிட தமிழகத்தில்தான் தேர்ச்சி விகிதம் குறைவு. சிலர் பூஜ்ஜியம், பூஜ்ஜியத்துக்குக் கீழ் என மதிப்பெண் எடுத்தனர். இத்தனைக்கும் நீட் தேர்வைத் தமிழில் எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த முறை அதிகம். இந்தச் சரிவு இயல்பாகவே விமர்சனங்களுக்கு வழிவகுத்தது.

பொதுவாகவே, டிசம்பர் மாதம்தான் பயிற்சி வகுப்புகள் தொடங்கும். ஆனால் இந்த முறை, முன்கூட்டியே பயிற்சி வகுப்புகளைத் தொடங்குவதாகத் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி அக்டோபர் மாதமே வகுப்புகள் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், டிசம்பர் நெருங்கும் காலகட்டத்தில்தான் வகுப்புகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. திறமையான ஆசிரியர்களைக் கொண்டு, முறையாகப் பயிற்சி வகுப்புகளை நடத்துவது, முந்தைய நீட் தேர்வுகளில் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் பயிற்சி முறையில் புதிய மாற்றங்களைக் கொண்டுவருவது, வெற்றி நிச்சயம் எனும் நம்பிக்கையை மாணவர்கள் மத்தியில் விதைப்பது என்பன போன்ற உத்திகளை அரசு முன்னெடுக்க வேண்டும். நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு தகர்ந்துவருவதாக எதிர்மறையான எண்ணங்கள் பரவுவதைத் தடுத்து, நடைமுறை சார்ந்து ஆக்கபூர்வமாக அரசு செயல்பட வேண்டும்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in