மழைக்கால நோய்களிலிருந்து மக்களைக் காப்போம்!

மழைக்கால நோய்களிலிருந்து மக்களைக் காப்போம்!

வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் பரவலான மழைப்பொழிவைக் கொடுத்திருக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், இயல்பு வாழ்க்கை முடங்கலாம் என மக்கள் கவலையில் ஆழ்ந்திருக்கின்றனர். கூடவே, மழைக்கால நோய்கள் குறித்த அச்சமும் மக்களிடையே எழுந்திருக்கிறது.

மழைக்காலங்களில் சளி, காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகளும், மலேரியா, டெங்கு, காலரா, டைபாய்டு காய்ச்சல் போன்ற நோய்களும் ஏற்படுகின்றன. அசுத்தமான குடிநீர் மூலம் காய்ச்சல், உடல்வலி போன்ற சாதாரண பாதிப்புகள் தொடங்கி பல்வேறு நோய்களை மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பருவமழைக் காலங்களில் ஹெச்1என்1 இன்ஃபுளுயென்சா வைரஸ் பரவலால் பன்றிக் காய்ச்சல் அதிகரிக்கிறது.

தேங்கிக் கிடக்கும் நீரில் எலி, பெருச்சாளி போன்றவை சென்றுவரும் என்பதால், அவற்றின் கழிவுகளும் அதில் கலந்துவிடும். அதன் மூலம் எலிக்காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இதுபோன்ற சூழல்களில் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். உடல்நிலை சரியில்லாமல் பள்ளிக்கு விடுப்பு எடுப்பது ஒரு பிரச்சினை என்றால், சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகளுடன் பள்ளிக்கு வரும் மாணவர்களால் பிற மாணவர்களுக்கும் அந்தப் பாதிப்புகள் தொற்றிக்கொள்வது இன்னொரு முக்கியப் பிரச்சினை.

மழைக்காலங்களில்தான் டெங்கு பரவல் அதிகரிக்கிறது என்கிறது உலக சுகாதார நிறுவனம். தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு 6,039 பேர் டெங்கு பாதிப்புக்குள்ளானார்கள். இந்த ஆண்டு இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அடுத்த மூன்று மாதங்களுக்கு டெங்கு பரவல் அதிகரிக்கும் என தமிழகப் பொது சுகாதாரத் துறையே எச்சரித்திருக்கிறது.

எனவே. கொசுவை ஒழிப்பதற்கான புகைமருந்து அடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட வேண்டும். போதிய படுக்கை வசதிகள், தேவையான மருந்துகள் போன்றவற்றின் இருப்பை உறுதிசெய்து மழைக்கால நோய்களை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

முக்கியமாக, பள்ளிகளிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் தண்ணீர் தேங்குவது, புதர்கள் மண்டுவது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். தண்ணீர் தேங்கிக்கிடக்கும் இடங்கள் கொசுக்கள் உற்பத்தியாக வழிவகுக்கும் என்பதால், அதுபோன்ற இடங்களை முறையாகக் கண்காணித்து தேங்கியிருக்கும் நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைநகர் சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் ஓரளவு பலனைத் தந்திருப்பதைச் செய்திகள் உணர்த்துகின்றன. சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருந்தாலும், பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வடிந்திருப்பது நல்ல மாற்றம். இதுபோன்ற பணிகள் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட வேண்டும். கூடவே, டிசம்பர் மாதம் வரையிலும் வடகிழக்குப் பருவமழை நீடிக்கும் என்பதால் அதை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் அவசியம். மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொண்டாலே பெருமளவிலான மழைக்கால நோய்களைத் தவிர்த்துவிடலாம் என்பதை அரசு நினைவில் இருத்திக்கொள்ளட்டும்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in