மருத்துவத்தில் அலட்சியம் கூடவே கூடாது!

மருத்துவத்தில் அலட்சியம் கூடவே கூடாது!

கால்பந்து கனவுடன் துள்ளித்திரிந்த கல்லூரி மாணவி பிரியா, மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மாவட்ட, மாநில அளவிலான கால்பந்து போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடிய அனுபவம் கொண்ட பிரியா, மூட்டுவலி காரணமாக சென்னை கொளத்தூர்  பெரியார் நகர் அரசுப் புறநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் போட்ட கட்டு அவரது கனவையும் முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டது. ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்தி, ரத்த ஓட்டத்தையே தடை செய்யும் அளவுக்கு மிகவும் இறுக்கமாக அந்தக் கட்டு இருந்ததாக சுகாதாரத் துறை அமைச்சரே ஒப்புக்கொண்டிருக்கிறார். ரத்த ஓட்டம் தடைபட்டதால் உடல் உறுப்புகள் படிப்படியாகச் செயலிழந்து, ஒரு காலையும் இழந்து அந்த இளம் வீராங்கனை மரணமடைந்தார். 

இந்தியாவில் மருத்துவத் துறையில் காட்டப்படும் அலட்சியத்தால் உயிரிழந்தவர்கள், உறுப்புகள் செயலிழந்த நிலைக்குச் சென்றவர்கள் ஏராளம். சமீபத்தில், அண்டை மாநிலமான புதுச்சேரியின் காரைக்கால் பகுதியில், விஷம் கலந்த குளிர்பானத்தை அருந்திய சிறுவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்ததாகப் புகார்கள் எழுந்தன. சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தமிழகம் இதில் விதிவிலக்கல்ல. உரிய சிகிச்சை அளிக்காததால் கோமா நிலைக்குச் சென்றவர்கள், உயிரிழந்தவர்கள், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முறைப்படி செய்யப்படாததால் மீண்டும் கர்ப்பமடைந்த பெண்கள் என ஏராளமானோருக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு நீதிமன்றங்கள் உத்தரவிட்ட தருணங்கள் பல உண்டு. இத்தனைக்குப் பின்னரும் இந்த அலட்சியம், கவனக்குறைவு தொடர்வதுதான் வேதனை.

பிழைக்கவே மாட்டார் எனக் கைவிடப்பட்ட நோயாளி, சிறப்பான சிகிச்சை மூலம் காப்பாற்றப்பட்ட நிகழ்வுகள் தமிழகத்தில் பல முறை நடந்திருக்கின்றன. அரிய வகை பாதிப்புகளுக்குச் சிகிச்சை பெற தமிழகத்தின் அரசு மருத்துவமனைகளை நாடி வெளிநாடுகளிலிருந்தெல்லாம் நோயாளிகள் வருகிறார்கள். இப்படியான சூழலிலும், அலட்சியம் காரணமாக மருத்துவத் துறைக்கு அவப்பெயரைத் தேடித்தருபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதில் அரசு, தனியார் என்ற வேறுபாடுகள் இல்லை.

ஊடக கவனம் குவிந்திருக்கும் தருணங்களில்கூட இப்படியான மரணங்கள் நிகழ்கின்றன என்றால், எங்கோ ஒரு மூலையில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு நேரும் அவலங்கள் வெளிவராமலேயே போய்விடுகின்றன என்றே கருத வேண்டியிருக்கிறது.

குணப்படுத்தக்கூடிய நோய் அல்லது பாதிப்புக்குச் சிகிச்சை அளிப்பதில் ஒரு மருத்துவர் தவறிவிட்டால், அது ஒட்டுமொத்த சுகாதாரக் கட்டமைப்பின் தோல்வி என்றே கருதப்படும். இதுபோன்ற தவறுகள் நிகழும்போது அதன் பின்னே இருக்கும் காரணிகள் முழுமையாகக் கண்டறியப்பட வேண்டும். மனிதத் தவறுகள் நிகழாத துறை என எதுவும் இல்லை. ஆனால், உயிர்களைக் காக்கும் மருத்துவத் துறையில் அந்தத் தவறுகள் நிகழ்வது அதிக ஆபத்தானது. வட மாநிலங்களை ஒப்பிட தமிழகத்தில் சுகாதாரக் கட்டமைப்பு வலிமையானது என அடிக்கடிச் சொல்லிக்கொள்கிறோம். அந்தக் கூற்று அசைக்க முடியாதது என்பதை நிரூபிக்க அரசு நிர்வாகம் இன்னும் பல பணிகளைச் செய்தாக வேண்டும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in