மஞ்சப் பையால் நிகழட்டும் மனமாற்றம்!

மஞ்சப் பையால் நிகழட்டும் மனமாற்றம்!

பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில், ‘மீண்டும் மஞ்சப் பை’ இயக்கத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்திருப்பது பாராட்டத்தக்கது. முதல்வர் விரும்புவது போல, சுற்றுச்சூழலைப் பாதுகாப்போரின் அடையாளமாக மஞ்சப் பை மாற வேண்டும் என்றால், நாம் செய்ய வேண்டிய, தவிர்க்க வேண்டிய விஷயங்கள் ஏராளம்.

உலகிலேயே அதிக அளவில் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஒருமுறை மட்டும் பயன்படுத்தத்தக்க பிளாஸ்டிக் உற்பத்தியில் சீனா, அமெரிக்கா நாடுகளைத் தொடர்ந்து 3-வது இடத்தில் இருப்பது இந்தியாதான். எனவே, பல்வேறு மாநிலங்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடைசெய்வதாக அறிவித்துவருகின்றன. தமிழகத்திலும் தடை இருக்கிறது. எனினும், அதைச் செயல்படுத்துவதில் இருக்கும் சிக்கல்களால்தான் பிளாஸ்டிக் பொருட்களை நம்மால் முற்றாக விலக்கிவிட முடியவில்லை. தடை விதிக்கப்படாத அண்டை மாநிலங்களில் தயாராகும் பிளாஸ்டிக் பொருட்கள், தமிழகத்துக்குள் நுழைவதும் ஒரு முக்கியப் பிரச்சினை.

பாலித்தீன் பைகளை விட்டொழிக்க மலிவு விலையில் மாற்றுப் பொருட்களை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து தொடர்ந்து பேசப்பட்டுவந்த நிலையில், இந்தத் திட்டத்தை அரசு கொண்டுவருகிறது. இந்நிலையில், ஆரம்பகட்ட உற்சாகத்துடன் மட்டும் இது முடிந்துவிடக் கூடாது. சமூக அளவிலான மாற்றத்தின் மூலம்தான் இதைச் சாத்தியமாக்க முடியும். முதல்வர் சொல்வதுபோல, மஞ்சப் பை கிழிந்தால் வேறு வகைகளில் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். பிளாஸ்டிக் பொருட்கள் பூமியில் கலப்பதால் தீங்குதான் விளையும். மறுசுழற்சி முறையிலும் எதிர்பார்த்த பலனை எட்டிவிட முடியாது.

சிக்கிம், இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முழுவீச்சில் மேற்கொண்ட பிரச்சாரங்கள் மூலம் பிளாஸ்டிக் பயன்பாடு கணிசமாகக் குறைக்கப்பட்டது. அதை ஐநா சபையும் பாராட்டியது. அதேபோல, ‘மஞ்சப் பை’ திட்டமும் தீவிரமாக முன்னெடுக்கப்பட வேண்டும். முதல்வர் கூறியிருப்பதுபோல, அரசு மட்டுமல்ல, மக்களும் சுற்றுச்சூழல் குறித்த அக்கறையுடன் இதில் இணைந்துகொள்ள வேண்டும்!

ஓவியம்: முத்து

Related Stories

No stories found.