போதையின் கண்ணிகளை முழுவதுமாக நொறுக்குவோம்!

போதையின் கண்ணிகளை முழுவதுமாக நொறுக்குவோம்!
The Hindu

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் போதைப் பொருட்களின் ஊடுருவலும், அவற்றின் விற்பனையும், போதைக்கு அடிமையாவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் இந்தப் போக்கு தென்பட்ட போதிலும், தமிழகத்தின் நிலைமை கவலைக்குரியதாக மாறி வருகிறது.

போதைப் பொருட்கள் கைப்பற்றலும், அவை தொடர்பான கைதுகளும் தமிழகத்தில் அதிகரித்து வருவது, சந்தேகமின்றி அரசின் துரிதமான நடவடிக்கையை சுட்டிக்காட்டவே செய்கின்றன. சுங்கச் சாவடிகளில் சோதனைகளை அதிகரித்தது, மாநிலம் நெடுக காவல்துறை கண்காணிப்பினை பரவலாக்கியது, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவோர் மீதான சட்டபடியான நடவடிக்கைகள் உள்ளிட்டவை நம்பிக்கை அளிக்கவே செய்கின்றன.

போதைப் பொருள் கடத்துவோரின் சொத்துகளை பறிமுதல் செய்வது, காவல்துறையில் போதைப் பொருள் கடத்தலை கண்காணிக்கவும், மடக்கவும் உதவும் வகையிலான தனி ’நுண்ணறிவுப் பிரிவு’ உருவாக்குவது, போதைப்பொருள் கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது என அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கான அறிவிப்புகளும் ஆறுதல் அளிக்கின்றன.

The Hindu

அரசு முன்னெடுக்கும் இந்த முயற்சியில் சமூகத்தின் இதர அவயங்களும் தன்னார்வத்துடன் கைகோத்தாக வேண்டும். குறிப்பாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தையைக் கண்காணித்து நெறிப்படுத்துவதும், அவர்களுக்கான நேரத்தையும், அரவணைப்பையும் வழங்குவதும் இதில் முக்கியமாகிறது. பெற்றோர்களுக்கு நிகராக ஆசிரியர்களும் தங்களது கற்பித்தல் செயல்பாடுகளின் ஊடாக, சில நிமிடங்களேனும் ஒதுக்கி தன்மதிப்புக்கான கல்வியையும் புகட்டல் வேண்டும். அவ்வாறின்றி ‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற முழக்கமும், மாணவர்கள் மத்தியிலான ’போதை ஒழிப்பு உறுதிமொழி’யும் மட்டுமே தொடர்வது, கடமைக்காகவே கடந்து போகும். 

இளைய சமுதாயத்தின் மத்தியில் புரையோடிப் போயிருக்கும் போதைப் பழக்கத்தை ஒழிப்பது ஓரிரவில் நடந்து விடாது. போதைப்பொருள் பரவலின் கடத்தல், விநியோகம், விற்பனை, உபயோகம், அடிமையாதல் என கண்ணிகள் ஒவ்வொன்றாக உடைத்தாக வேண்டும். சட்டம் - ஒழுங்கு நடவடிக்கை, பெற்றோர் - ஆசிரியர் பங்களிப்பு, போதை மறுவாழ்வுக்கான சிகிச்சை என சகலமும் சேர்ந்தே போதை ஒழிப்பு நடவடிக்கை என்பதை முழுமையாக்க முடியும்.  

ஆனால், போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் இவை மட்டுமே போதுமா?

போதை என்ற பதத்தை உச்சரிக்கும்போதே நம் மனதில் மது அரக்கன் நிழலாடுவதையும் தவிர்க்க இயலாது. இளைஞர்கள் மத்தியில் ஒரு போதையே இன்னொரு போதைக்கு இட்டுச் செல்லக்கூடியது. மதுவில் விழுந்த இளைஞர்கள், அதன் அளவுக்கு காட்டிக்கொடுக்காத இதர போதைகளுக்கு நகரவும் செய்கிறார்கள். இதன் மறுபக்கத்தில், போதைப் பொருட்கள் சந்தையில் தட்டுப்பாடாகும்போது அதற்கு அடிமையானவர்கள், எளிதில் கிட்டும் மதுவுக்கு தாவ ஆரம்பிப்பார்கள்.

இதர போதைப் பொருள் உபயோகத்தின் அவலங்களோடு ஒப்பிடுகையில் எந்த வகையிலும் பாதிப்பில் குறைவில்லாதது மது! அரசே அதற்கான விற்பனை சந்தையில் இருப்பதால், போதை மதுவுக்கு எதிராக உச்சரிக்காது இருக்க முடியுமா?

The Hindu

”போதை என்பது அதனை பயன்படுத்தும் தனிமனிதனின் பிரச்சினை அல்ல. சமூகப் பிரச்சினை! போதைதான் கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு தூண்டுகோலாக இருக்கிறது” - போதைப் பொருள் தடுப்பு தொடர்பான மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு பதிவு செய்திருக்கிறார். எனவே, தற்போதைய போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் அங்கமாக, மதுவுக்கு எதிராகவும் தமிழக அரசு தனது பார்வையைத் திருப்பும் என நம்புவோம்.

போதையில்லா தமிழகத்துக்கான அரசின் முன்னெடுப்புகள் முழுமை பெற, மாநிலத்தில் பெருக்கெடுத்தோடும் மதுவுக்கும் அணை போட்டாக வேண்டும். டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைத்தல், எல்லா வயதினருக்கும் எளிதில் கிடைப்பதை கட்டுப்படுத்துதல், மதுவால் சீரழிந்தோருக்கான மறுவாழ்வு மையங்களை அதிகரித்தல், மதுவுக்கு எதிரான விழிப்புணர்வை தீவிரமாக்கல்... ஆகியவையும் தற்போதைக்கு தேவையே. இதர போதைப் பொருட்களுக்கு எதிரான ஒருங்கிணைந்த செயல்பாடு போலவே, மதுவுக்கு எதிராகவும் அரசு மட்டுமன்றி அனைத்து தரப்பினரும் திரள்வோம்.  

போதைப் பொருள் உபயோகத்தின் கண்ணிகளை முழுமையாக நொறுக்க, மது அரக்கனுக்கு எதிராகவும் நாம் கரம்கோப்பது காலத்தின் கட்டாயம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in