எல்ஜிபிடி சமூகத்தினரின் வாழ்வில் மாற்றம் நிகழட்டும்!

எல்ஜிபிடி சமூகத்தினரின் வாழ்வில் மாற்றம் நிகழட்டும்!
M_VEDHAN

சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்வதில் தமிழகம் பிற மாநிலங்களுக்கு ஒரு முன்னோடியாகவே திகழ்கிறது. பெண்களுக்குச் சொத்துரிமை, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக சட்டம் எனப் பல உதாரணங்களைச் சொல்லலாம். அந்த வகையில், இந்தியாவில் முதன்முறையாக எல்ஜிபிடி சமூகத்தினர் தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்ட கையேடும், அதுதொடர்பாக உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவும் கவனம் பெறுகின்றன.

இன்றும், பொதுப் பார்வையில் சங்கடங்களைச் சந்தித்துவரும் எல்ஜிபிடி சமூகத்தினரை, கண்ணியமான முறையில் நடத்துவதும் அவர்களுக்கான உரிமைகளைப் பாதுகாப்பதும் அரசின் கடமை. தமிழக அரசு அதை உணர்ந்திருப்பதன் அடையாளம், ‘திருநங்கை’, ‘திருநம்பி’ போன்ற பதங்களை அறிமுகப்படுத்தி மூன்றாம் பாலினத்தவரின் வாழ்க்கையில் முக்கியமான மாற்றத்தைத் தந்தது மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் ஆட்சியில்தான். தற்போது அவரது புதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் எல்ஜிபிடி சமூகத்தினர் தொடர்பான கையேடு தயாரிக்கப்படுவது நம்பிக்கையூட்டும் காலப் பொருத்தம்.

பால் புதுமையர் (queer), மருவிய பாலினத்தவர் (transgender), இடைப்பால் (intersex), தன்பாலீர்ப்பு ஆண் (Gay), தன்பாலீர்ப்பு பெண் (Lesbian) என ஆங்கில வார்த்தைகளுக்கு நிகரான வார்த்தைகளைத் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்துவரும் உயர் நீதிமன்றம், அரசு பரிந்துரைத்திருக்கும் இந்தச் சொற்களையே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படியே இந்தக் கையேடு உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஊடகங்கள், காவல் துறை, நீதிமன்றம், அரசு அலுவலகங்கள் எனப் பல்வேறு தளங்களில் இந்தப் பதங்கள் குறித்த ஓர் ஒருமித்த பார்வை இல்லை என்பதே நிதர்சனம். உதாரணத்துக்கு, Gay எனும் ஆங்கில வார்த்தைக்கு ஓரினச் சேர்க்கையாளர், தன்பாலின உறவாளர் என வெவ்வேறு பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றையெல்லாம் முறைப்படுத்தி ஒரே மாதிரியாக அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்துவது, இதுதொடர்பான குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் 377-வது பிரிவின்படி தன்பாலீர்ப்பு குற்றமாகக் கருதப்பட்டுவந்த நிலையில், அந்தச் சட்டப்பிரிவு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என 2018-ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு எல்ஜிபிடி சமூகத்தினருக்கு மிகப் பெரிய ஆறுதலைத் தந்தது. இந்த சட்டப்பிரிவின்படி 10 ஆண்டு சிறைத்தண்டனை கிடைக்கும் எனும் நிலை பல ஆண்டுகளாக நிலவிய சூழலில், எல்ஜிபிடி சமூகத்தினர் அந்தத் தீர்ப்பைக் கொண்டாடியதில் ஆச்சரியமில்லை. ஒருபக்கம் சட்டரீதியில் அச்சுறுத்தல், மறுபக்கம் சமூக ரீதியில் புறக்கணிப்பு, இழிவு போன்றவை தரும் வலி என வேதனையில் தவித்த எல்ஜிபிடி சமூகம் அந்தத் தீர்ப்பை ஒரு விடுதலைக்கான முதல் படியாகப் பார்த்தது.

இந்நிலையில், தமிழக அரசு மேற்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை மிகுந்த நம்பிக்கையளிக்கிறது. அதேசமயம், எல்ஜிபிடி சமூகத்தினர் மத்தியில் இது தொடர்பாக சில மாற்றுக்கருத்துகளும் நிலவுகின்றன. அவற்றை அரசு பரிசீலித்து உரிய மாற்றங்களைச் செய்ய வேண்டும். எல்ஜிபிடி சமூகத்தினரின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், சட்ட நிபுணர்கள் என அனைவரின் ஒத்துழைப்புடன் இதை மேற்கொள்ள வேண்டும். எல்ஜிபிடி சமூகத்தினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான வரைவு விதிகள், கொள்கை வரைவு போன்றவற்றை உருவாக்க வேண்டிய பணிகளைத் தமிழக அரசு விரைந்து முடிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதிலும் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்.

உயர் கல்வி, அரசு வேலை, சமூகத்தில் அங்கீகாரம் என எல்ஜிபிடி சமூகத்தினர் தொடர்பாக அவ்வப்போது ஆக்கபூர்வமான செய்திகள் வெளியாகவே செய்கின்றன. அப்படியான மாற்றங்கள் அதிகரிக்கட்டும். அதற்கு அரசின் நடவடிக்கைகள் துணை நிற்கட்டும்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in