டாஸ்மாக் வருமானம் தவிர்த்த தமிழக அரசு சாத்தியமாகட்டும்!
“டாஸ்மாக் வருமானத்தில் தமிழக அரசு செயல்படவில்லை” என அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்லி இருப்பது பல புதிய விவாதங்களுக்கு வித்திட்டிருக்கிறது.
அரசே மது விற்கும் அவலத்திலிருந்து மீண்ட தமிழ்நாடு என்பது தமிழக மக்களின் நெடுநாள் கனவாகவே நீடிக்கிறது. அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கும், அரசு ஊழியர்களின் ஊதியத்துக்கும் டாஸ்மாக் வருமானமே ஆதாரம் என்ற, முந்தைய விளக்கங்கள் பொதுமக்களை முகம் சுழிக்கச் செய்திருக்கின்றன.
அரசின் வருமானத்தை பெருக்குவதற்கு எத்தனையோ ஆதாரங்கள் இருக்கையில், விஷப் பரீட்சையான மது விற்பனையை அரசு சார்ந்திருப்பதற்கு, அனைத்துக் கட்சிகளும் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும்போது கண்டித்தே வந்திருக்கின்றன. அரசு தரப்பிலான மதுவிலக்கு அமலும், அரசியல்வாதிகள் நடத்தும் மது ஆலைகள் மூடல் குறித்தும் அவ்வப்போது உத்திரவாதங்களும் விடுக்கப்பட்டிருக்கின்றன. தேர்தல் வாக்குறுதிகளிலும் மதுவிலக்கு இடம்பெற்றிருக்கிறது.
ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்றதும், வருமானம் கொழிக்கும் வழியாக மது விற்பனையை சரணடைவதும், அதற்கு இலக்குகள் நிர்ணயிப்பதும், இதர உபாயங்களில் விற்பனையை பரவலாக்க முயல்வதும், வாக்களித்தவர்கள் மத்தியில் ஏமாற்றத்தையே விதைத்திருக்கின்றன. வீதிதோறும் மதுக்கடைகளை செயல்படவிட்டு, அரசு தரப்பிலான போதை ஒழிப்புக்கான பிரச்சாரமும், நடவடிக்கைகளும் நகைமுரணாகியும் வருகின்றன.
இந்தச் சூழலில், “டாஸ்மாக் வருமானத்தை நம்பி அரசை நடத்த வேண்டிய அவசியமில்லை” என துறை அமைச்சர் தெரிவித்திருப்பதை, ஆரோக்கியமான தொடக்கமாக அடையாளம் கொள்ளலாம். உடனடியாக பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை என்றபோதும், படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடுவதும், இதர விற்பனை உபாயங்களை தவிர்ப்பதும் மக்கள் மத்தியில் நம்பிக்கையைக் கூட்டச் செய்யும்.

அது மட்டுமன்றி, மதுவுக்கு அடிமையான 2 தலைமுறையினரை மீட்பதிலும், மதுவால் கிடைத்த வருமானத்தில் சற்று ஒதுக்க வேண்டும். உள்ளுறுப்புகள் முதல் உளநலன் வரை பாதிப்புக்கு ஆளாகி, குடும்பத்தின் எதிர்காலத்தை தொலைத்திருக்கும் போதை அடிமைகளின் மீட்புக்கான நடவடிக்கைகளை அரசே முன்னெடுக்க வேண்டும்.
மது விற்பனை என்னும் அசுரக் கரங்களிலிருந்து அரசு தன்னை நிதானமாக விடுவித்துக் கொள்வதுடன், மாற்று வழிகளில் வருவாயை பெருக்குவதிலும் தொலைநோக்கு அடிப்படையில் செயல்பட வேண்டும். ஆனால், அதிகமானோரால் பரிந்துரைக்கப்படும் கனிம வளங்களை அளவுக்கு மீறி வெட்டியெடுப்பதும், அவற்றில் வர்த்தக நோக்கில் பயன்பெறுவதும், அடுத்து வரும் தலைமுறையினருக்கு பாதகம் விளைவிக்கும். உயிரினப் பன்மைக்கு உலைவைப்பதாக மாறும். எனவே, தாய்மடியான இயற்கை வளங்களை சுரண்டுவதற்கு அப்பால், நவீன தொழில்நுட்பங்களுக்கும், வேலைவாய்ப்புக்கும் ஆதாரமானவற்றில், அரசு வருமானத்துக்கான ஆதாயங்களை தேடலாம். இவையே மக்களுக்கும், அரசுக்கும் பலவகையிலும் அனுகூலம் சேர்க்கும்.
அனைத்துக்கும் முதல்படியாக, மது வருமானத்திலிருந்து அரசு எந்திரம் தன்னை படிப்படியாக துண்டித்துக்கொள்வதை உடனடியாக தொடங்கட்டும். இவை நாளது தமிழகத்தின் புரட்சிகர நடவடிக்கையாக வரலாற்றிலும், மக்கள் மனதிலும் நீங்காத வகையில்; ஆட்சியாளர்களும் அவர்களது சாதனைகளும் இடம்பெற வாய்ப்பாகும்!