சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்!

சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்!

‘சட்டம் - ஒழுங்குதான் அரசு நிர்வாக அமைப்பு எனும் உடலமைப்புக்கான மருந்து; உடலில் நோய் ஏற்பட்டால் மருந்து நிச்சயம் செலுத்தப்பட வேண்டும்’ என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் கூற்று. அந்த வகையில், சட்டம் - ஒழுங்கு பிரச்சினை குறித்து தமிழக அரசு தனித்த அக்கறை காட்டத் தொடங்கியிருப்பது ஆக்கபூர்வமான நகர்வு.

சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த மாவட்ட ஆட்சியர்கள், காவல் அதிகாரிகள் மாநாட்டில் நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் ஒலித்திருக்கின்றன. “சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகளில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள், கள நிலவரத்துக்கேற்ப, சட்ட வரம்புக்குட்பட்டு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை அவர்களாகவே மேற்கொள்ள வேண்டும். ஆணை வர வேண்டுமென்று எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியதில்லை” என்று முதல்வர் பேசியிருப்பது அவற்றுள் ஒன்று.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை முறையாகக் கடைப்பிடித்தாலே பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டுவிடலாம். காவல் துறையினர் தங்கள் கடமையை முறையாகச் செய்ய முடியாத அளவுக்கு, அரசியல் ரீதியான அழுத்தங்களுக்கு ஆளாவதும் தடுக்கப்பட வேண்டும். அத்துடன், காவல் துறையை அணுகுவதால் சிக்கல்கள் ஏற்படும் என்று சாமானிய மக்கள் மனதில் இருக்கும் தவறான எண்ணத்தையும் போக்கவேண்டும்.

குற்றவாளிகள் கைதின்போது காட்டப்படும் தீவிரம், குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வாங்கிக்கொடுக்கும் வரை நீடிப்பதில்லை என்பது பொதுவான குற்றச்சாட்டு. இதுபோன்ற குறைகளைக் களைய காவல் துறையினர் சட்ட நுணுக்கம் சார்ந்த பயிற்சிகளையும் எடுத்துக்கொண்டாக வேண்டும்.

சட்டம் - ஒழுங்கு நிலவரத்தை வைத்துத்தான் மக்கள் ஓர் அரசைப் பற்றிய மதிப்பீட்டைச் செய்கிறார்கள் என முதல்வர் சரியாகக் குறிப்பிட்டிருக்கிறார். வெறுமனே வார்த்தைகளுடன் நின்றுவிடாமல், இவ்விஷயத்தில் நீடித்த அக்கறை காட்டப்பட்டால், குற்றங்கள் களையப்பட்டு வளர்ச்சிப் பணிகளில் தமிழகம் இன்னும் பல சாதனைகளைச் செய்ய முடியும்!

ஒவியம்: முத்து

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in